எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது" (சங்கீதம் 103:5) என்ற வசனத்தை தியானிப்போம். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம் இது!

ஆண்டவர் உங்கள் வாயை நன்மையினால் திருப்தியாக்குகிறார். இந்த ஆசீர்வாதம் எங்கேயிருந்து வருகிறது? வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து இந்த ஆசீர்வாதத்தை தருகிறார் (சங்கீதம் 134:3). "கர்த்தர் நன்மையானதைத் தருவார்" (சங்கீதம் 85:12) என்றும் வேதம் கூறுகிறது. ஆண்டவர் யாருக்கு இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை தருகிறார்? "நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்" (நீதிமொழிகள் 13:21) என்றும், "தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறது" (எஸ்றா 8:22) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். நாம் எவ்வளவாய் ஆண்டவரை தேடுகிறோம் என்று இன்றைக்கு நம் வாழ்க்கையை ஒரு கணம் சீர்தூக்கிப் பார்ப்போம். நீங்கள் அவரை அதிகாலையில் தேடுகிறீர்களா? தாவீது தேவனுடைய மனுஷனாயிருந்தான். அவன் ஆண்டவரால் பூரணமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். அவன், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" என்று கூறினான். 23ம் சங்கீதம் முழுவதுமே, தேவனுடைய நன்மையையும் கிருபையையும் பற்றி கூறுகிறது. அவன் தேவனை உத்தமமாய் தேடினதால், தன் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெற்றுக்கொண்டான்.

அன்பானவர்களே, நாமும் முழு இருதயத்தோடும் ஆண்டவரை தேடுவோம். தினமும் காலையிலும், பகலிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் முன்பும் உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை தேடுங்கள். அவர் நன்மையினால் உங்கள் வாயை திருப்தியாக்குவார். "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" (யோவான் 11:40) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, முன்னேறிச் செல்ல முடியவில்லை என்று நீங்கள் உணரும் பெலவீனமான தருணங்களில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவரே உங்கள் பெலன் என்று அறிக்கை செய்யுங்கள். நீங்கள் ஆண்டவரை தேடும்போது அவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பெலனையும், வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் தந்தருளுவார். "அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்" (சங்கீதம் 92:15) என்று வேதத்தில் வாசிக்கிறோம். இப்போது, ஆண்டவரிடமிருந்து சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம். நாம் ஜெபிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் வாயை நன்மையினால் நிரப்புவதாக வாக்குப்பண்ணுகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். அதிகாலையிலும், நாள் முழுவதும் உம்மை முழு இருதயத்தோடும் தேடும் கிருபையை எனக்கு தந்தருளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்மை என் வாழ்வின் மையத்தில் வைத்திருக்கவும், வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உம்முடைய சித்தத்தை நிறைவேற்றவும் விரும்புகிறேன். உம்மை உண்மையாய்த் தேடவும், நாளுக்கு நாள் உம்மை கிட்டிச்சேரவும் எனக்கு உதவி செய்யும். உம்முடைய பார்வையில் நான் நீதிமானாய் / நீதியுள்ளவாய் காணப்படும்படி, உம்முடைய நீதியை எனக்கு உடுத்துவியும். உம்முடைய நன்மையும் கிருபையும் என்னை தொடரும்படி செய்வீர் என்றும், நற்சுகத்தினாலும், பெலத்தினாலும், பரலோக ஆசீர்வாதங்களாலும் என் வாழ்க்கையை அலங்கரிப்பீர் என்றும் விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.