அன்பான தேவ பிள்ளையே, இன்றைய தினம் உங்களுக்கு சந்தோஷமானதாகவும் ஆசீர்வாதமானதாகவும் அமைவதாக. இன்றைக்கு தேவன் உங்களை விசேஷித்தவண்ணம் புதியவிதத்தில் ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு என் பேரன் சாமுவேலும் அவன் மனைவி ஷில்பாவும் தங்கள் ஆறாவது திருமண ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றனர். தேவன்தாமே அவர்கள்மேல் புதியதும் ஆச்சரியமானதுமான முறையில் தம் ஆசீர்வாதத்தை பொழிந்தருளுவாராக. இன்றைக்கு தங்கள் திருமண ஆண்டு நிறைவை, பிறந்தநாளை அல்லது மற்ற முக்கிய நாட்களை கொண்டாடும் அனைவரையும் தேவன் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக.
இன்றைக்கு, "அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்" (ஓசியா 6:3) என்ற வசனத்தை தியானிப்போம். ஏற்ற காலத்தில் மழை பெய்தால் அது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கிறதல்லவா! அவ்வாறே ஆண்டவர் உங்கள் வாழ்வில் அவரது பரிபூரண ஆசீர்வாதத்தின் மழை பெய்யும்படி செய்வார்.
தேவன் ஆபிரகாமை சகலவிதங்களிலும் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 24:1). கர்த்தரை உண்மையாய்த் தேடினதினால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டான். அவ்வாறே யாக்கோபைக் குறித்தும் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 32:26). அவன் தன்னை தேவனுக்கு முற்றிலும் அர்ப்பணித்து, முழங்காற்படியிட்டு, "கர்த்தாவே, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடமாட்டேன்," என்று ஜெபித்தான். நாமும் இவ்வாறே இடைவிடாமல் விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும். தேவனோடு பேசுங்கள்; அவரோடு நடங்கள்; அவருடைய வழிநடத்துதலையும் ஆசீர்வாதங்களையும் கேளுங்கள்.
நாம் அவ்வாறு ஜெபிக்கும்போது என்ன நடக்கிறது? "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" (ஏசாயா 26:3) என்று வேதம் கூறுகிறது. யாக்கோபு, தேவனை தன் அருகில் வைத்திருப்பதற்கு எப்போதும் கவனமாயிருந்தான். அவனுடைய உண்மையினிமித்தம், தேவன் அவனுக்கு இஸ்ரவேல் என்னும் புதுப்பெயரை அளித்தார். இன்றும் முழு தேசமுமே அவன் பெயரைக் கொண்டதாக இருக்கிறது. இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!
அன்பானவர்களே, நீங்களும் ஆண்டவரை முழு உள்ளத்துடன் தேடினால், அவரது பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்போதே ஜெபித்து இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்களா? ஆண்டவரின் கரம் உங்களை வழிநடத்தட்டும்; அவரது சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளட்டும்; அவரது ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்வில் நிரம்பி வழியட்டும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஜீவனை தரும் மழையைப் போன்ற உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களை தருவதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆபிரகாமைப் போல உம்மை உண்மையாய் தேடவும், யாக்கோபைப் போல என்னை முற்றிலும் உமக்கு அர்ப்பணிக்கவும் எனக்குப் போதித்தருளும். இடைவிடாமல், உறுதியான விசுவாசத்துடன் ஜெபிப்பதற்கு என் இருதயத்தை பெலப்படுத்தும். ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதிக்கும்வரையில், என்னை வழிநடத்துகிறவரையில் உம்மை விடமாட்டேன். நான் எப்போதும் உம்மையே உறுதியாய் நம்புகிறபடியினால், உம்முடைய பூரண சமாதானத்தால் என் உள்ளத்தை நிரப்பும். உம்முடைய நித்திய உண்மையை நம்பி, எப்போதும் உம்மோடு நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். என்மேலும் எனக்கு அன்பானோர்மேலும் உம்முடைய ஆசீர்வாத மழையை ஊற்றியருளும். என் வாழ்க்கையில் உம்முடைய மகிமை காணப்படட்டும்; உம்முடைய பரிசுத்த நாமம் மகிமையடையட்டும் என்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.