எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17) என்ற அருமையான வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். நன்மையான ஈவுகள் அனைத்தும் சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகிறது என்று இந்த வசனம் கூறுகிறது.
ஆம், அன்பானவர்களே, அது உங்களுக்கு வருகிறது. நீங்கள், இருளில் இருப்பதாக, உங்களுக்கு உதவி செய்வதற்கு யாருமில்லை என்று, நீங்கள் இருக்கும் பெரிய பிரச்னையிலிருந்து வெளியே வருவதற்கு வழியே இல்லை என்று கூறலாம். கவலை உங்களை அரித்துக்கொண்டிருக்கலாம். "என் வாழ்க்கையை நான் முடித்துக்கொள்ளலாமா? அது மட்டும்தான் ஒரே வழியா?" என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் பிரச்னையில் சிக்கியிருக்கிறீர்களா? "நன்மையான எல்லா ஈவுகளும் சோதிகளின் பிதாவிடத்தினிலிருந்து வருகிறது" என்ற வாக்குத்தத்தத்தை மறந்துபோகாதிருங்கள். அதற்கு நீங்கள் தேவனுடைய நெருங்கிய உறவை பாராட்டவேண்டும். நீங்கள் விசுவாசித்தால் பெரிய ஆசீர்வாதங்களை காண்பீர்கள். "கர்த்தர் நன்மையானதைத் தருவார்" (சங்கீதம் 85:12) என்று வேதம் கூறுகிறது.
தேவனுடைய நன்மையை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும்? "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று தாவீது கூறுகிறான். ஆம், பலவித கவலைகளால் பாரப்பட்டிருக்கிற உங்களுக்கும் இப்படியே நடக்கும். தேவனைப் பற்றிக்கொண்டு, அவரை உங்களுக்கு மேய்ப்பராக்கிக்கொள்ளுங்கள். எப்போதும் அவரையே நோக்கிப் பாருங்கள்; அவர் உங்கள் வாழ்க்கையை நன்மையினாலும் கிருபையினாலும் நிரப்புவார் (சங்கீதம் 23:6). மனம் கலங்காதிருங்கள். தேவனை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அவரது கிருபை உங்கள் வாழ்வில் பாய்ந்து வருவதைக் காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்மிடமிருந்து நன்மையும் பூரணமுமான எல்லா ஈவுகளும் வரும் என்று வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, அந்தகாரத்தின், பயத்தின் நாட்களில், நம்பிக்கை இழந்துபோகாமல் உம்மையே பற்றிக்கொள்வதற்கு உதவி செய்யும். என் வாழ்நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னை தொடரட்டும். ஆண்டவரே, எனக்கு மேய்ப்பராயிருந்து, புல்லுள்ள இடங்களுக்கும், அமர்ந்த தண்ணீர்களண்டைக்கும் என்னை நடத்துவீராக. கவலை, பயம், வருத்தம் ஆகிய எல்லா பாரங்களையும் என்னை விட்டு அகற்றும். எனக்கு தேவையானவை எல்லாவற்றையும் நீர் அருளிச்செய்வீர் என்ற நிச்சயத்தாலும், சமாதானத்தினாலும் என்னை நிரப்பும். எல்லா உபத்திரவங்களுக்கும் என்னை நீங்கலாக்கி, உம்முடைய மகிமையான ஒளியினிடத்துக்கு நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன். மாறாத உம் அன்புக்காகவும், பூரண ஆசீர்வாதங்களை நீர் அருளுகிறதற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.