எனக்கு அன்பான தேவ பிள்ளையே, உங்களை நேர்த்தியானவிதத்தில் ஆசீர்வதிப்பதற்கு ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார் என்பதை தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்கு அதிக மகிழ்ச்சி. "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" (யோவான் 14:26) என்று வேதம் கூறுகிறவண்ணம், புதிதும், ஆச்சரியமுமான வழியில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
அன்பானவர்களே, இன்றைக்கு ஆச்சரியமானதும் சிறந்ததுமான ஒரு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா " (லூக்கா 11:13) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வாக்குத்தத்தத்தின்படி, ஆண்டவர், பரிசுத்த ஆவியானவரை தந்து உங்களை ஆசீர்வதிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவர் யார்? "கர்த்தரே ஆவியானவர்" (2 கொரிந்தியர் 3:17) என்று வசனம் இதை வெளிப்படுத்துகிறது. ஆண்டவர்தாமே, பரிசுத்த ஆவியானவர் ரூபத்தில் உங்கள் வாழ்க்கைக்குள் பிரவேசித்து, தம்முடைய மகிமைக்காக நீங்கள் பிரகாசிக்கும்படி செய்வார். "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44:3) என்று கர்த்தர் இதை உறுதிப்படுத்துகிறார்.
என் வாழ்க்கையிலிருந்து ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். என் கணவர், 1962ம் ஆண்டில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றார். தன்னுடைய அசாதாரணமான அனுபவங்கள் எல்லாவற்றையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொள்வார். அப்போதுதான், அதிக பாடுகளைப் பட்ட பிறகு, தேவன், அழகிய ஆண் குழந்தையை, பால் தினகரனை தந்து எங்களை ஆசீர்வதித்தார். இந்த பெரிய ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகும் எங்கள் உள்ளங்கள் தேவனுக்காய் அதிகம் ஏங்கின. பரிசுத்த ஆவியானவர்மேல் தீவிர தாகம் என் இருதயத்தை நிரப்பியது. "நான் எப்படி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வது?" என்று என் கணவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். குழந்தை பிறந்ததினால் என் தாயாருடன் இருந்தேன். அப்போது, ஆண்டவரை என் முழு இருதயத்தோடும் தேட ஆரம்பித்தேன். இரவெல்லாம் முழங்காற்படியிட்டு, அவரை நோக்கிக் கூப்பிட்டேன். "எனக்கு பரிசுத்த ஆவியை தந்தருளும். இல்லையெனில் நான் சாகட்டும்," என்று தேவனை நோக்கிக் கெஞ்சினேன். ஆண்டவர், என்மேல் அதிக இரக்கம் காண்பித்து, என் கூப்பிடுதலைக் கேட்டு பரிசுத்த ஆவியினால் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இதே ஆசீர்வாதம் இன்றைக்கு உங்களுக்கும் காத்திருக்கிறது. "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்," என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது. நான் ஆண்டவரிடம் கேட்டேன். அவர் எனக்கு உத்தரவு அருளினார். இன்றைக்கு இந்த 86 வயதிலும் நான் அவருக்கு ஊழியம் செய்து வருகிறேன்; பரிசுத்த ஆவியின் வல்லமை என்னை தாங்குகிறது. உங்களுக்கு எத்தனை வயதாயிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் வேண்டுமென நீங்கள் கேட்கலாம். இப்பொழுதே இந்த விலையேறப்பெற்ற ஈவை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதான விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? கேளுங்கள், தேவனுடைய மகிமையான வல்லமையினால்மறுரூபமாக்கப்பட ஆயத்தமாகுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, வாஞ்சையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். கேட்கிறவர்கள் அனைவர்மேலும் பரிசுத்த ஆவியை ஊற்றுவதாக வாக்குப்பண்ணியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த விலையேறப்பெற்ற ஈவை இன்றைக்குப் பெற்றுக்கொள்வதற்காக என் உள்ளத்தை திறக்கிறேன். உம்முடைய ஆவியினால் என்னை நிறைத்து, உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தும். எல்லாவற்றையும் எனக்குப் போதித்து, உம்முடைய பரிசுத்த வார்த்தைகளை எனக்கு நினைவுப்படுத்தும். என் ஆவிக்குரிய தாகத்தைத் தீர்த்து, என் வாழ்க்கையை உம்முடைய மகிமைக்கேற்ற பாத்திரமாக்குவீராக. என்னையும் என் குடும்பத்தையும் உம்முடைய பிரசன்னத்தினாலும் வல்லமையினாலும் ஆசீர்வதித்தருளும். என் வாழ்க்கையை நீர் மறுரூபப்படுத்துவீர் என்று அறிந்து விசுவாசத்தில் நடந்திட எனக்கு உதவி செய்யும். உம்முடைய அன்புக்காகவும், கிருபைக்காகவும், முக்கியமாக விலையேறப்பெற்ற ஈவாகிய உம்முடைய பரிசுத்த ஆவிக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.