அன்பானவர்களே, இன்றைக்கு, "ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும்... நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானியேல் 12:3) என்ற வசனத்தை தியானிப்போம். நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருந்தால், வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரத்தைப்போல பிரகாசிப்பீர்கள்.

ஞானம் என்பது என்ன? "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது" (யாக்கோபு 3:17) என்று வேதம் கூறுகிறது. அநேகவேளைகளில் நாம் அறிவையும் ஞானத்தையும் குழப்பிக்கொள்கிறோம். என்ன பேசவேண்டும் என்று அறிந்திருப்பது அறிவாகும்; அதை எப்போது பேசவேண்டும்? பேசலாமா, கூடாதா என்று அறிந்திருப்பது ஞானம் ஆகும்.

வேதாகமத்தில் இயேசுவின் ஞானத்தை நாம் பார்க்கும்போது, அது ஜனங்கள் அவரிடம் வந்து அவர் பேசுவதை கவனிக்கும்படி அவர்களை ஈர்த்ததை காணலாம். ஜனங்கள் வனாந்திரத்திற்கு வந்து அவர் பேசுவதை கேட்குமளவுக்கு ஈர்ப்பானவிதத்தில் அவர் தேவனுடைய வார்த்தையை அறிவித்தார்.  

அவரது வார்த்தைகளைக் கேட்க ஆயிரமாயிரமாய் ஜனங்கள் கூடிவந்தனர். ஜனங்கள் புரிந்துகொள்ளுமளவுக்கு அவர் கதைகளைக் கூறினார். "கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்" (1 கொரிந்தியர் 1:24) என்றும், "அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" (கொலோசெயர் 2:3) என்றும் வேதம் கூறுகிறது. நமக்கு வல்லமையையும் ஞானத்தையும் அறிவையும் தருகிற இயேசு நம் வாழ்வில் தங்கும்படியாக இன்றைக்கு ஜெபிப்போம்.

நம்மை மக்கள் புண்படுத்தும்போது, நம்மிடமிருந்து பதிலை எதிர்பார்க்கும்போது அல்லது நம்மை வழிகாட்டும்படி கேட்கும்போது, நாமே பேசக்கூடாது. ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்கள் அடங்கியிருக்கிற இயேசுவிடம் செல்லவேண்டும். என்ன சொல்வதென்று தெரியாமல் திகைக்கும்போது, தேவன் உங்களுக்குப் போதிப்பார். அவர் ஏற்ற வார்த்தைகளை உங்களுக்குத் தருவதுடன், அவற்றை பேசுவதற்கான திடநம்பிக்கையையும் அளிப்பார்.

ஒருவேளை நீங்கள் காரியங்களை விளக்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்கலாம்; முக்கியமானவர்களை சந்திக்கவேண்டியதிருக்கலாம்; உங்களைப் புண்படுத்துகிறவர்களிடம் பேசவேண்டிய நிலை இருக்கலாம். இன்றைக்கு தேவன் உங்களுக்கு ஞானத்தை தருவார். நீங்கள் எதைக் கூறவேண்டும்; எதைக் கூறக்கூடாது என்று அறிந்துகொள்ளும் அறிவை அவர் உங்களுக்குத் தருவார். "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்" (யாக்கோபு 1:5) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, வானத்தில் நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பதற்கான ஞானத்தை இன்றைக்கு தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய ஞானத்தைத் தேடி இன்றைக்கு உம் முன்னே வருகிறேன். உறவுகள் மத்தியிலும், வேலை செய்யுமிடத்திலும், என்னை புண்படுத்துகிறவர்களிடமும் எதை பேசுவது அல்லது எப்படி சூழ்நிலைகளை கையாள்வது என்று குழம்பிப்போகிறேன். ஏற்ற வார்த்தைகளை பேசும்படியும், சரியான செயல்களை செய்யும்படியும், செய்கிறவற்றில் உண்மையாயிருக்கவும் என்னை உம்முடைய தெய்வீக ஞானத்தினால் நிறைத்தருளும். ஆண்டவரே, நீரே ஞானத்தைத் தருகிறவர்; ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்களெல்லாம் உமக்குள் அடங்கியிருக்கின்றன. இன்றைக்கு உம்முடைய பிரசன்னத்தை நான் நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளவும், என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொருள்நிறைந்ததாக, அன்பானதாக, ஞானமானதாக இருக்கவும் உதவி செய்யும். எப்போதும் உம்முடைய ஞானத்தில் நடக்கும்படி என்னை பழக்குவித்து, ஆசீர்வதித்து வழிநடத்தியருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.