அன்பானவர்களே, இன்றைக்கு, "...கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால்... உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது" (மத்தேயு 17:20) என்ற வசனத்தை தியானிப்போம். மத்தேயு 17ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தில் இந்த சத்தியத்தை நாம் காண்கிறோம். ஒரு மனுஷன் இயேசுவிடம் வந்து, "என் மகன் அலைக்கழிக்கிற ஆவியினால் மிகவும் கஷ்டப்படுகிறான். தீக்குள்ளும் தண்ணீருக்குள்ளும் விழுகிறான். அவனுக்கு விடுதலை வேண்டும். அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டு வந்தேன். அவர்களால் அவனை சுகப்படுத்த இயலவில்லை," என்று கூறினான். இயேசு பிசாசை கடிந்துகொண்டார். உடனே, அது அந்தப் பையனை விட்டு வெளியேறியது. அப்போதே அவன் சுகமானான். பிறகு, இயேசுவின் சீஷர்கள் தனியே அவரிடம் வந்து, "எங்களால் ஏன் அதை துரத்த முடியவில்லை?" என்று கேட்டார்கள். இயேசு, "உங்கள் அவிசுவாசத்தினால்தான் கூடாமற்போயிற்று. உங்களுக்கு கடுகுவிதையளவு விசுவாசமிருந்தால், மலையைப் பார்த்து பெயர்ந்து போ என்று கூறினால், அது நகர்ந்துபோகும். உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது," என்றார்.
நமக்கு இப்படிப்பட்ட, அவரை முழுவதுமாய் நம்புகிற விசுவாசம் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். வாழ்க்கையில் காணப்படுகிற மலைகளை நாம் பார்த்து, நகர்ந்துபோகும்படி கட்டளை கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடவேண்டும் என்று விரும்புகிறார். அப்போது அவை நகர்ந்துபோகும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்காக எவ்வளவு பிரயாசப்படுகிறார்கள் என்று பார்க்கிறோம். அவர்களைப் படிக்க வைப்பதற்கு சிரமப்படுகிறார்கள்; கல்விக்கான கட்டணத்தை செலுத்துகிறார்கள்; சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கிறார்கள்; நன்கு பாடம் சொல்லி தருகிறார்கள். இவை எல்லாம் செய்த பிறகும், பிள்ளை குறும்பு செய்தால் அல்லது தேர்வில் தோல்வியடைந்தால், பெற்றோர் மனமுடைந்து, "எவ்வளவோ பயிற்சி கொடுத்தேன். எல்லாவற்றையும் சொல்லி கொடுத்தேன். ஆனால் என்ன பயன்?" என்று கவலைப்படுகிறார்கள்.
அதுபோலவே, இயேசு, "நான் இவர்களுக்கு எத்தனையோ அற்புதங்களை காண்பித்தேன். அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியவற்றையெல்லாம் போதித்தேன். எல்லா வழிகளிலும் பயிற்சி கொடுத்தேன். ஆனாலும் அவர்கள் ஏன் விசுவாசிக்கவில்லை?" என்று நினைப்பார். கடுகுவிதையைப் போன்று சிறிதளவாவது விசுவாசம் கொண்டிருக்கும்படி தேவன் நம்மிடம் கூறுகிறார். மாற்ற முடியாது என்பதுபோன்ற சூழ்நிலை - சுகப்படுத்த முடியாத வியாதி, கிடைக்க தவறிக்கொண்டே போகும் வேலை, தாமதமாகும் பணியிட மாறுதல், கிடைக்காத அனுமதி, தேடியும் தென்படாத வாழ்க்கை துணை என்று ஏதாவது சூழ்நிலை இருக்கலாம். உங்களுக்கு கடுகுவிதையளவு கொஞ்சம் விசுவாசம் இருந்தாலும், வாழ்வில் காணப்படும் இதுபோன்ற மலைகள் நகர்ந்துபோகும். நீங்கள் காத்திருப்பவற்றை பெற்றுக்கொள்வீர்கள்; வாழ்வில் அற்புதங்களை அனுபவிப்பீர்கள்.
இன்றைக்கு, இருதயத்தில் சந்தேகத்தோடும், கேள்வியோடும் அல்ல; அசையாத விசுவாசத்தோடு, இயேசுவின் வல்லமையை உறுதியாக நம்பி ஜெபிப்போம். நம் வாழ்வில் காணப்படும் மலைகள் நகர்ந்துபோகும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்ற விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு இப்போது ஜெபிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய மகத்தான வல்லமையின் மீது நம்பிக்கை வைத்து, விசுவாசம் நிறைந்த இருதயத்தோடு உம்மிடம் வருகிறேன். என்னுடைய விசுவாசம் கடுகுவிதையளவு சிறியதாக இருந்தாலும், உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். என் வாழ்வில் காணப்படும் மலைகளை, தாமதங்களை, நான் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற சூழ்நிலையை நீர் பார்க்கிறீர். இவற்றுள் நீர் இடைப்படவேண்டும் என்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, இந்த மலைகளை நகர்த்தும்; சுகத்தை, வேண்டியவற்றை, அற்புதங்களை எனக்கு அருளிச்செய்யும். உம்முடைய அன்பையும் வாக்குத்தத்தங்களையும் நான் ஒருபோதும் சந்தேகியாதபடி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். நான் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாக உம்மால் கிரியை செய்ய முடியும் என்று அறிந்து, என் கவலைகள் எல்லாவற்றையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். உம்மால் எல்லாம் கூடும் என்று அறிக்கையிட்டு, உம்முடைய இரக்கத்திற்காகவும் வல்லமைக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.