அன்பானவர்களே, ஆண்டவர்தாமே உங்களுக்கு பாதுகாப்பாக விளங்குவார். "அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்" (சங்கீதம் 91:4) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளே உங்களுக்கு தாபரமாகும். பறந்து காக்கும் பட்சி செட்டைகளை விரித்து எருசலேமின்மேல் அசைவாடுவதுபோல, ஆண்டவர், "நான் உன்னை பாதுகாப்பேன். உன்மேல் அசைவாடுவேன். உனக்கு கேடகமாக விளங்குவேன். உன் ஆத்துமாவை, உன் பொருளாதாரத்தை, உன் குடும்ப வாழ்க்கையை, உன் நற்பெயரை, உனக்கு நான் கொடுத்திருக்கும் கல்வியை, வேலையை, வியாபாரத்தை, ஊழியத்தை, உறவுகளை பாதுகாப்பேன். நீயே எனக்கு எருசலேமாக விளங்குவாய். நான் உனக்குள் வாசம்பண்ணுவேன்; உன்னோடு தங்குவேன். உன்னை காத்துக்கொள்ளுவேன்," என்று கூறுகிறார். மேலும் அவர், "கழுகு செட்டைகளை விரித்து தன் குஞ்சுகள்மேல் அசைவாடி, அவற்றை சுமந்துசெல்வதுபோல, நானும் உன்னை சுமப்பேன்," என்று நிச்சயமாக சொல்லுகிறார். ஆம், தீங்கு நேரிடும்போது, சோதனைகள் எழும்பும்போது, சத்துரு உங்களுக்கு விரோதமாக வரும்போது, ஆண்டவர், "நான் உன்னை ஆவியில் உயர்த்துவேன். என்னுடைய செட்டைகளில் உன்னை சுமப்பேன். உயரமான ஸ்தலங்களுக்கு உன்னை கொண்டு செல்வேன். உன்னை பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்து, என்னுடன் நடக்கும்படி செய்வேன். மாம்சத்திலிருந்து உன்னை ஆவிக்குரிய நிலைக்கு மாற்றுவேன்," என்று கூறுகிறார். ஆண்டவருடனான ஆவிக்குரிய பயணத்தில் அவர் உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவார். மனுஷீக தாக்குதல்கள், பிசாசின் ஒடுக்குதல்களுக்கு மேலாக அவரது பிரசன்னம் உங்களை உயர்த்துவதை உணர்வீர்கள். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்," என்ற வாக்குத்தத்தத்தின்படி, அவர் உங்களுக்கு பெலன் தருவார். உன்னத ஆசீர்வாதங்களையும், நீங்கள் காத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி உங்களை உயர்த்துவதற்கு தேவன் ஆயத்தம்பண்ணுகிறார். இன்றைக்கு, இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களை உங்கள்மேல் உரைத்திடுங்கள். உங்கள் ஆசீர்வாதத்திற்கு தடையாக மூடியிருக்கும் எல்லா வாசல்களும் திறக்கும்படி இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில், தேவனுடைய ஆவியின் வல்லமையால் நீங்கள் வாழ்வில் உயர் ஸ்தானங்களுக்கு எழும்புவீர்களாக.
ஓர் அருமையான சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நிரஞ்சனி குஜுர் - திகம்பர் டிர்கி இருவரும் திருமணத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பிறகு நிரஞ்சனிக்கு பல உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டன. மருத்துவ சிகிச்சைகள் பெற்றும் சுகம் கிடைக்கவில்லை. திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காததால் அவர்கள் வெட்கத்தையும் துக்கத்தையும் வேதனையையும் சகிக்க வேண்டியதாயிற்று. டெல்லியில் இயேசு அழைக்கிறார் தீர்க்கதரிசன மாநாடு நடந்தபோது, அவர்கள் கலந்துகொண்டு, தேவன் தங்கள் வாழ்வில் இடைப்படவேண்டுமென்று வேண்டினர். அவர்கள் கண்ணீரை கண்டதும் நான் மனதுருகினேன். அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கப்படவேண்டுமென்று ஜெபித்தேன். ஜெபித்த பிறகு அவர்கள் சமாதானத்துடன் வீடு திரும்பினர். நிரஞ்சனியின் ஆரோக்கியத்தில் பெருத்த முன்னேற்றம் உண்டானது. அவர்கள் கருத்தரித்தார்கள். ஆண்டவர் அருளிய ஈவாக, அழகிய பெண் குழந்தை பிறந்தது. சகோதரி நிரஞ்சனிக்கு அற்புதம் செய்த தேவனால், உங்களுக்கும் செய்ய முடியும். அவர் தமது சிறகுகளால் உங்களை மூடுவார்; அவருடைய செட்டைகளின் கீழ் நீங்கள் அடைக்கலம் காண்பீர்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, என்னை உம்முடைய சிறகுகளால் மூடி, உம்முடைய பலத்த செட்டைகளின் கீழ் எனக்கு அடைக்கலம் தந்து பாதுகாப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமாவையும் குடும்பத்தையும் வேலையையும், நீர் கிருபையாக எனக்கு தந்திருக்கிற எல்லா ஆசீர்வாதங்களையும் தயவாய் காத்தருளும். உம்முடைய செட்டைகளில் என்னை சுமந்து, எல்லா உபத்திரவங்களுக்கும், சோதனைகளுக்கும், சத்துருவின் தாக்குதலுக்கும் மேலாக என்னை உயர்த்தியருளும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகித்து, ஆவிக்குரியவிதத்தில் உம்முடன் நடக்கும்படி வழிகாட்டும். மூடப்பட்டிருக்கும் எல்லா வாசலையும் நீர் திறப்பீர் என்றும், நான் காத்திருக்கிற ஆசீர்வாதங்களை உம்முடைய ஏற்றவேளையில் தந்தருளுவீர் என்றும் நம்புகிறேன். உம்முடைய பிரசன்னம் என் வாழ்வை நிரப்புவதாக. ஜெயத்துடனும் சமாதானத்துடனும் நான் வாழும்படி என்னை பெலப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.