அன்பானவர்களே, இயேசு, "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" (யோவான் 15:7) என்று கூறியுள்ளார். "அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக" (சங்கீதம் 20:4) என்று வேதம் கூறும்வண்ணம், உங்கள் இருதயத்தை விருப்பங்களை நிறைவேற்ற ஆண்டவர் விரும்புகிறார். நாம் விரும்புகிறவற்றை ஆண்டவர் எப்போது நிறைவேற்றுவார்? நாம் இயேசுவிலும், அவரது வார்த்தைகள் நம்மிலும் நிலைத்திருக்கும்போது அவ்வாறு நடக்கிறது. அந்நிலையில் நம் ஏறெடுக்கும் விண்ணப்பங்கள் தேவனுடைய சித்தத்தோடு இசைந்தவையாக இருக்கும்; அப்போது நாம் கேட்கிறவற்றை இயேசு நிறைவேற்றுவார். தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப நாம் வாழும்போது, நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம்.

நாம் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகி, பிசாசின், உலகத்தின் விருப்பத்தின்டி அல்லது நம்முடைய சுய விருப்பத்தின்படி நடந்தால் நமக்கு நாமே அழிவை வருவித்துக்கொள்வோம். தேவனுடன் இல்லாமற்போகும்போது, அழிவு வரும். உலகில் உயர்ந்து, பெயரையும் புகழையும் வெற்றியையும் பெருமையையும் அடையும் பலரை காண்கிறோம். ஆனாலும், அவர்கள் தேவனுடன் இல்லாமல், தங்களுக்காகவே வாழும்போது, தங்கள் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள போராடுவார்கள். அநேகர் விழுந்துபோவார்கள். அநேகர் மனச்சோர்வு அடைவார்கள்; சிலர் போதை பொருள்களுக்கு அடிமையாவார்கள்; சிலர் எல்லாவற்றையும் இழந்துபோவார்கள்; சிலர் இன்னும் பரிதாபகரமாக தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்வார்கள். நாம் இயேசுவில் நிலைத்திருந்து, அவருடைய வசனத்திற்கேற்ப வாழ்வோமானால், அவர் நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். நம்முடைய விருப்பங்கள், அவருடைய சித்தத்திற்கு உகந்தவையாக இருக்கிறபடியினால், நாம் எதைக் கேட்டாலும் அவர் அதை அருளிச்செய்வார். ஆண்டவர் உங்களுக்கும் அப்படியே செய்வார். வேலையை, வீட்டை, சமாதானத்தை, செழிப்பை அவர் அற்புதவிதமாக அளிப்பார். படிப்பில், நேர்முகத் தேர்வில், வியாபாரத்தில், ஊழியத்தில், விவசாயத்தில் அவர் உங்களை உயர்த்துவார். இந்த தெய்வீக ஆசீர்வாதத்தை உங்களுக்கு அளிப்பதற்காக இன்று தேவ கரம் உங்கள்மேல் வரும்.

திருச்சியை சேர்ந்த ரெபெக்கா என்ற சகோதரி, தேவன் உண்மையுள்ளவர் என்பதை குறித்த வல்லமையான ஒரு சாட்சியை பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் கணவர் பெயர் இஸ்ரேல். அவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் பணியாற்றியவர்களின் பொறாமையின் காரணமாக அவர் வேலை விட்டுவிடும் நிலை ஏற்பட்டது. இன்னொரு வேலையை தேடிக்கொண்டிருந்தார். முன்பு கிடைத்த ஊதியத்தை விட குறைவான ஊதியமே தருவதாக அனைத்து இடங்களிலும் கூறினர். ஆனாலும், முன்பு வாங்கிய சம்பளத்தை பெறவேண்டும் என்பதில் அவர் உறுதியாயிருந்தார்.

இந்த இக்கட்டான நிலையில், திருச்சியிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் நடைபெற்ற ஒரு ஜெபத்தில் அவர் கலந்துகொண்டார். அங்கு ஆண்டவர் ஆயிரமடங்கு அதிகமாகும்படி செய்வார் (உபாகமம் 1:11) என்ற தீர்க்கதரிசன செய்தியை கேட்டார். இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றி, சகோதரர் இஸ்ரேல், தமக்காக ஜெபிக்கவேண்டி எனக்கு எழுதினார். தேவன் ஏற்ற வேலையை அருளிச்செய்வார் என்று நான் உறுதியளித்தேன். விரைவிலேயே அவர் ஒரு பள்ளியில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். அவர் இழந்த வேலையின்போது பெற்ற ஊதியமே அற்புதவிதமாக, இங்கும் கொடுக்கப்பட்டது.

தேவனுடைய வார்த்தை நிறைவேறியது. அவர்கள் குடும்பம் பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவித்தது. அன்பானவர்களே, தேவன் அவர்களுக்குச் செய்தவண்ணமே உங்களுக்கும் செய்வார். இயேசுவில் நிலைத்திருங்கள்; அவர் மிகுதியாய் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக வாக்கு அளிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்மில் நிலைத்திருக்கவும், உம் வார்த்தைகள் எனக்குள் தங்கியிருக்கவும் உதவி செய்யும். என் விண்ணப்பங்கள் உம்முடைய இருதயத்திற்கு பிரியமானவையாக இருக்கும்படி, என் இருதயம் உம்முடைய சித்தத்தோடு இசைந்திருக்கப் பண்ணும். வழி விலகி உலகத்தின் வழிகளில், சுய வழிகளில், சத்துருவின் எண்ணங்களின்படி நான் நடவாதிருக்கும்படி காத்துக்கொள்ளும். உம்மில் நித்திய ஜீவன் இருக்கிறதென்று அறிந்து, எல்லாவற்றுக்கும் மேலாக உம்மையே நான் தேடும்படி செய்யும். உம்முடைய கரம் என்மேல் அமர்ந்து, சமாதானத்தையும், செழிப்பையும், தெய்வீக தயையும் அருளிச்செய்யட்டும். நாம் உம்மில் நிலைத்திருக்கும்போது, உம்முடைய அன்பின் கரங்கள் என்னை பரிபூரணமான ஆசீர்வதிக்கும் என்பதை அறிந்து என்னையே உம்மிடம் முழுவதுமாக அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.