எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" (சங்கீதம் 3:5) என்ற வேத வசனத்தை நாம் தியானிப்போம். தேவனில் நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை இந்த வசனம் நினைவுப்படுத்துகிறது.

அநேகர், இந்த உலகின் கவலைகளாலும் துக்கத்தினாலும் இரவில் சமாதானமின்றி உறங்க செல்கிறார்கள். அன்பானவர்களே, பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக நீங்கள் எண்ணும்போது,  செய்யவேண்டிய ஒரு காரியத்தை கற்றுத்தருகிறேன். நானும் என் கணவரும் இதை எங்கள் சொந்த ஊழிய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டோம். ஊழியத்தில் நாங்கள் அநேக சவால்களையும் உபத்திரவங்களையும் சந்தித்துள்ளோம். அதுபோன்ற ஆபத்தான தருணங்களில், நாங்கள் முழங்காலிட்டு ஜெபிப்போம். அது இரவு 11 மணி அல்லது அதிகாலை 2 அல்லது 3 மணியாக இருந்தாலும் ஜெபிப்போம். எங்கள் இருதயங்கள் உபத்திரவப்படும்போது, ஜெபத்தில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடாமல் தூங்குவதற்கு ஒருபோதும் முயற்சித்ததில்லை.

முழங்காற்படியிட்டு, ஜெபித்து, உங்கள் இருதயத்தை தேவனிடம் ஊற்றுங்கள். ஆண்டவர், இரவும் பகலும் உங்களுக்குச் செவிகொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இதுவே தேவனுடைய மகத்துவமாகும். நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, "உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது" (சங்கீதம் 18:35; 63:8) என்று வேதம் கூறுவதுபோல, அவர் உங்களை தாங்குவார்.  தேவனுடைய வல்லமையான வலது கரம் எப்போதும் தன்னை தாங்கும் என்று சங்கீதக்காரன் அறிந்திருந்தான். "கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்" (சங்கீதம் 145:14) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. இருளானவேளைகளிலும் உங்களை தூக்கியெடுக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். ஆனால், நீங்கள் அவரது பிரசன்னத்தில் தங்கவேண்டும். "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்" (சங்கீதம் 91:1) என்று வேதம் கூறுகிறது. தேவனை அடைக்கலமாக கொள்ளும்போது, அவர் உங்களைத் தாங்கி, விடுவித்து, தமது சமாதானத்தை அருளிச்செய்வார். அவருடைய பாதுகாப்பின் கரங்களில் இருப்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, சமாதானத்துடன் இளைப்பாறுவீர்கள்.

அன்பானவர்களே, இருதயத்தில் கலங்குகிறீர்களா? இரவில் இளைப்பாற முடியாமல் தவிக்கிறீர்களா? ஆண்டவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு ஜெபியுங்கள். அவர் உங்கள் வாழ்வில் ஓர் அற்புதத்தை செய்து, தமது பூரண சமாதானத்தை உங்களுக்கு அருளுவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, தேவனாகிய நீர் என்னை தாங்குகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய கவலைகளையெல்லாம் உம்மீது வைத்துவிடும்படி நீர் கூறியிருக்கிறீர். எதைக் குறித்தும் துக்கமடையாமல், கலக்கமடையாமல் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்க எனக்கு உதவும். உமக்கு நான் முதலிடம் கொடுக்கவும், எந்தச் சூழ்நிலையிலும் உம்மையே முதலில் தேடும்படியும் என்னை வழிநடத்தும். என்னுடைய கவலைகளை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல், மெய்யான இளைப்பாறுதலையும், சரியான தீர்வையும் கொடுக்கக்கூடிய உம்மிடமே நான் பகிர்ந்துகொள்ளவும் கற்றுத்தாரும். எல்லா சூழ்நிலையிலும் நான் திடமாகவும் சமாதானமாகவும் இருக்கவும் உம்முடைய கிருபையினால் ஜெயங்கொள்ளவும் உம்முடைய வல்லமையான கரத்தினால் என்னை தாங்கி பெலப்படுத்தும். நீர் என்னுடன் இருக்கிறீர் என்பதையும், என்னை மீட்டு கனப்படுத்த ஆயத்தமாயிருக்கிறீர் என்பதையும் முழுவதும் விசுவாசிக்கும்படிசெய்து, உம்முடைய சமாதானத்தினால் என்னை நிறைத்து, நிம்மதியாக உறங்க கிருபை செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.