எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்" (சகரியா 9:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். ஆண்டவர் எவ்வளவு நிச்சயமாய் கூறுகிறார் பாருங்கள்! அவர் இரட்டிப்பான நன்மையைத் தருவதாய் வாக்குப்பண்ணுகிறார். "கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை" (நாகூம் 1:7) என்று வேதம் நமக்கு நினைவுறுத்துகிறது. அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? முழு நம்பிக்கையையும் தேவன்மேல் வைக்கவேண்டும். தம்மை நம்புகிறவர்களை ஆண்டவர் அறிந்திருக்கிறார்; நாம் அவரை நம்பும்போது அவர் நமக்கு அரணான கோட்டையாக மாறுகிறார். "கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்" (நீதிமொழிகள் 16:20; எரேமியா 17:7) என்று வேதம் கூறுகிறது. இந்த திடவிசுவாசத்திற்கு தாவீதே உரிய உதாரணமாக இருக்கிறான். "தேவரீரே எனக்கு அரண்" (சங்கீதம் 31:4;43:2) என்று அவன் கூறுகிறான். அவன் ஆடு மேய்க்கிற சிறுவனாக இருந்தாலும், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று அறிக்கையிடுவதன் மூலம் அவனுடைய நம்பிக்கையின் உறுதியை கண்டுகொள்ளலாம்.
அன்பானவர்களே, இன்றைக்கு உங்கள் நம்பிக்கை எதன்மேலிருக்கிறது? நீங்கள் ஒரு மனுஷனையோ, மனுஷியையோ அல்லது நண்பரையோ சார்ந்திருக்கிறீர்களா? அவர்கள் அனைவரும் மனுஷரே. இந்த உலகத்தின் நிச்சயமில்லாத தன்மைக்கு உட்பட்டவர்கள். ஆனால், நீங்கள் தேவன்மேல் முழு நம்பிக்கை வைக்கும்போது, அவர் உங்களை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார்; மிகுதியாய் திரும்ப கொடுப்பார். இன்றைக்கும், உங்கள் தேவைகள் எதுவாயிருந்தாலும் அவற்றை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவரை முழுவதுமாய் நம்புங்கள்; அவர் இரட்டிப்பாய் உங்களுக்கு திரும்ப தருவார். ஜெபித்து, இன்றைக்கு இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நம்பிக்கை நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். ஆபத்துக்காலத்தில் எனக்கு அரணான கோட்டையாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் கவலைகள், தேவைகள், நம்பிக்கை எல்லாவற்றையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். நீரே என் நல்ல மேய்ப்பராயிருக்கிறீர். ஆகவே, எனக்கு குறைவு ஒன்றுமில்லை. ஆண்டவரே, என்னை சீர்ப்படுத்தி, இரட்டிப்பான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தந்து ஆசீர்வதித்திடும். உலகத்தை அல்ல; உம்மை மாத்திரமே நான் சார்ந்திருக்கும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். தாவீதைப் போல, உம்மேல் முழு நம்பிக்கையையும் வைப்பதற்கு எனக்கு உதவும். உம்முடைய வாக்குத்தத்தங்கள் இன்றைக்கு எனக்குள் ஜீவன் பெறட்டும். நீர் அருளும் ஆசீர்வாதங்களை நன்றியுடனும் விசுவாசத்துடனும் பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.