அன்பானவர்களே, "எனக்கு பெலனே இல்லை," என்று நீங்கள் சொல்லலாம். உங்கள் பெலன் குன்றும்போது, "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்" (ஏசாயா 40:29) என்ற வசனத்தை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பெலவீனமாக உணரும்போது, ஆண்டவர் உங்களுக்கு பெலன் தருவார்; சத்துவமே இல்லை என்று எண்ணும்போது, அவர் உங்களுக்கு சத்துவத்தை பெருகப்பண்ணுவார்.

ஆண்டவராகிய இயேசு, நம்முடைய பெலவீனங்கள் எல்லாவற்றையும் தாம் எடுத்துக்கொண்டு, நம் நோய்கள் எல்லாவற்றையும் சுமந்தார் என்று வேதம் கூறுகிறது. நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளினால் பெலனை இழந்துவிட்டீர்களா? திடன்கொள்ளுங்கள்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்களுக்குப் பெலனாயிருக்கிறார். அவர் உங்களுக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாயிருக்கிறார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்களுக்குப் பெலனும், அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாயிருக்கிறார். நீங்கள் சோர்ந்துபோகும்போது அவர் பெலன் தந்து, உங்களை எழும்பப் பண்ணுவார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

வடிவு என்ற சகோதரி தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்: அவர்கள் இயேசுவைப் பற்றி எதுவுமே அறியாதவர்களாயிருந்தார்கள். அவர்களுடைய சகோதரிக்கு 18 வயதிலேயே திருமணமானது. ஆனால், சகோதரி வடிவுக்கு 26 வயதாகியும் திருமணமாகவில்லை. அநேகர், இனி உனக்கு திருமணமே ஆகாது என்று கூறினார்கள். ஏற்கனவே திருமணமான ஒருவர், அவர்களை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். சகோதரி வடிவின் தாயாரும், பணக்கஷ்டத்தின் காரணமாக அந்த நபரை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தினார்கள். இப்படி ஒருவர்தான் உன்னை திருமணம் செய்துகொள்வார் என்று அவர்களுடைய உறவினர்களும் கூறினார்கள். ஆகவே, சகோதரி வடிவு மனமுடைந்துபோனார்கள். தனியே இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார்கள். நல்வாய்ப்பாக, அவர்களுடைய குடும்பத்தினர், சரியான நேரத்தில் பார்த்து, உயிரைக் காப்பாற்றினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு, அவர்களுடைய பெற்றோர் அந்த திருமண முயற்சியை நிறுத்திவிட்டார்கள். இக்கட்டான அந்த சமயத்தில், யாரோ ஒருவர் இயேசு அழைக்கிறார் பத்திரிகையை சகோதரி வடிவுக்கு கொடுத்திருக்கிறார். அவர்கள் அதை வாசித்தபோது, மிகுந்த சமாதானம் கிடைத்துள்ளது; இயேசுவின்மேல் விசுவாசம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இயேசுவிடம் ஜெபிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஜெபிக்கும்படி கேட்டு எனக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். நான் ஜெபித்து, இயேசுவை அவர்கள் நம்புகிறபடியினால் அவர்கள் வாழ்க்கையில் நன்மை உண்டாகும் என்று பதில் அனுப்பியுள்ளேன். அந்தச் சூழ்நிலையில் அவர்கள், உறவினர் வீட்டில் நடந்த குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார்கள். அங்கே, அவர்களுடைய தகப்பனாருடைய நண்பர், ஒருவரை அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறார். ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு திருமணம் ஒழுங்காகி இருக்கிறது; எல்லாம் நல்லபடி நடந்திருக்கிறது. அனைவரும் மிகுந்த சந்தோஷமடைந்திருக்கிறார்கள்; சகோதரி வடிவு கருவுற்றிருக்கிறார்கள். ஆனாலும், சகோதரிக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்து, குழந்தையில்லாத நிலையில், தான் குழந்தை பெற்றுக்கொள்வது சரியல்ல என்று எண்ணி, கர்ப்பமடைவதை தடுக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார்கள். ஆனால், மாத்திரை பலன் தரவில்லை. இப்படி மாத்திரை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். ஆகவே, அவர்கள் தான் செய்ததற்கு வருந்தி, இயேசுவை நோக்கி, தம்முடைய பெலனை அவர் தனக்கு தர வேண்டும் என்று ஜெபித்துள்ளார்கள். ஆண்டவர், ஜெபத்தை கேட்டு, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கும்படி அவர்களை பெலப்படுத்தியிருக்கிறார். சகோதரி வடிவு, ஆண்டவர் இயேசு அவர்களுக்கென கட்டியெழுப்பிய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அன்பானவர்களே, ஆண்டவர், நிச்சயமாகவே உங்களுக்கு பெலன் தருவார். அவர் உங்களுக்கு சத்துவத்தை பெருகப்பண்ணி, தம்முடைய ஆசீர்வாதத்தை நீங்கள் பூரணமாய் அனுபவிக்கும்படி செய்வார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய சத்துவத்தை நீர் பெருகப்பண்ணி, என்னை பெலவானாக்குவதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். பெலவீனனுக்கும் சத்துவமில்லாதவனுக்கும் நீர் பெலனை தருகிற ஆண்டவராயிருக்கிறீர். நீர் என் உள்ளான மனுஷனை பெலப்படுத்தி, என்னை திரும்பவும் எழும்பப்பண்ணவேண்டுமென்று ஜெபிக்கிறேன். என்னை பெலவீனப்படுத்தும் எல்லா துக்கமும், தடையும், வியாதியும் அகலவேண்டுமென்று உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில் கட்டளையிடுகிறேன். உம்முடைய பெலத்தோடும், ஜெயத்தோடும் நான் நடக்கும்படி என்னுடைய பெலவீனங்கள் எல்லாவற்றையும் நீர் சிலுவையில் சுமந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய சமுகத்தில் நான் காத்திருக்கும்போது, நீர் எனக்கு புதுப்பெலன் தந்து, நான் கழுகைப்போல செட்டைகளை அடித்து உயரே எழும்புவதற்கு உதவுவீர் என்று அறிந்திருக்கிறேன். ஆண்டவரே, நீரே என் பெலனாயிருந்து நான் சோர்ந்துபோகாமலும் களைத்துப்போகாமலும் இருக்க உதவிச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.