அன்பானவர்களே, நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர். "அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்" (2 கொரிந்தியர் 1:22) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. ஆம், நீங்களும் நானும் இயேசுவுக்குச் சொந்தமானவர்கள்.
தேவனுடைய வீட்டார் என்பதற்கு அடையாளமாக, அவர் தமது ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரை நம்முடைய உள்ளங்களில் அச்சாரமாக வைத்திருக்கிறார். தேவ ஆவியானவர் நமக்குள் பொக்கிஷமாக இருக்கிறார். அவர் நம் உள்ளங்களில் வாசம்பண்ணுவதால், நம்முடைய சரீரங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறது. அவர் மூலமாக தேவன் தம்முடைய முத்திரையை நம்மேல் போட்டிருக்கிறார். இன்றைக்கு உங்கள் உள்ளத்தை உயர்த்தி, இயேசுவிடம், "ஆண்டவரே, என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பும். உம்முடைய ஆவியானவர் எனக்குள் தங்குவாராக; என் வாழ்க்கையில் தேவ பொக்கிஷமாக விளங்குவாராக," என்று கேளுங்கள். ஆம், பரிசுத்த ஆவியானவரே நமக்குள் தேவனுடைய விலையேறப்பெற்ற பொக்கிஷமாக விளங்குகிறார்.
பழைய காலத்தில், மக்கள் நதிக்கரையோரமாக தங்கத்தை தேடி செல்வர். தங்கம் உறைந்திருக்கும் பாறைகள் உள்ள மலைகளிலிருந்து பாய்ந்து வரும் ஆற்றில், தங்கக் துகள்கள் காணப்படும். தங்கத்தை தேடிச் செல்கிறவர்கள், அந்த சிறு துகள்களை பொறுமையாக சேகரித்து, தங்கள் பைகளுக்குள் வைத்துக்கொள்வார்கள். அந்தப் பைகளை அவர்கள் தோள்களில் சுமந்தபடி அடுத்துள்ள கிராமத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள ஜனங்கள், "உங்களுக்குத் தங்கம் கிடைத்துவிட்டதா?" என்று ஆச்சரியத்துடன் விசாரிப்பார்கள். இவர்கள், "உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்பார்கள். கிராமத்து மக்கள் சிரித்துக்கொண்டே, "உங்கள் முகங்கள் தங்கம்போல் ஜொலிக்கிறதே!" என்று கூறுவார்கள். தங்கப் படிவுகளை தாங்கள் எடுத்ததால், முகங்களில் பிரகாசிப்பதை அவர்கள் அறியாதிருப்பார்கள்.
அன்பானவர்களே, இன்றைக்கு பரிசுத்த ஆவியாகிய பொக்கிஷத்தை பெற்றிருக்கிறீர்கள். இயேசுவின் முத்திரை உங்கள்மேல் போடப்பட்டுள்ளது. உங்கள் முகம் அவரது பிரசன்னத்தால் பிரகாசிக்கிறது. இயேசுவுக்குள் எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்கு உரியவையாயிருக்கிறபடியினால் சந்தோஷத்துடன் அவரை சுமந்துசெல்லுங்கள். அவரது தெய்வீக மகிமை உங்கள் மூலமாக பிரகாசித்து, உங்கள் வாழ்க்கையை ஒளிவீசும்படி செய்யும்.
சென்னையை சேர்ந்த ராஜ் பால் மோசஸ் என்ற சகோதரர் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்: என்னுடைய தம்பியை நான் இழக்கநேரிட்டது. அதனுடன் வேலையையும் இழந்தேன். நான் மிகவும் மனம் சோர்ந்துபோயிருந்த நேரத்தில், ஒருவர் என்னை இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு அழைத்து வந்தார். ஜெப வீரர் எனக்காக ஜெபித்த பிறகு, மிகுந்த சமாதானம் என் உள்ளத்தை நிறைத்தது. நான் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தேன். அவரே எனக்கு எதிர்காலத்தை அமைத்து தருவார் என்று நம்பியிருந்தேன். ஒருநாள், Dr. பால் தினகரனின் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தபோது, ஜெபத்தின் மூலமாக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது குறித்து அவர் செய்தியளித்தார். சீக்கிரமே நான் நேர்முகத்தேர்வு ஒன்றிற்கு சென்றேன். நான் Dr. பால் தினகரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து, "ஆண்டவரே, நீர் எனக்கு வேலை தந்தால், மற்றவர்களும் ஆசீர்வாதம் பெறும்படி என் முதல் மாத ஊதியத்தை இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்குக் கொடுக்கிறேன்," என்று பொருத்தனை செய்து ஜெபித்தேன். தேவ கிருபையால் நான் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் வாழ்க்கை செழிப்பாக தொடங்கியது. இப்போது தேவன் எனக்கு அன்பான மனைவியையும் அழகான மகளையும் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். இயேசு அழைக்கிறார் ஸ்தானாபதிகள் கூட்டத்திலும் கலந்துகொண்டேன். அங்கே தேவன் என்னை பரிசுத்த ஆவியினால் நிறைத்தார். நான் இப்போது இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் மூலம் ஆண்டவருக்கு ஊழியம் செய்து வருகிறேன். என் உள்ளத்தில் சந்தோஷம் நிறைந்துள்ளது.
அன்பானவர்களே, சகோதரர் ராஜ் பால் மோசஸை ஆசீர்வதித்ததுபோல, உங்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார். தேவன் தம்முடைய முத்திரையை உங்கள்மேல் போட்டு, பரிசுத்த ஆவியாகிய பொக்கிஷத்தை உங்களுக்குள் வைத்திருக்கிறார். இயேசுவால் பிரகாசித்திடுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் உமக்குச் சொந்தமானவன்(ள்) என்பதற்கு அச்சாரமாக என்னை முத்திரித்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் இருதயத்திற்குள் தெய்வீக பொக்கிஷமாக பரிசுத்த ஆவியை ஊற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, என்னை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். உம்முடைய பிரசன்னம் தங்கியிருந்து பிரகாசிக்கும் ஆலயமாக என் வாழ்க்கை விளங்கட்டும். பொன்னானது தன்னை கண்டுபிடிக்கிறவர்களின் முகங்களை பிரகாசிக்கப்பண்ணுகிறதுபோல, உம்முடைய மகிமை என் மூலமாக பிரகாசிக்கட்டும். நான் செல்லுமிடமெங்கும் என் முகமும் வாழ்க்கையும் உம்முடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தும்படி செய்யும். இயேசுவை சந்தோஷத்துடன் சுமந்துசென்று, அவருடைய ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவும். கிறிஸ்து இயேசுவுக்குள் உம்முடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் எனக்குரியவையாகும் என்று வாக்குத்தத்தத்தில் களிகூருகிறேன். ஆண்டவரே, நான் முத்திரிக்கப்பட்டு, நிரப்பப்பட்டு, உமது மகிமைக்காக பிரகாசிக்கிறவனு(ளு)ம், உமக்குச் சொந்தமானவனு(ளு)மாயிருக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.