"எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்" (ஆதியாகமம் 17:7) என்று கர்த்தர் கூறுகிறார். அன்பானவர்களே, உங்களை தம்முடைய பிள்ளையாக மாற்றும்படி தேவன் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த உடன்படிக்கை என்ன? இது புறாக்கள், ஆட்டுக்குட்டிகள், காளை இவற்றின் இரத்தத்தினால் அல்ல; இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய தேவனுடைய இரத்தத்தின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டது. ஆம், தேவன், இயேசு என்ற பெயரில் இந்த உலகில் மனுவுருக்கொண்டு வந்தார். மரியாள் என்ற கன்னிகையின் கர்ப்பத்தில் தேவனுடைய வித்தினால் அவர் உருவாக்கப்பட்டமையால் அவருடைய இரத்தம் பரிசுத்தமாயிருக்கிறது. எந்த மனுஷனாலும் தொடப்படாத அந்த கன்னியின் கருவில் தேவன், இயேசுவாக மாம்சமானார். அவருடைய இரத்தமானது தேவனுடைய பரிசுத்த இரத்தமாயிருக்கிறது. இயேசு உங்களுடைய பாவங்களையும் என்னுடைய பாவங்களையும், பாவம் கொண்டு வருகிற சகல சாபத்தையும் சுமந்து சிலுவைக்குச் சென்றார். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்படி அவர் தம்மையே பலியாகக் கொடுத்தார். இன்றைக்கு இயேசுவின் இரத்தத்தால் நாம் எல்லா பாவமும் நீங்கும்படி சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம்; நாம் விசுவாசத்துடன் அவரிடம் வந்து அவரது இரத்தத்தினால் நம்மை கழுவும்படி கேட்கிறோம்.
இயேசுவின் இரத்தத்தை நீங்கள் தேடவேண்டிய அவசியம் இல்லை. அது அனைவருக்காகவும் சிந்தப்பட்டது. நீங்கள், "ஆண்டவராகிய இயேசுவே, என் பாவத்தை மன்னியும். உம்முடைய பரிசுத்த இரத்தத்தினாலே என்னை கழுவி, என் இருதயத்தை சுத்தமாக்கும். என்னுடைய பாவ சுபாவத்தை அகற்றும். என்னை சுத்திகரியும்," என்று விசுவாசத்துடன் கூறுங்கள். உண்மையான உள்ளத்துடன் இந்த ஜெபத்தை ஏறெடுங்கள்; நீங்கள் பாவி என்பதை அறிக்கையிடுங்கள்; உங்கள் பாவத்தை அறிக்கையிடுங்கள்; இயேசுவின் இரத்தத்திற்கு சுத்திகரிக்கும் வல்லமை உண்டு என்று நம்புங்கள். இப்போதே அவர் உங்களைச் சுத்திகரிப்பார்; நீங்கள் எங்கே இருந்தாலும் அவருடைய பிள்ளையாக மாறுவீர்கள். நீங்களும் தேவனும் தகப்பனும் பிள்ளையுமாக இணைந்திருப்பதற்காக அவர் இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அவருடைய இரத்தம் உங்களுக்குள் பாய்கிறபடியினால், உங்களை கழுவுகிறபடியினால் நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு புதிய மனுஷனாவீர்கள். இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு வேண்டுமா? நீங்கள் எங்கே இருந்தாலும் அங்கிருந்து இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள். இப்போதே உங்களால் இயேசுவின் பிள்ளையாக மாற முடியும். இது நித்திய உடன்படிக்கையாயிருக்கிறது.
நாம் சோதனைகள் நிறைந்த உலகத்தில் வாழ்கிறோம். வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் சோதனைகள் வருகின்றன. ஆனால், எப்பொழுதெல்லாம் சோதனை நேருகிறதோ, அப்போதெல்லாம் ஆண்டவர், "உனக்காக நான் இரத்தம் சிந்தினேன்," என்று நினைவுப்படுத்துவார். நீங்கள் கூப்பிடும்போது, அவருடைய இரத்தம் உங்களுக்காக நன்மையானவை பேசும்; உங்களைப் பெலப்படுத்தும்; பாவத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் முழங்காற்படியிட்டு, உங்களை மறுபடியுமாய் சுத்திகரித்து, அதே பாவங்களை மீண்டும் செய்யாமல் உங்களைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ளும்படி அவரிடம் கேட்டால், அவர் உங்களுக்கு உதவி செய்வார். பரிசுத்த ஆவியானவர், இயேசுவின் ஆவியானவர் உங்கள் பலவீனத்தில் உங்களுக்கு உதவி செய்வார். அவர் உங்களை பாதுகாப்பார்.
ஆகவே, இன்றைக்கு உங்களை அவரது இரத்தத்தினால் கழுவும்படி, அவருடைய ஆவியினால், இயேசுவின் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்படி கேளுங்கள். அவருடைய ஆவியானவர், தீய ஆவி, பிசாசின் பொல்லாத ஆவி கொண்டு வரும் சோதனைகளிலிருந்தும் தாக்குதல்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பார். ஆம், மலைகள் விலகலாம்; பர்வதங்கள் அசைக்கப்படலாம். ஆனால் ஆண்டவர், "உன்னுடன் நான் செய்த என் உடன்படிக்கை ஒருபோதும் விலகாது; அசைக்கப்படாது," என்று சொல்கிறார். அதுவே, உங்களை தம்முடைய அன்பின் பிள்ளையாக காத்துக்கொள்ளும்படி தேவன் உங்களோடு செய்த உடன்படிக்கையாயிருக்கிறது. இயேசுவிடம் வாருங்கள். "நம்பிக்கையுடைய சிறைகளே, உங்கள் அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையை தருவேன்," என்று ஆண்டவர் கூறுகிறார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பரிசுத்தமான இரத்தத்தினால் என்னுடன் நித்திய உடன்படிக்கை செய்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இன்றைக்கு உம் முன்னே வந்து என் பாவங்களை அறிக்கையிடுகிறேன். ஆண்டவரே, என்னை உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவி புதிதாக்கும். எல்லா பாவ எண்ணங்கள், வார்த்தை, செயல்களும் நீங்கும்படி என்னை சுத்திகரித்தருளும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி, என் பெலவீனத்தில் எனக்கு உதவி செய்யும். எல்லா சோதனைகளிலிருந்தும் பொல்லாங்கனின் சதியாலோசனைகளிலிருந்தும் என்னை காத்துக்கொள்ளும். தகப்பனே, உமக்கு அன்பான பிள்ளையாக எப்போதும் நான் உம்மோடு இணைந்திருக்கும்படி செய்யும். என் வாழ்க்கையை விட்டு உம்முடைய அன்பின் உடன்படிக்கை ஒருபோதும் நீங்காமலிருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.