அன்பானவர்களே, இன்றைக்கு, "இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளிப்படுத்தல் 3:8) என்ற வசனத்தை தியானிப்போம். "என் வாழ்க்கையில் எல்லா வாசலும் மூடப்பட்டிருக்கிறது; என் வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லை; என்னால் நன்றாக வேலை செய்ய முடியவில்லை; எனக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை; என்னால் வாழ்வில் உயர இயலவில்லை; வாழ்க்கையை நடத்த போதுமான பணம் இல்லை; என்னை நேசிக்கவோ, அக்கறை காட்டவோ யாருமில்லை; எப்பக்கமும் தோல்வியையே பார்க்கிறேன்," என்றெல்லாம் கூறுகிறீர்களா? யாராலும் பூட்ட முடியாத திறந்த வாசலை ஆண்டவர் உங்களுக்கு வைத்திருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

தன் வாழ்க்கையில் இதேபோன்ற அனுபவத்தை பெற்ற எப்சிபா என்ற சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்களுடைய கணவர் பெயர் பாலன். வாழ்வில் ஒரு கட்டத்தில் அவர்கள் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்தார்கள். எப்சிபா, வீட்டில் இருந்தே தையல் தொழில் செய்தார்கள். பாலன், LED தொலைக்காட்சிகளை பழுதுபார்க்கும் வேலையை செய்துவந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள். வீட்டுச் செலவுகளை செய்யவோ, பிள்ளைகளுக்கு பள்ளிக்கட்டணம் கட்டவோ பணமில்லாமல் தவித்தார்கள்.

நம்பிக்கையற்ற இந்தச் சூழ்நிலையில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு வந்து, வணிக ஆசீர்வாத கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்; தங்கள் தொழிலுக்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். பிறகு, ஜெப கோபுரத்தில் நடந்த பங்காளர் பயிற்சியில் கலந்துகொண்டார்கள். அங்கே, எப்படி ஜெபிப்பது என்றும், தேவனோடு நெருங்கி ஜீவிப்பது எப்படி என்றும், மற்றவர்களுக்கு ஊழியம் செய்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டார்கள். சென்னையிலுள்ள ஜே.சி.ஹவுஸ் ஜெப கோபுரத்தில் தன்னார்வ ஊழியம் செய்து, ஊழியத்திற்கு உதவ ஆரம்பித்தார்கள்.

அதன் பலனாக, அவர்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பட தொடங்கியது. நஷ்டத்தில் இருந்த திரு. பாலனின் தொழில் வர்த்திக்க தொடங்கியது. அவர்கள் பிள்ளைகள், வாலிபர் ஊழியத்தில் பாடகர் குழுவில் சேர்ந்து ஜெப கோபுரத்தில் ஊழியம் செய்ய ஆரம்பித்தனர். இப்போது அவர்கள் குடும்பம் செழிப்பாகி வருகிறது; பணக்கஷ்டமெல்லாம் மறைந்துபோனது. எவ்வளவு அருமையான சாட்சி! அவர்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, சூழ்நிலைகள் மாறின; தேவன், ஆசீர்வாதத்திற்கான எல்லா வாசல்களையும் திறந்து அவர்களை அதிகமாக ஆசீர்வதித்துள்ளார்.

அன்பானவர்களே, அவ்வாறே, நீங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து, அவரது நாமத்தில் மக்களுக்கு ஊழியம் செய்ய உங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும்போது, தேவன் உங்களுக்கு வாசல்களை திறப்பார்; அவற்றை யாராலும் பூட்ட இயலாது. அவருக்கு ஊழியம் செய்யும்படி தீர்மானிப்போம்; இன்றைய தினத்திற்கான வாக்குத்தத்தத்தை பற்றிக்கொள்வோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என் நேரத்தை உமக்காக,  உம்முடைய நாமத்தில் ஜனங்களுக்கு ஊழியம் செய்ய, அவர்களை நேசிக்க, பராமரிக்க, அவர்களுக்காக ஜெபிக்க செலவழிப்பதற்கு தீர்மானிக்கிறேன். என் வாழ்வில் அடைக்கப்பட்டு கிடக்கும் எல்லா வாசல்களையும் திறப்பீராக. நான் செய்யும் எல்லா முயற்சிகளிலும் எனக்கு செழிப்பை தாரும். என் குடும்ப வாழ்வு செழிக்க உதவும். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக என்னை பயன்படுத்தி, உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.