அன்பானவர்களே, “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது" (ரோமர் 6:14) என்று வாக்குத்தத்தம் கூறுகிறது. இயேசுவின் நாமத்தில், பாவத்திற்கு உங்கள்மேல் அதிகாரமில்லை; நீங்கள் விடுதலை பெறுவீர்கள்.

பூனாவை சேர்ந்த நிஷா என்ற சகோதரி அருமையான சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்கள் கணவர், சாலொமோன், வங்கி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆனால், திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து, அவரது கணவர் புகை, மது மற்றும் கஞ்சா போன்ற போதைப்பழக்கங்களுக்கு அடிமைப்பட்டார். அவரது சம்பாத்தியம் எல்லாவற்றையும் இதற்குச் செலவழித்து விடுவதால், வீட்டுத் தேவைக்கு பணமிருக்காது. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்; பிள்ளைகளோடு பட்டினி கிடந்தார்கள். நிஷா அதுவரை எங்கும் வேலை செய்யவில்லை. ஆனால், குடும்ப சாப்பாட்டு செலவுக்கு சம்பாதிக்க வேலை தேடினார்கள்; வேலை கிடைக்கவில்லை. கணவர் தரும் தொல்லையும் அதிக கவலையை அளித்தது; குடும்ப பாரத்தை சுமக்க இயலவில்லை. வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றாலும், பிள்ளைகளுக்காக வேதனையை சகித்துக் கொண்டார்கள்.

இந்த சமயத்தில், ஒருவர், பூனாவில் அமைந்திருக்கும் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தைப் பற்றி அவர்களுக்குக் கூறியிருக்கிறார்கள். ஜெப கோபுரத்திற்குச் சென்ற நிஷாவை ஜெப வீரர்கள் அன்போடு வரவேற்றுள்ளார்கள். சகோதரி நிஷா தன் இருதய வேதனையை தேவ சமுகத்தில் ஊற்றியுள்ளார்கள். ஜெப வீரர்கள், வேத வசனங்களைக் கூறி அவர்களை ஆறுதல்படுத்தி, பெலப்படுத்தி, அவர்களோடு இணைந்து ஜெபித்திருக்கிறார்கள். புது நம்பிக்கை பெற்ற நிஷா, "இயேசு எனக்குச் செய்யப்போகிற அற்புதங்களைக் குறித்து ஒருநாள் நானும் சாட்சி சொல்வேன்," என்று கூறியிருக்கிறார்கள். ஆண்டவர் ஆசீர்வாதத்தின் வாசலை திறந்தார். தேவ கிருபையால், பெண்கள் பள்ளி ஒன்றில் நிஷாவுக்கு வேலை கிடைத்தது. அவர்கள் தன் குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்திலும், பிள்ளைகளை இளம் பங்காளர் திட்டத்திலும் சேர்த்தார்கள். நிஷாவின் மகள் மனோரமாவுக்கு அவர்கள் வேலை செய்த பள்ளியில் கட்டண விலக்கு கொடுத்தார்கள். ஜெப வீரர்கள் அவர்களுக்காக, குறிப்பாக அவர்கள் கணவருக்காக தொடர்ந்து ஜெபித்தார்கள்.  

ஒருநாள், ஜெப கோபுரத்தில் நடந்த உபவாச ஜெபத்தில், இணைந்து ஜெபித்துக்கொண்டிருந்தபோது, வங்கியின் முன்பு நின்றிருந்த சாலொமோனை தேவன் தொட்டார். அவர் வந்து, "நான் தேவனுக்கு விரோதமாகவும், மனைவியாகிய உனக்கு விரோதமாகவும் பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடு," என்று அழுதுகொண்டே கூறினார். இந்த வார்த்தைகளைக் கேட்ட நிஷா, ஆனந்த அதிர்ச்சியடைந்தார்கள். சந்தோஷத்தோடு கணவரை மன்னித்தார்கள். "இனி நான் ஒருபோதும் குடிக்கமாட்டேன். நான் இயேசுவுக்கு ஊழியம் செய்ய விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். அன்று முதல் குடிப்பதை விட்டுவிட்டார். பின்னர் வேதாகம கல்லூரியில் சேர்ந்து, இறையியல் பயிற்சி பெற்று, தற்போது ஆண்டவருக்கு உண்மையாய் ஊழியம் செய்து வருகிறார். தேவன், அவர்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றினார்.

நீங்கள் இயேசுவால் கிருபையின் கீழ் கொண்டுவரப்பட்டபடியினால், பாவத்திற்கு இனிமேல் உங்கள்மேல் அதிகாரம் இல்லை. எந்த தீங்கான எண்ணங்களும் எழாது; பிசாசின் ஒடுக்குதல் இருக்காது. தேவனுடைய வசனத்திற்கு நீங்கள் உங்களை அர்ப்பணித்து, அதன்படி வாழும்போது, ஜீவ வார்த்தையாகிய இயேசுவால் நீங்கள் நிரம்பியிருப்பீர்கள்; அவருடன் நடப்பீர்கள். இன்றைக்கு அதே கிருபை உங்கள்மேல் வருகிறது. இயேசு உங்களை பாவத்திலிருந்து விடுவிப்பார். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; அவர் பதிலளிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, கிறிஸ்துவால் உம்முடைய கிருபைக்கு நான் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவத்திற்கு என்மேல் அதிகாரமில்லை என்று வாக்குத்தத்தம் கூறுவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய நாமத்தினால், பாவத்திற்கு என் வாழ்வின்மேல் எந்த ஆளுகையும் இல்லை என்றும், நான் விடுதலையாயிருப்பேன் என்றும் விசுவாசிக்கிறேன். என்னை உம்மிடம் அர்ப்பணிக்கிறேன்; உம்முடைய வசனத்தின்படி நடக்கிறதினால் என்னை உம்முடைய ஜீவனுள்ள வார்த்தையினால் நிறைத்தருளும். எல்லா தீய எண்ணங்களையும் எடுத்துப்போட்டு, என் வாழ்விலிருந்து பிசாசின் ஒடுக்குதலின் சங்கிலியை அறுத்துப்போடும். இன்று என் இருதயத்தினுள் உம்முடைய கிருபை பாய்ந்து வரட்டும்; எல்லா கட்டுகளிலிருந்தும் அது என்னை விடுவிக்கட்டும். உம்முடைய வல்லமை என்னை இரட்சித்து விடுவிக்கும் என்று நம்பி உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும், அனுதினமும் உம்முடைய பெலத்தையும் அன்பையும் சார்ந்திருக்கவும் உதவி செய்யும். உம்முடைய கிருபையின் மூலம் எனக்கு அருளும் விடுதலைக்காகவும் ஜெயத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.