எனக்கு அன்பானவர்களே, "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்பதே உங்களுக்கான இன்றைய வார்த்தையாகும். கர்த்தர் ஆபிரகாமிடம் பேசியபோது, "நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்," என்று வாக்குப்பண்ணினார். "உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து... உன்னைப் பெருகப்பண்ணி... ஆசீர்வதிப்பார்" (உபாகமம் 7:13) என்றும் வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவரின் இருதயம் இப்படியே எண்ணுகிறது. சிறுபிள்ளைகள் இயேசுவிடம் வந்தபோது, "அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்" (மாற்கு 10:16). ஆம், அவர் அவர்களை ஆசீர்வதித்தார். தேவன் இப்படிப்பட்ட இருதயம் கொண்டவராகவே இருக்கிறார்.

"கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்...கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்" (சங்கீதம் 115:12,14) என்றும் வேதம் பிரஸ்தாபிக்கிறது. ஆம், ஆண்டவர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவார். இயேசுவின் நாமத்தில் அவர் உங்களை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார். எந்த துக்கமும் உங்கள் சந்தோஷத்தை கெடுத்துப்போட அவர் அனுமதிக்கமாட்டார். உங்களைக் குறித்து தேவனுடைய இருதயம் இவ்வாறே எண்ணுகிறது.

நீங்கள் அவருடன் பங்காளராகி, மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொண்டு வரும்படி உங்கள் காணிக்கையை கொடுக்கும்போது, இயேசு ஏற்கனவே விலைக்கிரயம் செலுத்திவிட்டதால், ஆண்டவர் உங்களை ஐசுவரியவானாக்குவார் (2 கொரிந்தியர் 8:9). அவருடைய தரித்திரத்தினாலே நீங்கள் ஐசுவரியவானாகும்படி, அவர் தரித்திரரானார். நாள்தோறும், "ஆண்டவராகிய இயேசுவே, என்னுடைய தரித்திரத்தை உம்மீது ஏற்றுக்கொண்டதற்காக உமக்கு நன்றி. நீர் ஏற்கனவே வறுமையை அனுபவித்துவிட்டீர். இப்போது என்னை ஐசுவரியவானாக்கும். உம்முடைய பாடுகளினால் எனக்கென்று நீர் சம்பாதித்திருக்கும் ஆசீர்வாதத்தை நான் பெற்றுக்கொள்கிறேன்," என்று கூறி ஸ்தோத்திரியுங்கள். இந்த ஜெபத்தை நீங்கள் விசுவாசத்துடன் ஏறெடுக்கும்போது, தேவன் உங்களுக்கு பலனளித்து உங்களை ஐசுவரியவானாக்குவார். நீங்கள் அவரை நேசித்து, அவருடைய ஊழியத்திற்குக் கொடுக்கும்போது, ஒரு துக்கமும் உங்களைத் தொடாதபடிக்கு அவர் காத்துக்கொள்வார். எந்த பாரமுமில்லாமல் நீங்கள் இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இந்த கிருபை உங்கள்மேல் பாய்ந்தோடுவதாக.

கோயம்புத்தூரைச் சேர்ந்த மேரி கிறிஸ்டினா என்ற சகோதரி தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் கணவர் டீ எஸ்டேட் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அவர் மூச்சிரைப்பு நோயினால் அவதிப்பட்டபடியினால் தொடர்ந்து வேலை செய்ய இயலவில்லை. ஆகவே, குடும்பத்திற்கு வருமானம் இல்லாமற்போயிற்று. சகோதரி மேரிக்கு குடலில் புண் (அல்சர்) இருந்தது. ஆகவே, அவர்களால் சாப்பிடவோ, வேலைசெய்யவோ இயலவில்லை. இதுபோன்ற தேவைகளோடு இருந்தபோது, இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஜெபவேளையில் நான், "இப்போது உங்கள் பெலவீனங்கள் யாவும் இயேசுவின் நாமத்தில் அகலுகின்றன என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை உங்கள்மீது வருகிறது," என்று சொன்னேன். உடனடியாக, பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தொட்டார். அவர்களுடைய பெலவீனங்கள் யாவும் அகன்றுபோயின. அவர்கள் முன்னே வந்து சாட்சி கூறினார்கள். "தேவன் உங்கள் பொருளாதார சுமைகள் யாவற்றையும் அகற்றுகிறார்," என்று நான் தீர்க்கதரிசனமாக கூறினேன். அவர்கள் கையில் கொஞ்ச பணமிருந்தும், பிள்ளைகள் இருவரையும் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்துள்ளார்கள். ஆச்சரியவிதமாக, சகோதரி மேரியின் தாயாரும், மேரியின் சகோதரியும், மேரியின் மகளின் கல்வி கட்டணத்தை செலுத்தியுள்ளார்கள். பிறகு அவர்கள் இயேசு அழைக்கிறார் ஸ்தானாபதியாக இணைந்து, ஊழியத்தில் பங்காளராக இணையும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் முதலாளி, "உன் மகளுடைய கல்வி கட்டணத்தை நானே செலுத்துகிறேன்," என்று கூறியுள்ளார். இப்போது, அவர்கள் மகளுக்குத் திருமணமாகி அமெரிக்காவில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மகன், காருண்யா பல்கலைக்கழகத்தில் பி.காம். படித்து முடித்து, தற்போது வேதாகம கல்லூரியில் படிக்கிறார். தேவன் அவர்களை மிகுதியாய் ஆசீர்வதித்திருக்கிறார். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டமாட்டார் என்பதே உண்மை. அன்பானவர்களே, ஆண்டவர்தாமே இப்படிப்பட்ட துக்கமற்ற ஐசுவரியத்தை தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் என்னை பரிபூரணமாக ஆசீர்வதிப்பதாக கொடுக்கும் வாக்குத்தத்தத்தை எண்ணி. நன்றி நிறைந்த இருதயத்தோடு உம்மிடம் வருகிறேன். கர்த்தராகிய உம்முடைய ஆசீர்வாதமே ஒருவரை ஐசுவரியவானாக்கும்; நீர் அதனுடன் வேதனையைக் கூட்டமாட்டீர் என்று வாக்குத்தத்தம் கூறுகிறது. இந்த வாக்குத்தத்தத்தை என் வாழ்க்கைக்கென உறுதியாக பற்றிக்கொள்கிறேன். என்னுடைய தரித்திரத்தை உம்மீது ஏற்றுக்கொண்டு, உம்முடைய தியாகத்தினால் எனக்கு பரிபூரணத்திற்கான வாசலை திறப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற ஐசுவரியத்தை, துக்கத்தை அல்ல; சந்தோஷத்தை கொண்டு வருகிற ஐசுவரியத்தை நான் பெற்றுக்கொள்கிறேன். நானும் என் குடும்பத்தினரும் செழித்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி, உம்முடைய ஆசீர்வாதம் எங்களை பெருகப்பண்ணுவதாக. நான் காணிக்கை கொடுத்து, உம்முடைய வேலையில் பங்காளராக இருக்கிறபடியினால், எந்த பாரமும் துக்கமும் என்னை அணுகாமல் கேடகமாக காத்துக்கொள்வீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, சிறுபிள்ளைகளை நீர் அணைத்துக்கொண்டதுபோல, என்னையும் அணைத்துக்கொள்ளும். உம்முடைய சந்தோஷமும் சமாதானமும் என் வாழ்வில் பாய்ந்தோடவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.