அன்பானவர்களே, நம்மை கரிசனையோடு நடத்தும் உருக்கமான தாயன்பு கொண்ட நம் ஆண்டவரின் பிரசன்னத்தினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போதும், "நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்" (ஏசாயா 51:16) என்ற வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். ஆம், இன்று ஆண்டவர் தமது வார்த்தைகளை உங்கள் வாயில் வைத்து, உங்களை தம்முடைய நோக்கத்திற்கான வல்லமையுள்ள கருவியாக மறுரூபப்படுத்துவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்.

இதனால் ஏற்படும் வித்தியாசத்தை நான் மறுபடியும் மறுபடியும் உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் ஆண்டவருடைய நாமத்தில் பேசுவதற்காக எழும்பும்போது, என்னுடைய சொந்த வார்த்தைகளை நம்பியிருப்பதில்லை. ஆனால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய வார்த்தையினால் என்னை நிரப்புகிறார். நான் அவரது வார்த்தையை பேசும்போது, அந்த இடத்திற்கு தேவனுடைய சித்தத்தை, அவருடைய வல்லமையை, அவரது பிரசன்னத்தை அந்த வார்த்தை கொண்டு வருகிறது. காலப்போக்கில் நான் என்னுடைய வார்த்தைகளுக்கும் ஆண்டவருடைய வார்த்தைக்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசத்தை உணர்ந்துகொண்டேன்.

ஆண்டவரின் வார்த்தை உங்கள் வாயிலிருந்து பாய்ந்துசென்று, நீங்கள் வேலைசெய்யும் இடத்திலும் அதைத் தாண்டியும் அதிகாரத்திலிருப்பவர்களின் செவிகளை அடைந்திடும். அது உங்கள் தேசத்திலுள்ள பிரபுக்கள், ராஜாக்களுக்கு முன்பாகவும், உங்கள் வாழ்வில் பிரச்னைகளை உண்டுபண்ணுகிறவர்களின் முன்பாகவும் செல்லும். பள்ளி, அலுவலகம், சமுதாயம் எந்த இடத்தில் நீங்கள் மற்றவர்கள் முன்பு நின்றாலும் உங்கள் வார்த்தைகளையல்ல; ஆண்டவரின் வார்த்தைகளையே நீங்கள் பேசுவீர்கள். அவ்வாறு நீங்கள் பேசுவதற்கு எழும்பும்போது, தேவனுடைய பிரசன்னம் உங்களை மூடும்; அவர் தமது நிழலினால் உங்களை மறைப்பார். தேவனுடைய பரிபூரண கிருபையின் கீழ் நீங்கள் நிற்பீர்கள். அவர், நம்மை தம்முடைய ஜனங்கள் என்று அழைக்கிறார். அவருடைய வல்லமையினால், நம்மை தம்முடைய ஜனங்கள் என்று காட்டுகிறார். நாம் அழைக்கப்படும் எவ்விடங்களிலும் தம்முடைய நோக்கத்தையும் மகிமையையும் கொண்டு வரும்படி அவருடைய வார்த்தையை அதிகாரத்துடன் பேசும்படி செய்கிறார்.
திக்குவாயினால் தவித்த மோசேக்கு அவர் இப்படியே செய்தார். ஒரே ஒரு வார்த்தை கூறி மோசேயை அழித்துப்போடத்தக்க வலிமையான எகிப்தின் ராஜாவை சந்திக்கும்படி அவனை தேவன் அனுப்புகிறார். அடிமைப்பட்டிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும்படி கேட்கும்படி அவனிடம் கூறுகிறார். ராஜா என்ன செய்திருப்பான் என்று யோசித்துப் பாருங்கள். மோசே, தன் சுயமாக பேசவில்லை; அவன் ஆண்டவரின் வார்த்தையை பேசினான். அந்த வார்த்தை, தேவனுடைய அற்புதங்களைக் கொண்டு சென்றது; ராஜாவின் இருதயத்தில் பயத்தை உண்டுபண்ணினது; தேவனுடைய மகத்தான வல்லமையை அனுப்பியது. உங்களுக்குள் இருக்கும் வார்த்தை அவ்வளவு வல்லமை கொண்டது. இன்று அந்த வார்த்தையைப் பேசுங்கள்; தேவ கிருபையை கொண்டு தைரியமாக அடியெடுத்து வைத்திடுங்கள். உங்கள் வாழ்வு முழுவதும் அவரது சித்தமும் அற்புதங்களும் நிறைந்து காணப்படும்படி தேவன் உங்களை தமது கருவியாக பயன்படுத்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகளை என் வாயில் அருளி, உம்முடைய கரத்தின் நிழலினால் என்னை மறைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய வார்த்தையை தைரியமாகவும் கிருபையுடனும் பேசவும் எந்தச் சூழ்நிலையிலும் உம்முடைய சித்தத்தை செய்யவும் என்னைப் பெலப்படுத்தும். உம்முடைய வார்த்தையின் மூலம் சமாதானத்தையும் சுகத்தையும் மறுரூபமாகுதலையும் அளிக்கும்படி உம்முடைய ஆவியினால் என்னை நிரப்பியருளும். அதிகாரத்திலுள்ளவர்கள், தலைவர்களுக்கு முன்பாகவும் என்னை விரோதிக்கிறவர்களுக்கு முன்பாகவும் திடமாக நின்று உம்முடைய சத்தியத்தை அறிவிப்பதற்கு எனக்கு உதவி செய்யும். உம்முடைய கிருபையினால் என்னை மறைத்தருளும்; உம்முடைய பிரசன்னமே எனக்கு பெலனாகவும் கேடகமாகவும் இருப்பதாக. மோசேயைப்போல என்னுடைய குறைகளை மேற்கொள்ளவும் உம்முடைய மகத்தான வல்லமையின்மேல் நம்பிக்கை வைக்கவும் எனக்கு உதவியருளும். என்னை உமக்குச் சொந்தமானவன்(ள்) என்று அழைப்பதற்காகவும் உம்முடைய தெய்வீக அதிகாரத்தை எனக்கு தருவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, என் இருதயத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். உம்முடைய மகிமைக்கென்று என்னை பயன்படுத்தும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.