எனக்கு அன்பானவர்களே, "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து" (எபிரெயர் 10:24) என்பதே இன்றைய வாக்குத்தத்தமாகும். நாம் இயேசுவின் அன்பின் உதவியால், மற்றவர்களை நேசிக்கும்போது, நற்கிரியைகளை செய்யும் இயல்பை பெறுவோம். அப்போது, தேவன், "உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக" (ரூத் 2:12) என்று ரூத்தை ஆசீர்வதித்ததுபோல், நம்மையும் பரிபூரணமாக ஆசீர்வதிப்பதாக வாக்குக்கொடுக்கிறார். தான் கணவனை இழந்த நிலையிலும், விதவையான தன் மாமியாரை கவனிக்க ரூத் தன்னை அர்ப்பணித்ததினால், தேவன் அவளுக்கு நேர்த்தியான குடும்ப வாழ்க்கையை பலனாக அளித்தார்.

சென்னையை சேர்ந்த சகோதரி அன்னம்மா அகஸ்டின் இதற்கு சரியான உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் கருப்பையில் ஆபத்தான இரண்டு கட்டிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அவை ஒவ்வொன்றும் மூன்று கிலோ எடையிருந்ததால், அறுவைசிகிச்சை செய்யவேண்டியதிருந்தது. அவர்கள், "ஆண்டவரே, நீர் என் உயிரை திரும்ப தந்தால், நான் உமக்கு ஊழியம் செய்வேன்," என்று ஊக்கமாக ஜெபித்தார்கள். அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது, ஒரு கட்டி உடைந்து, ஆபத்தான சூழல் உருவானது. ஆனால், தேவன் அற்புதவிதமாக இடைப்பட்டு, அவர்கள் உயிரை காப்பாற்றினார்.

சகோதரி அன்னம்மா, தான் சொன்னபடியே, ஆண்டவருக்கு வாஞ்சையுடன் ஊழியம் செய்ய தொடங்கினார்கள். அவர்கள் இயேசு அழைக்கிறார் கூட்டங்களுக்கு தன்னார்வமாக வந்து இயேசுவை குறித்து பகிர்ந்துகொண்டு, தேவைகளோடு இருக்கும் மக்களுக்காக ஜெபித்தார்கள். பின்னர், தன் வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஊழியத்திற்கு தன்னை அர்ப்பணித்தார்கள். தேவன் அவர்கள் குடும்பத்தை பூரணமாக ஆசீர்வதித்தார். அவர்கள் பிள்ளைகள் நன்றாக படித்து, உயர்ந்த வேலைகளில் அமர்ந்தார்கள்; பிள்ளைகளுக்கு தெய்வ பக்தியுள்ள வாழ்க்கை துணை அமைந்து, குழந்தைகளும் பிறந்தனர். அவர்களை பங்காளராக இணைத்ததினால் ஆண்டவரை துதிக்கிறேன். அவர்கள் தற்போது எல்லாவிதத்திலும் நிறைவாய் இருக்கிறார்கள். இயேசுவின் அன்பின் மூலமாக அவர்களால் நன்மை செய்ய முடிந்தது.

நீங்களும் இயேசுவின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, அவர்களுக்காக ஜெபிப்பதற்கு நேரத்தை செலவிடும்போது, தேவன் உங்கள் வாழ்வில் நன்மை செய்வதை அனுபவிக்கலாம். தேவனுடைய ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பி, அன்பினால் ஒருவருக்கொருவர் நற்கிரியை செய்யுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, அன்பினால் ஒருவருக்கொருவர் நற்கிரியை செய்யவேண்டியதன் அவசியத்தை எனக்கு போதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தேவனாகிய நீர், உம்முடைய பிள்ளைகளை தேற்றுவதற்கு வாஞ்சையுள்ளவராகவும், அவர்கள் மத்தியில் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவராகவும் இருக்கிறீர். என் வாழ்க்கையில் நீர் வைத்திருக்கும் அழைப்பினால், என்னை முழுதாய் ஆளுகை செய்து வழிநடத்துவீர் என்று நம்பி, என்னுடைய விருப்பங்களையும் எண்ணங்களையும் விட்டுவிடுகிறேன். என்னுடைய சொந்த தேவைகளுக்கும் அப்பால் உள்ளவற்றை நான் காணும்படி எனக்கு உதவி செய்து, என் இருதயத்தை உம்முடைய அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் நிரப்பும். தொலைந்துபோனவர்கள், புண்பட்டவர்கள் குறித்து எனக்கு பாரத்தை தந்து, அவர்கள் தேவைகளுக்காய் உண்மையாய் நான் ஜெபிக்கும்படி செய்யும். நீர் கிருபையாக எனக்கு தந்திருக்கும் நேரத்தை, மற்றவர்கள்மேல் அன்பு செலுத்தி, உம்முடைய வார்த்தையை பகிர்ந்துகொள்ள பயன்படுத்துவதற்கு எனக்கு கற்றுத்தாரும். உம்முடைய மகிமைக்காக நீர் என்னை வல்லமையாக பயன்படுத்துவீர் என்று நம்பியும், உம்முடைய நாமத்தினால் செய்யும் எல்லா நற்கிரியைக்கும் பலன் தருவீர் என்று விசுவாசித்தும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.