எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்" (1 கொரிந்தியர் 10:13) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை இன்றைக்கு தியானிப்போம். இந்த வசனத்தில் கவனிக்கவேண்டிய இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன. முதலாவது, 'தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்கமாட்டார்'. இரண்டாவது, 'சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்'

அன்பானவர்களே, நீங்கள் சோதிக்கப்படும்போது, கவலைப்படாதிருங்கள். சிலவேளைகளில் வேதனை, தாங்க இயலாததாக இருக்கும்; ஏன் சோதனை வருகிறது? ஆண்டவர் ஏன் அதை அனுமதிக்கிறார்? என்று நீங்கள் கேட்கலாம். திடன்கொள்ளுங்கள்! நீங்கள் அதை தாங்கிக்கொள்ளும்வண்ணம், அதற்குத் தப்பித்துக்கொள்ளும் வழியையும் ஆண்டவர் கொடுப்பார். இதை நாம் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். நம் தேவனுடைய பிரதானமான குணாதிசயம் என்ன? "தேவன் உண்மையுள்ளவர்" என்று வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 1:9; 1 தெசலோனிக்கேயர் 5:24). ஆம், நாம் சேவிக்கும் ஆண்டவர் உண்மையுள்ளவர். தேவனுடைய வார்த்தையிலிருந்து நாம் வாசித்து, கேட்டுக்கொள்ளுகிறவற்றை அவர் நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தம் ஜனங்களுக்கு வெற்றியை அருளுவதில் அவர் எப்போதும் அக்கறையாயிருக்கிறார்.

ஆகவே, அன்பானவர்களே, சோதனையின் வழியாக கடந்துசெல்லும்போது நீங்கள் பயப்படவேண்டிய அவசியமில்லை. மோசே, தாவீது இவர்களின் வாழ்க்கையை பாருங்கள். அவர்கள் ஆண்டவருக்கு மிகவும் உண்மையாயிருந்தார்கள் (எபிரெயர் 3:5 & 2 சாமுவேல் 2:6). அவர்கள் இருவருமே பல உபத்திரவங்களின் வழியாக, சோதனைகளின் வழியாக கடந்துசென்றார்கள். ஆனால் கர்த்தர் அவர்களுடன் இருந்தார். உண்மையுள்ளவர்களாக இருந்ததினால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது? "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறவண்ணம் அவர்கள் இருவருமே தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றனர். நீங்கள் கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால், ஆண்டவர் உங்களை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார் (லூக்கா 19:17) என்றும் வேதம் கூறுகிறது.

தேவன்மேல் உங்களுக்கு எந்த அளவுக்கு விசுவாசம் இருக்கிறது? தேவன் உண்மையுள்ளவர் என்றும் உங்கள் குறைவுகளையெல்லாம் அவர் நிறைவாக்குவார் என்றும் முற்றிலுமாக விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், நாம் இப்போது தியானித்ததுபோல, பூரணமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அந்த விசுவாசத்தோடு நாம் தொடர்ந்து ஆண்டவரை நம்பி, அவரையே நோக்கிப் பார்ப்போம்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீர் உண்மையுள்ள தேவனாயிருக்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தப்பித்துக்கொள்வதற்கான வழியை எனக்கு காட்டுவதாக உறுதியாக கூறுவதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீரே எல்லாவற்றையும் பொறுப்பேற்றுக்கொள்வதால் உம்முடைய நுகம் சுமப்பதற்கு இலகுவானதாக இருக்கிறது. எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை நம்பி, ஜெயம்பெறுவதற்கு எனக்கு உதவி செய்யும். நீர் ஒருபோதும் என் கரத்தை விட்டுவிடாமல், வெற்றியின் பாதையில் என்னை நேர்த்தியாய் நடத்துவீராக. நீர் என்னில் நற்கிரியையை தொடங்கியிருக்கிறீர் என்றும், அதை நிறைவேற்றி முடிக்க உண்மையுள்ளவர் என்றும் முழு இருதயத்தோடு நம்புகிறேன். என் வாழ்க்கையை சகல ஆசீர்வாதங்களாலும் நீர் அலங்கரிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.