அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கும் தேவன் நம்மை பொறுப்பெடுத்துக்கொள்வார் என்று திடநம்பிக்கையாயிருப்போம். "கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்" (சங்கீதம் 100:3)என்ற வசனத்தின் மூலம் நாம் நம்பிக்கை பெற்றுக்கொள்ளலாம். ஆம், அன்பானவர்களே, கர்த்தரே நம் தேவன் என்பதை நான் அறிந்திருக்கவேண்டும்; அதை மறந்துபோகக்கூடாது. அவர் அவ்வளவு வல்லமையும் மகத்துவமுமான தேவன். நாம் அவருடைய ஜனங்கள் என்று இந்த வசனம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. அவர் நம்மை உண்டாக்கினார்; நாம் அவருக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறோம். இந்த உலகில், நாம் நம் பெற்றோருக்கு, நம் தேசத்துக்கு, நமக்கு அன்பானோருக்கு சொந்தமானவர்களாக இருக்கிறோம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாக இருக்கிறோம். அவர் ஒருபோதும் நம்மை தள்ளிவிட மாட்டார். "நீங்கள் என் ஜனம்," என்று அவர் கூறுகிறார். அவரது ஜனமாகிய நம்மை அவரே வழிநடத்தி, நம்பேரில் அக்கறையாயிருப்பார்.
தம் ஜனங்களுக்கு தேவன் என்ன செய்கிறார்? "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்" (சங்கீதம் 91:1)என்று வேதம் கூறுகிறது. நாம் அவருடைய நிழலில், அவருடைய தெய்வீக பாதுகாப்பில் பத்திரமாய் காக்கப்படுகிறோம்; ஒன்றும் நம் உயிரைப் பறிக்க இயலாது. "நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்" (சங்கீதம் 103:5)என்றும் வேதம் கூறுகிறது. தேவன் நம் தேவைகள் யாவற்றையும் அருளிச்செய்து, நம்முடைய வாழ்வை ஆசீர்வாதங்களினால் நிரப்பி, நாம் ஒன்றிலும் குறைவுபட்டு விடாமல் காத்துக்கொள்கிறார். நமக்கு தேவையானவற்றை தரும் ஆதாரமாக அவரே விளங்குகிறார்; எந்த தருணத்திலும் நமக்கு வேண்டியவற்றை அவர் தந்தருளுவார் என்று நாம் நம்பலாம். ஆண்டவரே, நீர் தவறாமல் எல்லாவற்றையும் தருவதால் உமக்கு ஸ்தோத்திரம்.
இறுதியாக, "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதிமொழிகள் 3:6)என்று வேதம் நமக்கு உறுதியளிக்கிறது. நாம் அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது, அவர் நமக்கு ஞானத்தோடும், அக்கறையோடும் வழிகாட்டி, பாதுகாத்து, நம் அடிகளை நேர்த்தியாய் நடத்துவார். வாழ்வின் எல்லா தருணங்களிலும் நம்மை காக்கிறவரின், நமக்கு வேண்டியவற்றை அருளுகிறவரின், நம்மை வழிநடத்துகிறவரின் கரம் செயல்படுவதை உணர முடியும். அவரால் நம் வாழ்வு காக்கப்படுகிறது; ஆசீர்வதிக்கப்படுகிறது. உங்கள் இருதயத்தை உயர்த்தி துதித்து, ஆச்சரியமான இந்த ஆசீர்வாதத்தை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் சிருஷ்டிகராகவும், என் தேவனாகவும், என்னை உருவாக்கியவராகவும், என்னை சொந்தம் கொண்டாடுகிறவராகவும் நீர் இருக்கிறபடியால் உம்மை துதிக்கிறேன். என்னை ஒருபோதும் தள்ளாமல், உம்முடைய நிழலில் பத்திரமாய் காத்து, எல்லா தீங்கிலிருந்தும் பாதுகாக்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எல்லா நன்மைகளினாலும் என் விருப்பங்களை திருப்தியாக்கி, எனக்கு தேவையானவற்றை பூரணமாகவும், தவறாமலும் அருளிச்செய்கிறீர். நீரே என்னை காக்கிறீர்; எனக்கு வேண்டியவற்றை அருளுகிறீர்; நீதியின், சமாதானத்தின் பாதைகளில் நடத்துகிறீர். நீர் ஞானத்தோடும் அக்கறையோடும் என்னை வழிநடத்துகிறீர் என்று அறிந்து உம்மை பூரணமாய் நம்புகிறேன். உம் அன்பு என்னை சூழ்ந்துகொள்கிறது. உம்முடைய ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கையை சந்தோஷத்தாலும் பாதுகாப்பாலும் நிரப்புகிறது. என்னை உமக்கு சொந்தமானவனா(ளா)க்கி, "இவர்கள் என் ஜனம்," என்று கூறுவதற்காக உமக்கு நன்றி. உம் வாக்குத்தத்தங்கள்மேல் எப்போதும் திடநம்பிக்கையாயிருந்து, உம்முடைய கிருபையில் நான் மகிழ உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.