அன்பானவர்களே, இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு ஆசீர்வாதமானதாக அமையும்படி வாழ்த்துகிறேன். இயேசுவின் பிறப்பு, உங்கள் இருதயத்தை அளவில்லாத சந்தோஷத்தால் நிரப்புவதாக. "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" (லூக்கா 2:10)என்று வேதம் கூறுகிறது. இது நற்செய்தி மட்டுமல்ல; எல்லா செய்திகளிலும் மிகச்சிறந்த செய்தியுமாகும். தங்கள் இரட்சகராகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற சத்தியத்தை மேய்ப்பர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். இந்த நற்செய்தி அவர்களுக்குக் கிடைத்ததுமே அவர்கள் செயலில் இறங்கினார்கள். தங்களுக்காக பிறந்த இயேசுவை காண அவர்கள் விரைந்தார்கள். "அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள்" (லூக்கா 2:17)என்று வேதம் கூறுகிறது. மெய்யானதும், அழியாததுமான சந்தோஷத்தை தரும் இந்த நற்செய்தியை அவர்கள் வாஞ்சையாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த நற்செய்தி மெய்யாகவே வாழ்க்கையை மாற்றுகிறது. இது தனிப்பட்டவிதத்தில் உரியதான, நன்மை தரக்கூடிய, ராஜரீகமான சந்தோஷமாகும். நாம் மகிமையின் ராஜ்யத்தின் சந்ததி என்ற நிச்சயத்தை இந்த செய்தி தந்து நம்மை ஆறுதல்படுத்துகிறது. தேவனே நம்மை தம்முடைய குமாரர், குமாரத்திகள் என்று அழைப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம். நாம் அவரை விசுவாசிக்கும்போது, அவர் நம்மை தம்முடைய குடும்பத்திற்குள் வரும்படி வரவேற்கிறார்; தம்முடைய நித்திய ராஜ்யத்தில் நம்மை ஏற்றுக்கொள்கிறார். நாம் ராஜரீக குடும்பத்தினராகிறோம்.
ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பினால் கிடைக்கும் சந்தோஷத்தை இந்த நற்செய்தி தருகிறது. இந்த சந்தோஷத்தை நம்மிடமிருந்து யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. கிறிஸ்துமஸின் சந்தோஷம், காலப்போக்கில் மங்கிப்போகாது. அது எப்போதும் நம்மிடம் இருக்கும். இந்த நற்செய்தியை அறிவிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், விசுவாசிக்கிறவர்கள் யாவருக்கும் இந்த ராஜரீக சந்தோஷம் சொந்தமாகும். மேய்ப்பர்கள், இந்த நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டதைப் போல நாமும் செய்வோம். இயேசுவே நாம் ஜீவனோடிருப்பதற்கு காரணமாயிருக்கிறார்; சகல ஆசீர்வாதங்களின் ஊற்றாயிருக்கிறார். இயேசுவை இந்த உலகிற்குள் கொண்டு செல்லுவோம். இயேசு கிறிஸ்துவே ஆண்டவர், அவர் இந்த உலகில் ராஜாவாக, நமக்கு ராஜரீக சந்தோஷத்தை அளிப்பதற்காக பிறந்தார் என்று கூறுவோம். இந்த ராஜரீக சந்தோஷம் சதாகாலமும் உங்களுடன் இருப்பதாக. இந்தப் பண்டிகை காலத்தில் இயேசு உங்கள் வாழ்வில் பிறப்பாராக. அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கூறுவோம்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என்னுடைய இரட்சகரும் ராஜாவுமாகிய உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஈவாக தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மையும் உம்முடைய அன்பையும் அறிகிறதால் வருகிற ராஜரீக சந்தோஷத்தினால் என் உள்ளத்தை நிரப்பும். இந்த நற்செய்தியை மேய்ப்பர்களைப் போல வாஞ்சையாகவும் உண்மையாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவி செய்யும். உம்முடைய மகிமையையும் அன்பையும் காட்டுகின்ற, உம்முடைய பிள்ளையாக வாழ்வதற்கு எனக்கு போதித்தருளும். கிறிஸ்துமஸின் சந்தோஷம், பண்டிகை காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் என் உள்ளத்தில் நிலைத்திருக்கட்டும். நம்பிக்கையின் செய்தியை அளிக்கிறவனா(ளா)க, இயேசுவின் வெளிச்சத்தை உலகத்திற்கு நான் தைரியமாக அறிவிப்பதற்கு உதவி செய்யும். எனக்கு நித்திய ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் தருவதற்காக பிறந்த ராஜாதிராஜாவுக்கு கனம் கொண்டு வரும்படி என் வாழ்க்கை அமைவதாக. என்னை உமக்கு அர்ப்பணிக்கிறேன். நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்முடைய வழிகாட்டுதல் விளங்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.