அன்பானவர்களே, இன்றைக்கு, "நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக" (சங்கீதம் 119:76) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இன்றைக்கு ஆண்டவரின் கிருபை உங்களை தேற்றும்.

'கிருபை' என்பது உறுதியான அன்பாகும். 'உறுதி' என்பது, ஒருபோதும் மாறாத ஒன்றை, ஓரிடத்தில் இறுக்கமாக பொருத்தப்பட்ட ஒன்றை, அசையாத ஒன்றை குறிக்கும். தேவனுடைய மாறாத அன்பே, கிருபையாகும். அவரது அன்பு ஒருபோதும் மாறாது. "உமது கிருபை வானபரியந்தமும்... எட்டுகிறது" என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 57:10). ஆம், இன்றைக்கு அவர் தமது அன்பை உங்கள்மேல் பொழிகிறார்.

ஹச்சி நாயின் கதை நமக்குத் தெரியும். இது ஜப்பானில் நடந்த கதை. பேராசிரியர் ஒருவர், ஹச்சிக்கோ என்ற பெயருள்ள நாயை வளர்த்து வந்தார். அவர் தினமும் வேலைக்குச் செல்வார். அந்த நாய், தினமும் ரயில் நிலையத்திற்கு அவருடன் சென்று, அவர் திரும்பும் வரைக்கும் அங்கே காத்திருக்கும். வருடம் முழுவதும் நாள்தோறும் இப்படியே நடக்கும். ஒருநாள், அந்தப் பேராசிரியர் மரித்துவிட்டார். ஆனாலும், ஹச்சிக்கோ ரயில் நிலையத்தில் அவரை எதிர்பார்த்து காத்திருந்தது. அது பொறுமையாக காத்திருந்தது. நேரம் சென்றதும், மக்கள் அதைக் கண்டு அதற்கு உணவு கொடுத்து, அன்பை காட்டி, அதற்கு தங்க இடம் கொடுத்தனர். தன் உரிமையாளருக்கு அது விசுவாசமாயிருந்து, அவருக்காக காத்திருந்ததை மக்கள் கண்டனர். மரணம் வந்தபோது கூட, உரிமையாளர்மேல் அது வைத்திருந்த அர்ப்பணிப்பு மாறவில்லை. அதன் நீடிய பொறுமையும் அன்பும் அநேகருடைய உள்ளத்தை தொட்டது. அன்பானவர்களே, ஒரு நாய், தன்னுடைய உரிமையாளர்மேல் இவ்வளவு அன்பை காட்ட முடியுமென்றால், தேவன், நம்முடைய பாவங்களை தம்மேல் ஏற்றுக்கொண்டு, நமக்காக மரித்ததினால், எவ்வளவு பெரிதான அன்பை விளங்கப்பண்ணியிருக்கிறார்! நாம் தனியே இருப்பதை அவர் விரும்பாமல், நம்மேல் கரிசனையுள்ளவராய், நமக்கு தம்முடைய பரிசுத்த ஆவியானவரை தந்திருக்கிறார்.

நீங்கள் செய்த காரியங்கள் உங்களை தேவனிடமிருந்து தூரமாக்கிவிட்டன என்று இன்றைக்கு நீங்கள் உணரக்கூடும். தேவனிடம் திரும்பும்படி நீங்கள் விரும்பினாலும், முடியுமா என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுந்திருக்கலாம். அன்பானவர்களே, மரணமானாலும், ஜீவனானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:38,39). ஆகவே, திடன்கொள்ளுங்கள். தேவனுடைய கிருபை இன்று உங்கள்மேல் ஊற்றப்படுகிறது. அது ஒருபோதும் மாறாது. இந்த அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்க முடியாது. அவர் வாக்குப்பண்ணுகிறபடியே அவரது அன்பு உங்களை தேற்றும். ஆகவே, எவ்வளவு இக்கட்டுகள் இருந்தாலும், தேவ அன்பு உங்களை தேற்றும் என்பதையும், இக்கட்டுகளை மேற்கொள்ள உதவும் என்பதையும் மறந்துபோகாதிருங்கள்.  இன்றைக்கு இந்த அன்பை ஏற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய கிருபையை என்மேல் பொழிகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எவ்வளவு இக்கட்டுகளை நான் எதிர்கொள்ள நேரிட்டாலும், உம்முடைய வாக்குத்தத்தங்களின் மூலம் நீர் என்னை தேற்றவேண்டும் என்று ஜெபிக்கிறேன். இன்றைக்கும் உம்முடைய அன்பினால் என்னை நிறைத்து, நான் எதிர்கொள்ள நேரிடுகிற காரியங்கள் எல்லாவற்றையும் ஜெயிப்பதற்கு எனக்கு உதவி செய்யும். ஆண்டவரே, நான் ஒருபோதும் தனிமையாய் உணராதவண்ணம், உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எனக்குள் எழும்பி, என்னை தேற்றுவாராக. என் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச்செய்து என்னை ஆசீர்வதிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.