அன்பானவர்களே, இயேசு அழைக்கிறார் இணையதளத்தில் அல்லது காலண்டரில் இன்றைக்குரிய வாக்குத்தத்தத்தை நீங்கள் பார்க்கலாம். என் அம்மா மிகுந்த ஜெபத்துடன் தெரிவு செய்த இன்றைக்கான வாக்குத்தத்தம், "அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்" (2 கொரிந்தியர் 1:22) என்று கூறுகிறது. இந்த வசனத்தின்படி இன்றைக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.


தேவன், தாம் நம்மை சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதையும், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதையும், நாம் அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் சுதந்தரித்திருக்கிறோம் என்பதையும் காட்டும்படியாக நம்மேல் ஒரு முத்திரையைப் போட்டிருக்கிறார். தேவன் நம் இருதயங்களில் தந்தருளியுள்ள பரிசுத்த ஆவியானவர் மூலமாக இந்த முத்திரை உறுதிப்படுத்தப்படுகிறது. முத்திரையாகிய பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய நீதிக்கு நேராக நம்மை வழிநடத்துகிறார்; பிசாசு நம் வாழ்வுக்குள் கொண்டு வர முயற்சிக்கும் தீமையிலிருந்து நம்மை காக்கிறார்; பாவ சோதனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் கேடகமாய் விளங்குகிறார். ஆகவே, நாமே சுயமாக நீதியுள்ள வாழ்க்கை நடத்த முயற்சிக்கக்கூடாது. ஏதோ சில நல்ல காரியங்களை செய்வது தேவனுக்கு முன்பாக எல்லாவற்றையும் ஏற்றதாக மாற்றிவிடும் என்றோ நாம் ஆலயத்தில் அல்லது போதகருக்கு உதவி செய்வது தேவனுக்கு மகிழ்ச்சியாயிருக்கும் என்றோ நாம் எண்ணிவிடக்கூடாது. பாவத்தை மேற்கொள்வதற்கும், நம் வாழ்க்கையில் தேவனுடைய நீதியுள்ள சித்தத்தை செய்யவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அவசியம். தேவனுக்கு முன்பாக சுத்தமான வாழ்க்கையை நடத்துவதற்கு அவரே நமக்கு உதவி செய்கிறார். ஆகவே, ஆண்டவரிடம் கிருபையை கேளுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களை வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தை நீங்கள் கேட்பீர்கள்.


தாவீது பரிசுத்த ஆவியினால் பாதுகாக்கப்பட்டான். தேவ ஆவியினால் நிறைந்திருந்த அவனை ராஜாவாகிய சவுல் விரட்டினான். தாவீதின் உயிரை எடுப்பதற்கு விரும்பிய சவுல், தாவீதை இளைப்பாறவிடாமல் ஒவ்வொரு இடத்திற்கும் விரட்டினான்.  ஆனாலும், ஓரிடத்தில் சவுல் தூங்குவதை தாவீது கண்டான்; அப்போது சவுல், தாவீதின் கரங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தான். தன் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருந்த சவுலின்மேல் கோபங்கொண்டு, எளிதாக அவனை தாவீது பழிதீர்த்துக்கொண்டிருக்கமுடியும். மாறாக, தாவீது, பழிதீர்க்கும் தன் விருப்பத்தை விட்டுவிட்டு, தேவ ஆவியானவருக்கு செவி கொடுத்தான். அவன், "தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்மேல் நான் எப்படி கைபோடுவது? சவுலே, நீர் தேவனால் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவர். அதை நான் மதிக்கிறேன்," என்று கூறினான். நாம் சரியான முடிவுகளை எடுப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எப்படி நம்மை வழிநடத்துகிறார் என்பதை இது காட்டுகிறது. பதிலுக்கு சவுல், தாவீதை வாழ்த்தி, தாவீது தேவனால் நியமிக்கப்பட்டவன்; அபிஷேகம்பண்ணப்பட்டவன் என்பதை ஏற்றுக்கொண்டான். வேதாகமத்தில் காணப்படும் இந்த சம்பவம், நம்முடைய சிறிய கீழ்ப்படிதலும் இவ்வுலகின் ராஜாக்களுக்கு மேலாக நம்மை உயர்த்தும் என்பதை காட்டுகிறது. தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ்வதையும், அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவதையும் மேலானதாக கருதுவோம்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பரிசுத்தமாக வாழ்வதற்கு அச்சாரமாக நீர் பரிசுத்த ஆவியானவரை கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பரிசுத்தமாக வாழும்படி உம்முடைய ஆவியானவர் எனக்கு போதிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவரே, நான் உம்மை வரவேற்கிறேன். தயவாய் என்னை உம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து வழிநடத்தும். எனக்குள் வாசம்பண்ணும்; பரிசுத்தமும் நீதியுமாய் வாழ்வதற்கு என்னை நடத்தும். பாவத்தை, என் இருதயத்தினுள் கேட்கும் பிசாசின் குரலை, மாம்சத்தின் சத்தத்தை மேற்கொள்ளவேண்டிய வல்லமையை எனக்கு தந்தருளும். நான் அனுதினமும் உம்மோடு நடக்கும்படி உம்முடைய நீதியை நான் காத்துக்கொள்ள உதவும்.  என் வாழ்வின்மேல் நீர் விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவரை முத்திரையாய் போட்டிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.