எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்" (நீதிமொழிகள் 12:7) என்ற வாக்குத்தத்தத்தை நாம் தியானிப்போம். இது எவ்வளவு பெரிய வாக்குத்தத்தம்! நீதிமானின் வீடு அசையாமல் நிலைத்திருக்கும்.

ஆண்டவருக்கு முன்பாக நீங்கள் நீதியாய் வாழ்ந்தால், உங்கள் வீடு என்றைக்கும் நிலைத்திருக்கும். சவுல் ராஜா, தாவீதின்மேல் பொறாமை கொண்டு அவனை அழிக்க தேடியபோது, தேவன், " உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்" (2 சாமுவேல் 7:16) என்ற வல்லமையான வாக்குத்தத்தத்தை தாவீதுக்குக் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் தாவீதுக்கு, ஒரு தேவ ஊழியன் மூலம் கொடுக்கப்பட்டது; அதே வாக்குத்தத்தம் இன்று உங்களுக்கும் கிடைக்கிறது. இந்த வார்த்தைகள் தாவீதை எவ்வளவாய் தைரியப்படுத்தியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

அவ்வாறே, ஒரு தேவ மனுஷியின் வாயிலாக. "கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்" என்ற இன்னொரு வார்த்தை தாவீதுக்கு கிடைக்கிறது (1 சாமுவேல் 25:28). மறுபடியும் தாவீது, "நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங்கீதம் 23:6) என்று நம்பிக்கையோடு அறிக்கையிடுகிறான். தாவீது ஏன் அப்படி அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தான்? "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" (சங்கீதம் 23:1) என்று அவன் கூறுகிறான்.

அன்பானவர்களே, இந்த வாக்குத்தத்தம் உங்களுக்குரியதாக, நீங்கள் கர்த்தரை உண்மையில் உங்கள் மேய்ப்பராக கொண்டிருக்கவேண்டும். நீங்கள் அவரை கனம்பண்ணவேண்டும்; விசுவாசிக்கவேண்டும்; வாழ்வின் எல்லா தருணங்களிலும் அவரை தேட வேண்டும். இவற்றை பேசுவது மாத்திரம் அல்லாமல், செயலில் காட்டவேண்டும். ஆண்டவரை விசுவாசியுங்கள்; அவருடன் நேரம் செலவழியுங்கள்; அவர் உங்கள் மேய்ப்பராயிருப்பார். அவர் உங்கள் மேய்ப்பராயிருக்கும்போது, நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்பட தேவையில்லை. ஆண்டவர் உங்கள் வீட்டை பூரணமாக ஆசீர்வதிப்பார். இப்போதும் உங்கள் வாழ்க்கை, உங்கள் வீடு, உங்கள் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் தேவனின் கரங்களில் ஒப்படைத்துவிடுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீதிமானின் வீடு நிலைத்திருக்கும் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்பி, விசுவாசம் நிறைந்த இருதயத்தோடு உம்மிடம் வருகிறேன். நீர் என் மேய்ப்பராயிருக்கிறீர். என் வாழ்க்கை முழுவதையும், என் வீட்டையும், என் குடும்பத்தையும் உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். பாக்கியவனாகிய தாவீதை நீர் பாதுகாத்ததுபோலவே, என் வீட்டையும் உம்முடைய தெய்வீக தயவினால் என்றென்றும் நிலைப்படுத்தியருளும்படி ஜெபிக்கிறேன். என்னை நீதியில் நடத்தி, வாழ்வில் எல்லா தருணங்களிலும் உம்மை தேடுவதற்கு உதவி செய்யும். உம்முடைய பிரசன்னமே என் பெலனாயிருக்கட்டும்; உம்முடைய சமாதானம் என் உள்ளத்தை நிரப்பட்டும். நான் உம்மை கனம்பண்ணி, பின்தொடர்வதால், என் வீடு எப்போது ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்தலமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, நீர் என் மேய்ப்பராகவும் திட அஸ்திபாரமாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.