அன்பானவர்களே, "உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும்" (உபாகமம் 20:4) என்று வேதம் கூறுகிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லும் முன்பு, மோசே அவர்களுக்கு யுத்தத்திற்கு வகுக்கப்பட்ட முறைகளை பற்றி விளக்குகிறான். முன்னேறிச் சென்று தேவனுடைய ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி கூறுகிறான். "நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று முதல் வசனம் கூறுகிறது.

நம் வாழ்விலும், பிரச்னைகளோடு போராடும்போது அல்லது நம்மை விட பெரியவர்களாக காணப்படுகிறவர்களுடன் மோத நேரிடும்போது, அதைரியப்படுகிறோம். ஆனாலும், அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் வாக்குப்பண்ணியதுபோல, ஜெயங்கொள்ளும் இடத்திற்கு இன்றைக்கு அவர் உங்களை கொண்டு வருவார். சத்துரு உங்களுக்கு விரோதமாக எழும்பும்போது, பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு விரோதமாக கொடியேற்றுவார். பெலவானாய் காணப்படுகிற யாருக்கும் அஞ்சாதிருங்கள். "பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவான் 4:4) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. வெளியே இருப்பதைக் கண்டு நீங்கள் பயப்படவேண்டாம்; ஏனென்றால், உங்களுக்குள் இருக்கிறது பெரிதானதாயிருக்கிறது.

"சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்" (சங்கீதம் 20:7) என்று வேதம் கூறுகிறது. இவ்வுலக மக்கள் தங்கள் செல்வத்தின்மேலும், தங்கள்மேலும் நம்பிக்கையாயிருக்கிறார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் இடறி விழுவார்கள். ஆனால், கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் நிச்சயமாகவே வெற்றி பெறுவார்கள். குதிரை யுத்தநாளுக்கென்று ஆயத்தமாக்கப்படும்; ஆனால், ஜெயமோ கர்த்தரால் வரும்.

கர்த்தர், அமலேக்கியருக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு வெற்றியை தந்தபோது, மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, "யேகோவாநிசி" என்று பெயரிட்டான் (யாத்திராகமம் 17ம் அதிகாரம்). அதற்கு "கர்த்தரே எங்கள் ஜெயமாயிருக்கிறார்" என்று பொருள். கர்த்தரே அவர்களுடன் சேர்ந்து யுத்தம்பண்ணி, விரோதிகளிடமிருந்து அவர்களை விடுவித்தபடியினால் மோசே, "யேகோவாநிசி" என்று அறிவித்தான்.

அன்பானவர்களே, கர்த்தர் உங்களோடிருக்கிறார்; உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். நீங்கள் அமர்ந்திருந்து, கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் அவரை மாத்திரம் நம்பவேண்டும். இன்றைக்கு நீங்கள் ஜெயம்பெறுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் செய்கிற எல்லா யுத்தத்திலும் நீர் என்னோடு இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எதிரிகளும் இக்கட்டுகளும் என்னை மேற்கொள்ளுவதுபோல் தோன்றும்போது, ஜெயம் தரும் உம் வாக்குத்தத்தத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். இந்த உலகில் நீர் அனைவரைக் காட்டிலும் பெரியவராயிருக்கிறீர். நீர் எனக்காக யுத்தம்பண்ணுகிறீர் என்பதை அறிந்து நான் சமாதானம் அடைகிறேன். என்னுடைய பயங்களை, கவலைகளை உம்முடைய காலடியில் வைக்கிறேன். நான் அமர்ந்திருந்து, நீர் தரும் விடுதலையை காணும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். நீர் இஸ்ரவேலரை மீட்டதுபோல, எல்லா உபத்திரவத்திலிருந்தும் என்னை மீட்டுக்கொள்வீர் என்று நம்புவதற்கு உதவி செய்யும். என்னுடைய சுயபெலத்தை அல்ல; உம்முடைய வல்லமையையே நான் சார்ந்திருக்கிறேன். நீரே என்னுடைய கொடியாகவும், ஜெயமாகவும் இருக்கிறீர் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.