அன்பானவர்களே, தேவன் நம்மேல் ஆசீர்வாதங்களை பொழிந்தருள்வதை பரவசத்தோடு எதிர்நோக்குகிறேன். "யேகோவாநிசி" (யாத்திராகமம் 17:15) என்று வேதம் கூறுகிறது. இதற்கு கர்த்தரே என் கொடியாயிருக்கிறார் என்று அர்த்தமாகும். கர்த்தர் நமக்கு அடையாளமாகும்போது, அவருடைய நாமத்தின் அடையாளம் நம் கொடியில் இருக்கும்போது, பயம் நடுங்கிப்போகும்; வல்லமையான காரியங்கள் நடக்கத் தொடங்கும். என் தாத்தா, ஒருமுறை தெய்வீக தரிசனத்தை கண்டார். தேவ தூதன் ஒருவன் நரகத்தை காணும்படி அவரை அழைத்துச் சென்றான். அங்கே அவர் பல்வேறு பிசாசுகளைக் கண்டார்; நடுவில் சாத்தான் சிங்காசனத்தில் இருந்தான். தேவனுடைய சிங்காசனத்தை ஒத்த ஒரு சிங்காசனத்தின்மேல் அவன் அமர்ந்து, தேசங்களை எப்படி கைப்பற்றுவது, தன் திட்டங்களை செயல்படுத்த எந்த மனிதனை பயன்படுத்துவது என்று பிசாசுகளுடன் ஆலோசித்துக்கொண்டிருந்தான். அவர்கள் தொடர்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்தபோது, தேவ தூதன், என் தாத்தாவின் பக்கமாய் திரும்பி, "தினகரன், இப்போது என்ன நடக்கிறது என்று பார்" என்று கூறினான். பின்னர், அவன் 'இயேசு' என்ற பெயரை மெதுவாகக் கூறினான். அவன் மெதுவாகக் கூறிய அந்த நாமம் நரகமெங்கும் எதிரொலித்தது. சாத்தானின் காதுகளை அது எட்டியபோது, அவன் தன் சிங்காசனத்திலிருந்து வேகமாக எழுந்து, "நம்மை நித்தியமாய் கட்டிப்போடுவதற்காக இயேசு திரும்ப வந்துவிட்டாரா?" என்று பயத்தில் கத்தினான். அந்த தருணத்தில் பிசாசுகள் அஞ்சி நடுங்கின. இயேசுவின் நாமத்திற்கு அவ்வளவு வல்லமை உண்டு. இன்றைக்கு ஆண்டவர், தாம் உங்களோடு இருப்பதை காண்பிக்கும் வண்ணம் உங்கள்மேல் தமது நாமம், கொடிபோல விளங்கும்படி செய்கிறார்.
அன்பானவர்களே, நாம் ஏன் பயப்படவேண்டும்? அவருடைய நாமத்தை எப்போதும் நம்மோடு வைத்திருந்து, அதைக் கனப்படுத்தவேண்டும்; ஒருபோதும் அதை விட்டுவிடக்கூடாது. நம்முடைய ஊழியத்தில், சமுதாயத்தின் பார்வையில், நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் நம்மீது அவரது நாமமே கொடியாக விளங்கட்டும். நாம் இயேசுவின் நாமத்தை சுமந்தவர்களாய், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்போது, சவால்கள் எழும்பும். தாக்குதல்கள் வரும். சத்துரு நம்மை சோதிப்பான். "நீ இவருக்குத் துரோகம் செய்தால், இவரைப் பற்றி தவறானவற்றை பேசினால், நாங்கள் உனக்கு பதவி உயர்வு கொடுப்போம்," என்று சிலர் கூறலாம். "நீ இவ்வளவு லஞ்சம் கொடுத்துவிட்டால், வேலை நடக்கும்," என்று சிலர் கூறலாம். நாம் சமரசம் செய்துகொள்கிறோமோ, இயேசுவின் நாமத்தை விட்டுவிடுகிறோமா என்று நம் விசுவாசத்தை சோதிக்கும் சோதனைகள் இவை.
நாம் அசைய மறுத்து, அவருடைய நாமத்தில் உறுதியாய் நிற்கும்போது, கர்த்தரை நம் கொடியாக வைத்திருக்கும்போது, எந்த மனுஷனாலும் உயர்த்த இயலாத அளவுக்கு அவர் நம்மை உயர்த்துவார். கர்த்தரை நம் கொடியாக கொண்டிருப்பதால் இந்த ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் கொடியாக, யேகோவாநிசியாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு அடையாளமாக நீர் விளங்குவதற்காக உமக்கு நன்றி. எனக்கு வெற்றியை தரும்படி யேகோவாநிசியாக நீர் என்னுடன் இருப்பதால் நான் சத்துருவின் தாக்குதலுக்குப் பயப்படமாட்டேன். என் வாழ்வில் எல்லாவற்றுக்கும் மேலாக, இயேசுவின் நாமத்தையே உயர்த்துகிறேன். எல்லா சோதனையின் மத்தியிலும் அசையாமல் விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும், உம் நாமத்தை நான் விட்டுவிடாமல் இருக்கவும் உதவி செய்யும். ஆண்டவரே, நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்மை மகிமைப்படுத்தும்படி, உம்முடைய சித்தத்தின்படி என்னை உயர்த்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.