அன்பானவர்களே, "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 16:8) என்று வேதம் கூறுகிறது.  தன் தங்கைமார் செல்லுமிடமெங்கும் உடன் செல்லும் அண்ணன்போல ஆண்டவர் உங்கள் பக்கம் இருக்கிறார். நானும் என் அக்காவும் எப்போது கடைகளுக்குச் சென்றாலும் என் சொந்த அண்ணன் திரு. சுந்தரராஜ் கூடவே வருவார். ஒருநாள் நாங்கள் வெளியே சென்றபோது, எங்களை குறைகூறிய ஒரு வாலிபனை, சட்டை காலரை பிடித்து இழுத்து, "என் தங்கைகளுக்கு எதிராக எப்படி பேசுவாய்?" என்று கண்டித்தார். எனக்கும் என் அக்காவும் எங்களை குறைகூறியது எதுவுமே காதில் விழவில்லை. ஆனால், எங்கள் அண்ணன் எங்கள்மீது கொண்ட பாசத்தினால் எங்களை காக்கும்படி செயல்பட்டார்; அப்படி பேசிய நபர் அந்த இடத்திலிருந்து ஓடிவிட்டார். அவ்வாறே ஆண்டவரும் ஓர் அண்ணனைப் போல உங்களுடன் இருப்பார். தேவன் வலதுபாரிசத்தில் இருக்கிறார் என்பது, அவர் உங்களை பாதுகாக்கும்படி வெகு சமீபத்தில் இருக்கிறார் என்பதை குறிக்கிறது. "ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்" (சங்கீதம் 109:31) என்று வேதம் கூறுகிறது. அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறபடியினால் நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. ஆண்டவர் உங்களை விட்டு தொலைவில் இல்லை; "முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்" (சங்கீதம் 139:5) கூறுவதுபோல அவர் வெகு சமீபமாய் இருக்கிறார்.

தேவன் நம் வலப்பக்கத்தில் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? ஜெபிப்பதை, தேவனுடைய வசனத்தை வாசிப்பதை, அவரை துதிப்பதை நாம் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். நாம் இவற்றை செய்யும்போது, ஆண்டவர் எப்போதும் நம் பக்கத்தில் இருப்பார்; வலப்பக்கத்தில் நிற்பார். ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பில், "என் கண்களை எப்போதும் கர்த்தர்மேல் வைத்திருக்கிறேன்," என்று எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறே நீங்களும் தொடர்ந்து ஜெபித்து, வேத வசனத்தை உங்கள் இருதயத்தில் வைத்து, அவரை துதித்து உங்கள் கண்களை அவர்மேல் வைத்திருக்க முடியும். அதையே தாவீது, "கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்" என்று சொல்கிறான்.

அன்பானவர்களே, ஒரு சிறுகணம்கூட தேவனை விட்டு விலகிவிடாதிருங்கள். தேவன் உங்கள் பட்சத்தில் இருந்தால் உங்களுக்கு விரோதமாக இருப்பவன் யார்? ஆண்டவரை எப்போதும் உங்களுக்கு முன்பாக, உங்கள் வலதுபாரிசத்தில், உங்களுக்கு பின்னாக வைத்திருங்கள்; உங்கள் கண்கள் அவர்மேலேயே நோக்கமாய் இருக்கட்டும். அவரது இரக்கம் உங்களை சூழ்ந்துகொள்ளட்டும். தேவனுடைய வசனம் எப்போதும் பாதுகாக்கிறதும், களிகூரப் பண்ணுகிறதுமாயிருக்கிறது. ஆகவே, ஆண்டவர்பேரில் அன்புகூருங்கள்; அவருடைய வசனத்தை காத்துக்கொள்ளுங்கள். அவர்தாமே உங்கள் இருதயத்தை, மனதை, வேலையை, வீட்டை நிரப்புவாராக. உங்கள் வாழ்க்கையில் அவரது பிரசன்னம் காணப்படட்டும்; அவரது பெலன் உங்களுக்குள் விளங்கட்டும். கர்த்தரை எப்போதும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்க இன்றே தீர்மானம் செய்யுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எப்போதும் உம் பிரசன்னம் என்னோடிருப்பதற்காக நன்றியுடன் உம்மிடம் வருகிறேன். ஓர் அண்ணன், தீங்கிலிருந்து காப்பதுபோல, நீர் எனக்கு கேடகமாக இருக்கிறீர் என்று நம்புகிறேன். நான் அசைக்கப்படாதபடி நீர் என் வலப்பக்கத்தில் இருக்கிறீர் என்பதை அறிந்து எப்போதும் உம்மேல் நோக்கமாயிருக்க எனக்கு உதவும். ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்கவும், உம்முடைய வார்த்தையில் மகிழவும், எப்போதும் உம்மை துதிக்கவும் என் இருதயத்தை பெலப்படுத்தும். என் வழிகளிலெல்லாம் என்னை நடத்தி, உம்முடைய இரக்கம் என்னை சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். என் உள்ளத்தையும் சிந்தையையும் வீட்டையும் உம்முடைய அன்பினாலும் சமாதானத்தினாலும் நிரப்பும். எனக்குள் உம்முடைய பெலமான ஜீவசுவாசத்தை ஊதும். உம்முடைய பிரசன்னத்திலிருந்து நான் விலகிவிடாமல், எப்போதும் உமக்கு அருகிலேயே இருக்கும்படி செய்யும். இப்போதும் எப்போதும் உம்முடைய பாதுகாப்பின்மேலும் அன்பிலும் நம்பிக்கை வைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.