அன்பானவர்களே, "பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்" (ஏசாயா 31:5) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். கர்த்தர், ஒரு பறவையைப் போல நம்மை பாதுகாக்கிறார். வேதாகமத்தில் பல இடங்களில் கர்த்தரை கழுகுடன் ஒப்பிட்டிருப்பதை காணலாம். நம்மை பாதுகாக்கும்படி கழுகைப்போல கர்த்தர் நம்மேல் அசைவாடுகிறார். கழுகு, பறவைகளின் ராஜாவாக கருதப்படுகிறது; அதிக பெலனுடையதாயிருக்கிறது. எல்லா விரோதிகளையும் கழுகினால் தாக்க முடியும். மனுஷனுக்கும் அது அச்சுறுத்தலாக இருக்கிறது. அதற்கு அதிக வல்லமையும் பெலனும் உண்டு.
அவ்வாறே சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன் நம்மை பாதுகாக்கிறார். தேவனுடைய பாதுகாப்பைக் குறித்து தாவீது நன்றாய் அறிந்திருந்தான். ”நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்” (சங்கீதம் 32:7) என்று அவன் கூறுகிறான். எந்த நேரம் ஆபத்து நேரிட்டாலும் நாம் சர்வவல்லவரின் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்திடலாம்.
ஒருமுறை, நாங்கள் வெளிநாடு ஒன்றிற்கு சென்று இறங்கியபோது, ஒரு நண்பர், விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்க வேண்டிய இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் உற்சாகமடைந்து எங்களுடன் பேசிக்கொண்டே இருந்தார். குடும்பத்தினர் அனைவருமே காரில் இருந்தனர். அதிக உற்சாகத்தின் காரணமாக, போக்குவரத்து விளக்கை அவர் கவனிக்க தவறிவிட்டார். சிவப்பு விளக்கு ஒளிர ஆரம்பித்தது. ஆனால், அவர் தொடர்ந்து சென்று சிவப்பு கோட்டை கடந்துவிட்டார். திடீரென இடப்பக்கமிருந்து ஒரு கார் வந்து எங்கள் கார் மீது மோதியது. என்ன நடக்கிறதென்று நாங்கள் புரிந்துகொள்வதற்கு முன்பு, அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்துவிட்டது. நாங்கள், "இயேசுவே," என்று கத்தினோம். எங்களால் அதை மட்டுமே செய்ய முடிந்தது. அந்த தருணத்தில் ஆண்டவர், எங்கள் முழு குடும்பத்தையும் அந்த நண்பரையும் அற்புதவிதமாக காப்பாற்றினார். கார் மட்டுமே சேதமடைந்தது; நாங்கள் அனைவரும் பத்திரமாய் இருந்தோம். எங்களை பாதுகாத்து, மீட்டுக்கொண்ட தேவன் எவ்வளவு நல்லவர். அவரே நமக்கு மறைவிடமாயிருக்கிறார். சத்துரு எந்த சமயமும் நம்மை தாக்கக்கூடும். "எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1 பேதுரு 5:8) என்று வேதம் கூறுகிறது. ஆனால், எதிராளியாகிய பிசாசிடமிருந்து ஆண்டவர் நம்மை காப்பாற்றுகிறார். சத்துரு, திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறான். ஆனாலும், "கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்" (சங்கீதம் 121:7) என்று வேதம் கூறுகிறது. நம் தேவன் எவ்வளவு நல்லவர்!
நாங்கள் ஊழியம் செய்யும்படி 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணித்திருக்கிறோம். ஆண்டவர் இந்த எல்லா இடங்களுக்கும் எங்களுடன் வந்திருக்கிறார். தாய் பறவை, தன் குஞ்சுகளைக் காப்பதுபோல, ஆண்டவர் எங்களைப் பாதுகாத்திருக்கிறார். எந்தத் தீங்கும் எங்களைச் சேதப்படுத்த இயலவில்லை. அவ்வாறே உங்களைப் பாதுகாப்பதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். ஆண்டவர் உங்களைக் காக்கிறவராய் மட்டுமல்ல; உங்களை விடுவிக்கிறவருமாயிருக்கிறார். அவர் உங்களைத் தப்புவித்து, மீட்டுக்கொள்வார்.
ஜெபம்:
பரம தகப்பனே, நீர் என்மீது அன்பு கொண்டு என்னை பாதுகாப்பதை எண்ணி நன்றியுடன் உம் முன்னே வருகிறேன். வலிமையான கழுகுபோல நீர் எருசலேமின்மேல் பறந்து காக்கிறவண்ணம், என்னை எப்போதும் கண்ணோக்கிக் கொண்டிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். நீர் எனக்கு மறைவிடமாயும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என்னை சுகமாய்க் காத்துக்கொள்வீர் என்று அறிந்து ஆபத்துக்காலத்தில் உம் செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்து சேர்கிறேன். ஆண்டவரே, என்னை வழிநடத்தி, என்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகளிலிருந்தும் விரோதிகளிடமிருந்தும் என்னை பாதுகாத்துக்கொள்ளும். என் இருதயத்தை சமாதானத்தாலும் உம்முடைய வாக்குத்தத்தங்கள்மேலான திடநம்பிக்கையினாலும் நிறைத்தருளும். என்னையும் எனக்கு அன்பானோரையும் பலவிதங்களில் நீர் பாதுகாத்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். உம்முடைய பெலனையும் அன்பையும் நான் ஒருபோதும் மறவாதிருக்க உதவி செய்யும். நீரே என்னை பாதுகாக்கிறவராயும் விடுவிக்கிறவராயும் இரட்சிக்கிறவராயும் இருக்கிறீர் என்று அறிந்து உம்மை விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.