அன்பானவர்களே, "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து... எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப்போஸ்தலர் 1:8) என்று ஆண்டவர் கூறுகிறார். ஆம், பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பும்போது, தேவனாகிய கர்த்தரின் வல்லமை உங்களுக்குள் வரும். தேவனுடைய இதே வல்லமையே கன்னிமரியாளின்மேல் வந்தது. பரிசுத்த ஆவியானவர் அவள்மேல் வந்தபோது, தேவன்தாமே அவளது கருவின் உருவானார். இந்த ஆச்சரியமான வல்லமையையே நீங்கள் பெறுவீர்கள். இல்லாதவை, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் உருவாக்கப்படும். இதன் மூலம் நீங்கள் அவருக்கு சாட்சியாவீர்கள். மரியாள், இயேசுவை பெற்றெடுத்து, தேவனை இவ்வுலகிற்கு கொண்டு வந்த சாட்சியாக, தேவனாகிய கர்த்தரின் ஊழியக்காரியாக மாறினாள்.

இன்றும், ஆண்டவர் உங்களை ஜீவனுள்ள தேவனின் ஊழியராக, தமது வல்லமைக்கு சாட்சியாக, மற்றவர்களுக்கு அற்புதங்களை கொண்டு வருகிறவராக மாற்ற வாஞ்சிக்கிறார். ஆனால், உங்களை கட்டும்படியும், உடைக்கும்படியும், சங்கிலிகளால் சிறைப்படுத்தும்படியும், உங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறும்படியும் தீய வல்லமைகள் எழும்புகின்றன. பிசாசு, திருடவும் கொல்லவும் அழிக்கவுமே வருகிறான். ஆனால், இயேசு ஜீவனை தருகிறதற்கு வருகிறார். பிசாசின் வல்லமையை முறிப்பதற்கு தேவன், தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குள் அனுப்பியிருக்கிறார். ஆம், நீங்கள் அவரைப் பெற்றுக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வரும்போது, அவர் கிறிஸ்துவை அளிக்கின்ற, கிறிஸ்துவை அனுபவிக்கின்ற, தேவனுடைய பூரண ஆசீர்வாதங்களால் மகிழுகின்ற வல்லமையால் உங்களை நிரப்புவார்.

மரியாள் இயேசு பாலனை ஏற்றுக்கொண்டபோது, தேவனுடைய ஆசீர்வாதத்தின் பூரணத்தையும் பெற்றுக்கொண்டாள். எல்லா ஆசீர்வாதமும் இயேசுவுக்குள் மறைந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளாக நிரம்புவதன் மூலம் உங்களுக்குள் இயேசு பிறப்பார்; அப்போது எல்லா ஆசீர்வாதங்களும் உங்களுக்குள் பிறக்கும். இன்றைக்கு தமது வல்லமையினால் உங்களை நிரப்புவதற்கு அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரை சேர்ந்த மந்தனா என்ற சகோதரியின் சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் தீவிரமான தலைவலியினாலும் தலைசுற்றினாலும் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்கள் கணவர், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்ன நோயாக இருக்கும் என்று மருத்துவர்கள் கணித்தார்களோ, அவற்றுக்கான சோதனைகள் எல்லாவற்றையும் செய்தார்கள். ஆனால், எந்தக் காரணமும் பரிசோதனையில் தென்படவில்லை. மருந்துகளை கொடுத்தார்கள். ஆனால் உடல் நலிவுற்றுக்கொண்டே போனது. பிறகு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்கள். அப்போது, அவர்கள் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியை ஃபேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் பார்த்தார்கள். "இவர்கள் நம் நகரத்திற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று அவர்கள் எண்ணினார்கள். ஆச்சரியவிதமாக, நாங்கள் அவர்கள் பட்டணமாகிய அம்பிகாபூருக்கு வரும் செய்தியை கேள்விப்பட்டார்கள். கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். முதல்நாள் கூட்டத்தில், வலியினால் வேதனைப்படும் அனைவருக்காகவும் நான் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மேல் தேவ பிரசன்னம் இறங்கியது. அந்தக் கணமே தலைவலி மறைந்தது. மறுநாள் நடந்த பங்காளர் கூட்டத்தில் சகோதரி இவாஞ்சலின், அனைவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படி ஜெபித்தார்கள். அப்போது, தேவன் ஜனங்களில் நரம்புகளை குணப்படுத்துவதாக கூறினார்கள். அப்போது, சகோதரி மந்தனாமேல் பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக இறங்கினார். அவர்கள் மயக்கம் மறைந்துபோனது. தலைவலியும் தலைசுற்றலும் குணமாகி அவர்கள் பூரண ஆரோக்கியமடைந்தார்கள். இப்போது புது ஜீவனோடு ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்ந்து வருகிறார்கள். அவ்வாறே உங்களையும் நிரப்புவதற்கு தேவன் விரும்புகிறார்கள். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என்னை நிரப்புவதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே, நீர் மரியாள்மேல் இறங்கி, அற்புதமானதை பிறப்பித்ததுபோல, என்னையும் உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பும்; ஆண்டவர் இயேசு என் உள்ளத்திலும் பிறக்கட்டும். என்னை கட்டியிருக்கிற இருளின் சங்கிலிகள் எல்லாவற்றையும் உடைத்தருளும்; என் ஆத்துமாவுக்கு திரும்பவும் நம்பிக்கையை தாரும். இந்த உலகில் உம்முடைய மகிமைக்கு சாட்சியாக விளங்கும்படி உம்முடைய வல்லமை என் மூலம் பாய்ந்து செல்லட்டும். கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கும் எல்லா ஆசீர்வாதமும் வெளிப்பட்டு, என் வாழ்வை நிறைவாக்கட்டும். தீமைக்கு விரோதமாக உறுதியாக நிற்பதற்கும், உம்முடைய அன்பின் பூரணத்தில் நடக்கவும் தேவையான தைரியத்தை எனக்கு தந்தருளும். மற்றவர்களுக்கு அற்புதங்களின், சுகத்தின், சந்தோஷத்தின் பாத்திரமாக என்னை பயன்படுத்தும். உம்முடைய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு, இன்று உம்முடைய வல்லமை என்னில் கிரியை செய்யும் என்று விசுவாசத்துடன் அறிக்கையிட்டு இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.