எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" (1 கொரிந்தியர் 6:20) என்ற வசனத்தை தியானிப்போம்.
இயேசு கிறிஸ்து தம்மைத்தானே சிலுவையில் பலியாகக் கொடுத்தார். அவர் பாடனுபவித்தார்; சிலுவையில் அறையப்பட்டார்; அவர் தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தியதன் மூலம் நாம் இரட்சிப்பைப் பெற்றோம். "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின" (2 கொரிந்தியர் 5:17) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் கிறிஸ்துவிடம் வரும்போது, எல்லா பழைய பழக்கவழக்கங்களும், பாவ வழிகளும் அகற்றப்படும்; நீங்கள் புதிதாக்கப்படுவீர்கள். இந்த தெய்வீக மறுரூபமாகுதலை அனைவரும் பெற்றுக்கொள்வதற்காகவே இயேசு இவ்வுலகிற்கு வந்து தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். நம்மை சுத்திகரித்து, புதுச்சிருஷ்டியாக்கும் வல்லமை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு இருக்கிறது.
சவுலின் வாழ்க்கையைப் பாருங்கள். அவன் கிறிஸ்துவை எதிர்த்து, அவருக்கு விரோதமாக தவறான காரியங்களைச் செய்தான். ஆனாலும், இயேசு தம்முடைய அன்பினாலும் மனதுருக்கத்தினாலும் அவனை சந்தித்தார். ஆண்டவருடனான ஒரு சந்திப்பு, சவுலை முற்றிலுமாக மாற்றியது; அவன், தேவனுடைய பரிசுத்தவானாக, பவுலாக மாறினான். அன்பானவர்களே, இயேசுவின் இரத்தம், சவுலை மறுரூபமாக்கியதுபோல, உங்கள் வாழ்க்கையையும் மாற்றக்கூடியதாயிருக்கிறது. இப்போதே சிலுவையை நோக்கிப் பாருங்கள். ஆண்டவர் உங்களை அழைக்கிறார். அவர் உங்களைச் சுத்திகரித்து, புதுச்சிருஷ்டியாக்க விரும்புகிறார். சவுலை பவுலாக மாற்றியதுபோல, உங்களையும் மாற்ற அவரால் முடியும். ஆண்டவர், "என் பிள்ளையே, என்னிடம் வா. நான் உனக்கு புதிய இருதயத்தை தருவேன்," என்று கூறுகிறார். உங்களுக்காகவே அவர் செய்த தியாகத்தைப் பாருங்கள். தாழ்மையோடு அவரிடம் வாருங்கள்; "தகப்பனே, என்னை மன்னியும். என்னுடைய எல்லா பாவங்களையும் சுத்திகரியும். சவுலை பவுலாக மாற்றியதுபோல என்னையும் மாற்றும்," என்று கேளுங்கள்.
உளப்பூர்வமாக நீங்கள் இப்படி ஜெபிக்கும்போது, இயேசு கிறிஸ்து அருளும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் பாவத்தினால் கட்டப்பட்டிருந்தால், பாவ பழக்கவழக்கத்தில் சிக்கியிருந்தால், ஆண்டவரிடம் வாருங்கள். அவருடைய இரத்தம் உங்களை முற்றிலும் சுத்திகரித்து, உங்கள் வாழ்க்கையை மாற்றும். இப்போது ஜெபிப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய இரக்கத்தையும் கிருபையையும் நாடி, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என் இரட்சிப்புக்காக சிந்தப்பட்ட இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, எல்லா பாவங்களிலிருந்தும் என்னை சுத்திகரித்து, கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டியாக்கும். நீர் சவுலை பவுலாக மறுரூபமாக்கியதுபோல, என் இருதயத்தையும் மாற்றும்; என் ஆவியை புதுப்பியும். உம்முடைய வழிகளில் நான் நடக்கும்படி என்னை உம்முடைய அன்பினாலும் சமாதானத்தினாலும் நீதியினாலும் நிறைத்தருளும். எல்லா பாவ பழக்கவழக்கங்களையும் உடைத்தருளும்; உம்மிடமிருந்து என்னை பிரிக்கும் எல்லாவற்றிலுமிருந்தும் என்னை விடுவித்தருளும். உமக்குச் சொந்தமானவனா(ளா)ன நான் என்னுடைய உடலாலும் மனதாலும் ஆவியாலும் உம்மை மகிமைப்படுத்துவதற்கு உதவி செய்யும். முழு இருதயத்தோடும் உம்மை பின்பற்றும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். என் வாழ்க்கையை முற்றிலும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். உம்முடைய பூரண சித்தத்தின்படி என்னை நடத்தும். மாறாத உம்முடைய அன்புக்காகவும், உமக்குள் என்னை புது மனுஷனாக்குவதற்காகவும் / புது மனுஷியாக்குவதற்காகவும் உமக்கு நன்றி, ஆமென்.