அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, கிறிஸ்துவுக்குள் என் அன்பு சகோதரிகளே, உங்களுக்கு ஆசீர்வாதமான மகளிர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இன்றைக்கு, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே" (2 கொரிந்தியர் 6:2) என்ற வசனத்தை தியானிப்போம். இதுவே ஏற்றவேளையாயிருக்கிறது. இன்றே இரட்சணியநாளாகும். இந்த வசனம் எவ்வளவு நம்பிக்கையை நமக்குத் தருகிறது. நம் ஜெபங்களுக்கு பதில் கிடைக்க இதுவே ஏற்றவேளை என்று ஆண்டவர் உறுதியாய் கூறுகிறார். ஆகவே, அன்பானவர்களே, உங்கள் ஜெப விண்ணப்பம் எதுவாக இருந்தாலும், இன்றைக்கு முழு மனதுடன் அதை ஆண்டவரிடம் சமர்ப்பியுங்கள். அவர் கண்களில் உங்களுக்கு தயை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு, ஆசீர்வாதமான மழையின் ஆண்டாகும். உங்கள் ஜெபங்கள் அத்தனைக்கும் ஆண்டவர் பதிலளிப்பார்.
நோவாவுக்கு தேவனின் கண்களில் கிருபை கிடைத்தது. இயேசுவுக்கு தேவனின் கண்களிலும் மனுஷர் கண்களிலும் தயவு கிடைத்தது. மோசே, தேவ பார்வையில் தயை பெற்றான். இந்த கிருபையின் காரணமாகவே அவர்கள் கேட்டுக்கொண்ட அத்தனையையும் தேவன் அருளிச்செய்தார். இதுவே உங்களுக்காக தருணம். அன்பானவர்களே, இதுவே உங்கள் அற்புதத்திற்கான நேரம். "இன்றே இரட்சணியநாள்," என்று ஆண்டவர் மறுபடியும் அறிவிக்கிறார். "நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்," "இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது," என்று ஆண்டவர் கூறுவதை வேதம் எங்கும் காண்கிறோம். பிறப்பதற்கு ஒருநாள், இறப்பதற்கு ஒருநாள், நேசிக்க ஒருநாள், வெறுப்பதற்கு ஒருநாள் என்று ஒவ்வொன்றும் தேவன் ஒவ்வொரு நாளை நியமித்திருக்கிறார். இயேசு, சகேயுவின் வீட்டுக்குள் சென்றபோது, அவன் வாழ்க்கை முற்றிலும் சீர்ப்பட்டது. ஆண்டவர், "இன்றே இரட்சணியநாள்," என்று கூறுகிறார். சகேயுவின் மனந்திரும்புதல் பலன் கொடுத்தது (மத்தேயு 3:8). அவன் வாழ்க்கை முற்றிலும் மறுரூபமானது. ஆகவேதான் அவன், "ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்" (லூக்கா 19:8) என்று கூறினான். என்ன ஒரு மாற்றம்!
இயேசு, காணாமற்போனதை தேடவும் இரட்சிக்கவுமே இவ்வுலகிற்கு வந்தார். இன்றைக்கு உங்கள் வீட்டுக்கு இரட்சிப்பு வருவதாக. இதுவே ஏற்றவேளையாயிருக்கிறது. இன்றைக்கே இரட்சணியநாள். ஆகவே, அன்பானவர்களே, இன்றைக்கு ஒரு தீர்மானம் செய்திடுங்கள். தாமதம் செய்யாதிருங்கள்! உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, உங்களை முற்றிலுமாய் தேவனுக்கு அர்ப்பணியுங்கள். "பிறகு ஒருநாளில் இயேசுவை ஏற்றுக்கொள்கிறேன்," என்று கூறாதிருங்கள். 'பிறகு' என்ற சந்தர்ப்பம் அமையாமலே போகலாம். இரக்கத்தின் நாள் சமீபித்திருக்கிறது. இயேசு சீக்கிரம் திரும்ப வருகிறார். இரக்கத்தின் வாசல்கள் எப்போதும் திறந்திருக்காது. இன்றே, இப்போதே நாம் செயல்படவேண்டும்.
ஒருநாள், என் கணவர், உலகமெங்கும் இருந்து வந்திருந்த ஜெப விண்ணப்பங்களுக்காக ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருந்தபோது, "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவான் 9:4) என்ற வசனம் திடீரென அவர் முன் பளிச்சிட்டது. அது இயேசுவே கூறியதுபோல் இருந்தது. ஆம், அன்பானவர்களே, இதுவே செயல்படவேண்டிய நேரமாகும். தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டிய தருணமாகும். இதுவே மனந்திரும்பவேண்டிய காலமாகும். தாமதிக்காதிருங்கள்! உடனே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள். முன்பு உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை பின்னாக விட்டுவிடுங்கள். இரட்சிக்கப்படுவதற்கான இந்த தெய்வீக தருணத்தை தவறவிடாதிருங்கள். ஆண்டவர், தம்முடைய பெருங்கருணையாலும் கிருபையாலும் இன்றைக்கு உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் இருதயத்தை அவருக்கு தருவீர்களா? இப்போதே முழங்காற்படியிட்டு ஜெபியுங்கள். உங்களை முற்றிலுமாக தேவனுக்குக் கொடுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான தயவை காண்பீர்கள். இன்றைக்கே இரட்சணியநாளாகும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய அநாதி இரக்கத்திற்காகவும் அன்புக்காக நன்றியுள்ளவனா(ளா)ய் உம்மிடம் இன்றைக்கு வருகிறேன். ஏற்றவேளையில் எங்கள் ஜெபங்களை கேட்பதாகவும், இன்றே இரட்சணிய நாள் என்றும் நீர் வாக்குக்கொடுத்திருக்கிறீர். ஆண்டவரே, என் இருதயத்தை முற்றிலும் உமக்கு அர்ப்பணிக்கிறேன். எல்லா பாரத்தையும் பாவத்தையும் சந்தேகத்தையும் உம்முடைய பாதத்தில் வைக்கிறேன். என்னை சுத்தமாக கழுவியருளும்; என் ஆவியை புதுப்பியும்; உம் கிருபை என்மேல் தங்கியிருப்பதாக. ஆண்டவரே, இதுவே என் அற்புதத்தின் நேரம் என்று விசுவாசிக்கிறேன். என் ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீர் என்று அறிந்து உம்முடைய தெய்வீகவேளையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். இயேசுவே, இப்போதே உம்மை ஏற்றுக்கொள்கிறேன். பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு, நீர் எனக்கு அளிக்கும் புதிய வாழ்க்கையை பெற்றுக்கொள்கிறேன். உம்முடைய இரட்சிப்பு, என் வீட்டுக்குள், என் குடும்பத்திற்குள், என் இருதயத்துக்குள் இன்றைக்கு வருவதாக. ஆண்டவரே, எனக்குச் செவிகொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.