எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு நிறைந்த, வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16) என்ற அருமையான வசனத்தை தியானிப்போம்.
அன்பானவர்களே, இன்றைக்கு டிசம்பர் 24ம் தேதி. நாளை நாம் கிறிஸ்துமஸை கொண்டாட இருக்கிறோம். சிலருக்கு புதிய ஆடைகள், வெகுமதிகள் என்ற ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கலாம்; சிலருக்கு அப்படியான சிலாக்கியங்கள் இல்லாதிருக்கலாம். மனம் கலங்காதிருங்கள். ஆடை, மிகவும் அருமையான ஒன்று அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். இயேசு உங்கள் இல்லத்தில் இருப்பதும், உங்கள் உள்ளத்தில் இருப்பதும், தேவன் மாத்திரமே தரக்கூடிய சமாதானத்தை அனுபவிப்பதுமே மெய்யாக விலையேறப்பெற்ற, அருமையான காரியமாகும். உலகபிரகாரமான எந்த ஆஸ்தியைக் காட்டிலும் இந்த சமாதானம் பெரிதாகும். அது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னும் மகாபெரிய ஈவை நமக்கு நினைவுப்படுத்துகிறது.தேவனாகிய கர்த்தர் நம் எல்லோருக்கும் இரட்சிப்பை இலவசமான ஈவாக இயேசுவை தந்தருளியதால், அவர் உலகிற்கு வந்தார்.
நீங்கள் அதைக் கிரயத்திற்குக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. கேட்கிறவர்களுக்கு, விரும்புகிறவர்களுக்கு, விசுவாசத்தோடு தேவனை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு அந்த ஈவு கொடுக்கப்படுகிறது. அன்பானவர்களே, இயேசுவை நம் இரட்சகராக கொண்டிருப்பதே முக்கியமான காரியம். நாளை கிறிஸ்துமஸை கொண்டாட ஆயத்தமாகும்வேளையில், வெளிப்புற கொண்டாட்டமாக மாத்திரம் அது அமைந்துவிடக்கூடாது என்று தீர்மானிப்போம். இயேசு உங்கள் உள்ளத்தில் பிறக்கவேண்டும்; உங்கள் வாழ்க்கையில் வெளிப்படவேண்டும். அதுவே முக்கியம். புதிய ஆடைகளோ, புதுவித உணவோ, புதிய சொத்துக்களோ பெரிய ஆசீர்வாதமல்ல; தேவனுடைய பிள்ளையாக மாறுவதே பெரிய ஆசீர்வாதம். ஆகவே, புதிய ஆடைகளை, விசேஷித்த பொருள்களை வாங்க இயலாவிட்டால் கவலைப்படாதிருங்கள். குடும்பமாக தேவ சமுகத்தில் கூடி, துதித்துப் பாடுங்கள். நமக்கு இரட்சிப்பை அளிக்கும்படியாக இவ்வுலகில் வந்த ஆண்டவருக்குள் களிகூருங்கள். நன்றியுள்ள இருதயத்துடன் அவரை ஸ்தோத்திரியுங்கள். அப்போது அற்புதங்கள் நடப்பதை காண்பீர்கள். உங்களுக்கு வேண்டியவற்றை தேவன் அருளிச்செய்வார். தேவன் உங்களுக்கு சிறந்த ஆடையை, சிறந்த உணவை, மிகச்சிறப்பான ஆசீர்வாதங்களை தருவார். காத்திருந்து காணுங்கள். நம் தேவன் நல்லவர். ஆகவே, இவையெல்லாம் நடக்கும்.
"உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்" (ஏசாயா 44:3) என்று வேதம் கூறுகிறது. ஆண்டவருக்குக் காத்திருந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் தம்முடைய வல்லமையால் உங்களை நிரப்பி, உங்கள் வாழ்க்கையில் தமக்கு மகிமையான கனி காணப்படும்படி செய்வார். அதுவே முக்கியம். ஆகவே, புதிய ஆடைகள், புதுவித உணவு மற்றும் புதிய பொருள்களை முதன்மையாக கேட்பதற்குப் பதிலாக, இதுபோன்ற வாழ்க்கை வேண்டும் என்று கேளுங்கள். "ஆண்டவரே, என் உள்ளத்துக்குள் வாரும். எங்கள் குடும்பத்தில் வாசம்பண்ணும்," என்று கேளுங்கள். இப்போது என்னுடன் இணைந்து ஜெபிப்பீர்களா? அல்லேலூயா! நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு நல்லவர்!
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தும்படி தாழ்மையுள்ள இருதயத்துடன் உம் முன்னே வருகிறேன். என்னை மீட்கும்படியாகவும், எனக்கு நித்திய ஜீவனை அருளும்படியாகவும் உம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, இன்றைக்கு உம்மை என் இருதயத்திற்குள், வீட்டுக்குள் வரும்படி அழைக்கிறேன். எல்லாப் புத்திக்கும் மேலான உம்முடைய சமாதானத்தாலும், சந்தோஷத்தாலும் என்னை நிரப்பும். நீர் தந்த இரட்சிப்புக்கான விலையேறப்பெற்ற ஈவுக்காக நன்றியறிதலுடன் கிறிஸ்துமஸை கொண்டாட எனக்கு உதவி செய்யும். எல்லா உலகபிரகாரமான காரியங்களுக்கும் மேலாக உம்முடைய சமுகத்தை கனப்படுத்த எனக்கு போதித்தருளும். ஆண்டவரே, உம்முடைய ஆவியை என்மேல் ஊற்றும். உம்முடைய மகிமைக்கேற்ற கனிகள் என் வாழ்வில் காணப்பட கிருபை செய்யும். உம்முடைய அன்பு, பிறருக்கு சாட்சியாக என் மூலம் ஒளிவீசும்படி செய்தருளும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.