எனக்கு அருமையானவர்களே, "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவான் 16:13) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். ஆம், சத்திய ஆவியானவர்! இயேசு, பிலாத்துவின் முன்பு நின்றபோது, பிலாத்து அவரிடம், "சத்தியமாவது என்ன?" என்று கேட்டான். இயேசு, "நான் சத்தியத்தை குறித்து சாட்சிகொடுக்க வந்தேன்," என்று முன்பே பதிலளித்திருக்கிறார். ஆனால், பிலாத்து, "சத்தியமாவது என்ன?" என்று கேட்டான். அன்பானவர்களே, சத்தியம் 'எது?' என்பதல்ல; சத்தியம் என்பது 'அவர்'. ஆம், சத்தியம் என்பது இயேசுவே ஆவார்.

இன்றைக்கு மக்கள் சத்தியத்தை, மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் தேடுகிறார்கள்; கடல்களையும் தாண்டி சென்று அர்த்தத்தை, பதிலை தேடுகிறார்கள். ஆனால், இயேசுவே, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்," என்று கூறியுள்ளார். பரிசுத்தமானவரும் மாறாதவரும் நித்தியருமான அவர் மாத்திரமே பூரண சத்தியமாயிருக்கிறார். நீங்கள் சத்தியத்தை அறியும்போது விடுவிக்கப்படுவீர்கள். பாவத்திலிருந்து, சாபங்களிலிருந்து, உங்களிடமிருந்தே நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். நீங்கள் இயேசுவின் சாயலாக மறுரூபமாக்கப்படுவீர்கள். ஆகவே, "ஆண்டவரே, நீரே சத்தியமாயிருக்கிறீர்! பொய்யால் நிரம்பியதும், சத்தியத்தை காண்பதற்கு மனுஷரால் உருவாக்கப்பட்ட வழிகள் எங்கும் நிறைந்திருப்பதுமான உலகத்தில் வாழ்கிறேன். ஆனால், ஆண்டவராகிய இயேசுவே, நீர் மாத்திரமே சத்தியமாயிருக்கிறீர். நீர் எனக்கு வேண்டும்," என்று கூறி அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் இவ்வாறு நீங்கள் ஜெபித்தால், இயேசுவின் ஆவியாகிய சத்தியத்தின் ஆவி உங்களுக்குள் வருவார். உங்கள் ஆவியும் அவருடைய ஆவியும் இணையும்; தெய்வீக சத்தியத்தினால் உங்களை நிரப்பும்.

அன்பானவர்களே, சத்தியம் என்பது இயேசுதான். இயேசு, பரிசுத்தமே உருவானவர். அன்பின் சுத்தமான வடிவமே இயேசுவாக இருக்கிறார். அவருடைய அன்பு உங்களுக்குள் வாசம்பண்ணினால், நீங்கள் எந்த உபத்திரவத்தை எதிர்கொண்டாலும், அந்த அன்பு வாழ்வதற்குத் தேவையான நம்பிக்கையை அளிக்கிறது. துக்கத்தின் மத்தியிலும் அவரது சத்தம், "என் பிள்ளையே, நான் உன்னை நேசிக்கிறேன். என்னுடைய வல்லமையினால் நான் உன்னை தாங்குகிறேன்," என்று கூறும். என்ன பாவம், இழப்பு அல்லது வேதனையை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும், உங்களுக்குள் இருக்கும் சத்திய ஆவியானவர் உங்களை பரிசுத்தப்படுத்தி, நீங்கள் தேவ பிள்ளையாக வாழும்படி செய்வார். பாவத்திலிருந்து, துக்கத்திலிருந்து, பயத்திலிருந்து சத்தியம் உங்களை விடுவிக்கும். உங்கள் வாழ்க்கையை சத்தியமாகிய இயேசுவுக்கு அர்ப்பணித்திடுங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, என்னை வழிநடத்துவதற்காகவும் விடுவிப்பதற்காகவும் சத்தியமாகிய இயேசுவை அனுப்புகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். என்னை உம்முடைய சத்திய ஆவியினால் நிரப்பும். பொய்களும் குழப்பமும் நிறைந்த இவ்வுலகில் உம்முடைய தெய்வீக சத்தியத்தில் நடப்பதற்கு எனக்கு உதவும். எல்லா பாவம், துக்கம், பயத்திலிருந்தும் என்னை விடுவித்து, உம்முடைய சாயலாக மறுரூபப்படுத்தும். உம்முடைய பரிசுத்தமும் அன்பும் எனக்குள் வாசம்பண்ணட்டும். "என் பிள்ளையே, உன்னை நான் நேசிக்கிறேன்," என்று கூறும் உம் சத்தத்தை நான் கேட்கட்டும். ஆண்டவரே, என்னை பரிசுத்தம்பண்ணி, நீர் தெரிந்துகொண்டவனா(ளா)க வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். என் இருதயம் உம்மை மாத்திரமே தேடுவதாக; என் வாழ்வின் மூலமாக உம்முடைய சத்தியம் ஒளிவீசவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.