அன்பானவர்களே, இன்றைக்கு, "என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது" (சங்கீதம் 94:18) என்று தாவீது கூறும் அருமையான வசனத்தை தியானிப்போம். இது எப்படிப்பட்ட வாக்குத்தத்தம்! உலகின் எந்தப் பொல்லாங்கும், உபத்திரவமும் உங்களை நசுக்கவோ, நம்பிக்கையற்று விழப்பண்ணவோ இயலாது. இனிமேல் நிற்க இயலாது என்று நீங்கள் நினைக்கும்போது, ஆண்டவர் உங்களைத் தாங்குவார். தாவீது, தன் வாழ்க்கையில் அநேக சூழ்நிலைகளை கடந்து சென்றான். அவனை அழிக்கும்படியாக விரோதிகள் சூழ்ந்துகொண்டு சதியாலோசனை செய்தார்கள். ஆகவேதான் அவன், "அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே" (சங்கீதம் 38:16) என்று முறையிடுகிறான். அவனுடைய இருதயம், "ஆண்டவரே, யாரும் என்னை கீழே தள்ளிவிடாதபடி காத்தருளும்," என்று கூப்பிடுகிறது. அவன் இவ்வாறு ஊக்கமாய் ஜெபித்தான்.

தேவன் உண்மையுள்ளவராயிருந்தார். ஆண்டவர், ஒருபோதும் உங்களை விட்டு விலகவோ, உங்களைக் கைவிடவோமாட்டார். அதைத்தான் வேதத்தில், "உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்" (சங்கீதம் 18:35) என்று வாசிக்கிறோம். ஆம், கர்த்தர் நீதிமானை காப்பாற்றுகிறார். "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்" (நீதிமொழிகள் 24:16) என்று வேதம் கூறுகிறது. ஏன்? தேவனுடைய அன்பு நம்மை தாங்குகிறது. ஆபிரகாமுக்கு அவர் செய்ததுபோல, நம்முடைய பேரையும் அவர் பெரிதாக்குவார். ஆண்டவர், "நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன். நீ ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன். நீ சபிக்கிறவர்களை நான் சபிப்பேன்." இப்படியாகவே தேவன் நீதிமானுக்கு வல்லமையையும், பாதுகாப்பையும், ஸ்திரமான அன்பையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறார். தேவன், உங்கள்மேலும் என் மேலும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்! இயேசுவின் அன்பு விசேஷித்தது. எந்தப் பாவமோ, எந்த வியாதியோ, உலகின் எந்த சக்தியோ தேவனுடைய அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது.

வாழ்க்கையில் போராட்டம் காணப்படலாம். ஒருவேளை, ஒரே ஒரு பாவத்துடன் நெடுங்காலமாக போராடிக்கொண்டிருக்கலாம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும் என்பதை மறந்துபோகாதிருங்கள். உங்கள் மீறுதல்களுக்காக இயேசு குத்தப்பட்டார். உங்கள் அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்படுகிறீர்கள். அவருடைய வலது கரம் உங்களைத் தாங்கும். நீங்கள் தாழ்ச்சியடைய அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். ஆண்டவருடைய காருண்யமும் அவருடைய கிருபையும் உங்களைத் தாங்கும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் கால் சறுக்கும்போதும் உம்முடைய காருண்யம் என்னை தூக்கியெடுக்கிறது. உம்முடைய கிருபையினால் என்னை தாங்கி, இரட்சிப்பு என்னும் கேடகம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். விரோதிகள் எழும்பும்போது, உபத்திரவங்கள் வரும்போது நீரே எனக்கு கன்மலையும் என்னை பாதுகாக்கிறவருமாய் இருப்பீராக. ஒருபோதும் என்னை விட்டு விலகாமல், எப்போதும் என் பட்சத்தில் நிற்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சாந்தம் என்னை உருவாக்கி, நீதிமானாக மாற்றுவதாக. உம்முடைய வலது கரம் என்னைப் பெலப்படுத்தட்டும். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என் பாவங்களை கழுவிடும். என் சரீர காயங்களை, மனக்காயங்களை, ஆவிக்குரிய காயங்களை குணப்படுத்துவீராக. உம்மை விட்டு நான் விலகுவதற்கு நீர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டீர் என்று விசுவாசித்து உம்முடைய அன்பின் கரங்களில் இளைப்பாறி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.