அன்பானவர்களே, "ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன்" (2 நாளாகமம் 1:12) என்று தேவன் கூறுகிறார். இந்த ஐந்து ஆசீர்வாதங்களுக்காகவும் உலகம் இன்று ஏங்கிக்கொண்டிருக்கிறது. தேவனே எல்லா ஞானத்திற்கும் காரணர் (யாக்கோபு 1:17) என்றும், "அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது" (கொலோசெயர் 2:3) என்றும் வேதம் கூறுகிறது. நாம் ஆண்டவரிடம் கேட்கும்போது அவர் நமக்கு தமது ஞானத்தை தாராளமாய் தருகிறார் என்று வேதம் கூறுகிறது. ஞானத்தினாலும் அறிவினாலும் நிறைந்திருக்கும் ஆண்டவர் இயேசுவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது, உலக வாழ்க்கைக்கானதும், இயேசுவை இன்னும் அதிகமாய் அறிந்துகொள்வதற்கு தேவையானதுமான தெய்வீக ஞானம் நமக்குக் கிடைக்கும்.
தேவ ஞானம் இன்றைக்கு உங்களுக்குள் இருப்பதற்காக அவரை துதித்திடுங்கள். தேவனுடைய அறிவு உங்களுக்குள் இருக்கிறது. தேவன் உங்களுக்கு நியமித்துள்ள பாதையில் நடப்பதற்கு ஞானம் உங்களுக்கு உதவுகிறது. இந்த உலகத்திலும் உங்கள் வேலையிலும், தொழிலிலும் எழும்புகிற பிரச்னைகளை தீர்க்கும்படி அறிவு உங்களுக்கு உதவும். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளப்பரிய ஞானம் இருக்கிறது. மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் அதிகமாக பிரகாசிக்கிறார்கள்; அதிகமாக சம்பாதிக்கிறார்கள்; அழகில் சிறந்திருக்கிறார்கள்; அவர்களது ஞானத்தைக் கண்டு மக்கள் அவர்கள் பக்கமாய் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் திடீரென அறிவில் குறைவுபட்டு விழுந்துபோகிறார்கள். பொல்லாதவர்களின் தாக்குதல்களை, உலகத்தின் உபத்திரவங்களை, வாழ்வில் ஏற்படும் இழப்புகளை எப்படி மேற்கொள்வது என்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள்.
ஆகவேதான் இயேசு, "நான் உனக்கு ஞானத்தையும் அறிவையும் தருவேன். நீ பிரகாசிப்பாய்; திடமாய் என்றென்றைக்கும் நிலைநிற்பாய்," என்று கூறுகிறார். தேவனுடைய சித்தத்தை செய்கிற யாரும் திடமாய் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள். ஐசுவரியம், சம்பத்து, கனம் எல்லாம் அவர்களைத் தொடரும். தேவன் இந்த கிருபையை உங்களுக்கு அருளிச்செய்வாராக.
காருண்யா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் டார்வின் தங்கப்பனின் வாழ்க்கை இதற்குச் சாட்சியாக இருக்கிறது. அவர் நாகர்கோவிலில் பள்ளிப்படிப்பை முடித்து, காருண்யாவில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் படித்தார். அவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீர்மானத்தை அங்கே எடுத்தார். அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றியபடியினால் ஆண்டவர் அவரை உயர்த்தினார். இயேசு தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்ததினால் ஞானத்தையும் வளர்த்தியையும் அடைந்து, தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததினால் எல்லாருக்கும் மேலாக பிரகாசித்ததுபோல, டார்வினின் வாழ்க்கையிலும் நடந்தது. பட்டம் பெற்ற பிறகு, வேலை கிடைப்பது பொதுவாக சிரமமாய் இருந்த சூழ்நிலையில் தேவன் அவருக்கு நல்ல வேலையைக் கொடுத்தார்; அவர் தொழில் வாழ்க்கையில் முன்னேறினார். தேவ ஞானமும் அறிவும் சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும்படி அவரை நடத்தின. Asir Technologies என்ற பெயரில் ஒரு ஆலோசனை நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். முழு நேர தொழிலாக அந்நிறுவனத்தை தொடங்கினார். அந்நிறுவனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கலிபோர்னியாவில் இயங்கி வருகிறது. அதற்கு இந்தியாவிலும் கிளைகள் உள்ளன. டார்வின் அதன் தலைமை அதிகாரியாக இருந்து நடத்துகிறார். அன்பானவர்களே, ஆண்டவர் உங்களையும் இப்படியே உயர்த்த விரும்புகிறார்.
ஜெபம்:
பரம தகப்பனே, ஞானத்தையும் அறிவையும் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் குறித்து நீர் தந்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கென்று ஏற்படுத்தியிருக்கிற பாதையில் நடக்கும்படி, என் உள்ளத்தை தெய்வீக ஞானத்தினால் நிரப்புவீராக. வாழ்வின் இக்கட்டுகளை விசுவாசத்துடனும் யோசனையுடனும் எதிர்கொள்ள தேவையான அறிவை எனக்கு அருளிச்செய்தருளும். ஞானமாகிய பொக்கிஷம் உமக்குள் மறைந்திருக்கிறது என்று அறிந்து எல்லாவற்றுக்கும் மேலாக உம்மை தேடுவதற்கு எனக்கு உதவி செய்யும். மற்றவர்களை உம்முடைய அன்பினிடத்திற்கும் சத்தியத்தினிடத்திற்கும் இழுக்கும்வண்ணம் என் வாழ்க்கை உம்முடைய ஞானத்தினால் பிரகாசிக்கட்டும். என் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்து, உம்முடைய சித்தத்தின்படி செழிப்புக்கு நேராக என்னை நடத்தும். நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்முடைய நாமத்திற்கு மகிமை கொண்டு வரும்படி உம்முடைய கிருபை என்னை உயர்த்தட்டும். உம்முடைய வழிகளில் நடக்கிறவர்களுக்கு நீர் பரிபூரண ஆசீர்வாதங்களை தருவதால் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.