எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்" (சங்கீதம் 107:20) என்ற வசனத்தை தியானிப்போம்.

நம்ப இயலாத அளவு வல்லமையான தம்முடைய வசனத்தை தேவன் அனுப்பியுள்ளார். தேவ வசனத்தை நீங்கள் தியானிக்கும்போது, சுகம் உள்பட அநேக ஆசீர்வாதங்களை ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். "சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்" (ஏசாயா 66:2) என்று கர்த்தர் கூறுகிறார். பயபக்தியோடு ஆண்டவரைச் சேருகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். பழக்கவழக்கமாக வேதத்தை வாசிப்பதற்கு மாறாக அவருடைய வார்த்தையை கனம்பண்ணுவோம்; அதற்காக நேரம் ஒதுக்குவோம்; அது நமக்குள் ஆழமாக கிரியை செய்ய அனுமதிப்போம். 'கர்த்தருடைய வார்த்தைகளை உட்கொள்ளுங்கள்' என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறதால், அதை வேகவேகமாக வாசிப்பதற்குப் பதிலாக அவற்றை ஆழ்ந்து வாசிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய வசனத்தை நாம் பயத்தோடும், பயபக்தியோடும் வாசிக்கவேண்டும்.

நீங்கள் தேவனுக்கு பயந்து அவருடைய வசனத்துக்கு நடுங்கினால் என்ன நடக்கும்? "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு" (எபேசியர் 3:20) என்று வேதம் கூறுகிறது. ஆகவே, உங்களுக்கு வேண்டியவற்றை ஆண்டவரிடம் கேட்டு, "ஆண்டவரே, உம்முடைய வசனத்தில் நீர் வாக்குப்பண்ணியுள்ளபடி இந்த ஆசீர்வாதத்தை எனக்கு அருளிச்செய்யும்," என்று ஜெபியுங்கள். "விசுவாசம் கேள்வியினாலே வரும்," (ரோமர் 10:17) என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளை கேட்க விரும்பினாள் (லூக்கா 10:42). அதன் மூலம் அவள் தன்னை விட்டு எடுபடாத 'நல்ல பங்கை' தெரிந்துகொண்டாள். அதேவண்ணம், தேவனுடைய வசனத்தை வாசிப்பதற்கும் அதை கடைப்பிடிப்பதற்கும் உங்களை அர்ப்பணிக்கும்போது, பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, மகத்துவமும் வல்லமையும் நிறைந்த உம்முடைய வார்த்தையை அனுப்புவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மை அதிகமாக அறிந்துகொள்வதும் உம்முடைய வசனத்தை இடைவிடாமல் தியானிப்பதுமே என்னுடைய விருப்பம். ஆனாலும், உதவாத காரியங்களை நோக்கி அடிக்கடி என் மனம் வழுவிச் செல்கிறது. ஆண்டவரே, என் இருதயத்தை, விருப்பங்களை, எண்ணங்களை, உணர்வுகளை உம்முடைய வசனத்திற்கு நேராக திருப்பும். சங்கீதக்காரன் கூறுகிறபடி, மாயையை பாராதபடி என் கண்களை நீர் விலக்கி, உம்முடைய பாதைகளில் நடத்தும். என் மனதை உயிர்ப்பித்து, உம்முடைய விலையேறப்பெற்ற வசனத்தின் மூலம் ஜீவனை தாரும். ஆண்டவரே, உம்முடைய வசனத்தில் மறைந்திருக்கும் புதையல்களை நான் கண்டு உம்முடைய மகிமையால் நிரப்பப்படும்படி என் கண்களை திறந்தருளும். நீர் என்னுடைய ஜெபத்திற்கு பதில் தருவீர் என்று அறிந்து உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.