அருமையானவர்களே, "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13) என்று இயேசு கூறுகிறார். பூமிக்கு உப்பாயிருக்கும்படி ஆண்டவர் உங்களை தெரிந்துகொண்டுள்ளார். உப்பு, உணவுக்கு சுவையூட்டுகிறது; அதைப் பதப்படுத்தி காக்கிறது. அதேபோன்று நீங்கள் இயேசுவின் ஜீவன் அளிக்கும் வல்லமையின் மூலம் மக்களுக்கு வாழ்வளித்து, சுவையூட்டுகிறீர்கள். வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் இழந்துபோகும் நேரங்கள் உண்டு. அந்த நேரங்களில் நாம் ஜீவனை அளிக்கும் இயேசுவின் வல்லமையை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு பூமிக்கு உப்பாக விளங்கும்போது, தேவன், நம் வாழ்வில் ஆசீர்வாதங்களை (உப்பு) அருளுகிறார்.

ஓர் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். மும்பையை சேர்ந்த ரூபன், ஒரு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த தொழிலை நடத்துவதற்கு தன்னிடமிருந்து சொத்துகள், சேமிப்பு எல்லாவற்றையும் முதலீடாக போட்டிருந்தார். கோவிட்-19 தாக்கம் வந்தபோது எல்லாமும் மாறிப்போயின. தொழில் நலிவடைந்தது; அவர் பணத்தை இழந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வங்கியில் கடனாக இருந்த பெரிய தொகை பாரமாக தோன்றியது. தன்னுடைய மனைவியின் வேலையை சார்ந்து கடனை கட்டுவதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் அவர் அதிக சிரமப்பட்டார். மனைவியும் வேலையை இழக்க நேரிட்டபோது, குடும்பம் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. நிலைமை இன்னும் மோசமாகும்படி வேறொரு சம்பவம் நடந்தது. ரூபனின் சொந்த சகோதரர், அநியாயமான முறையில் ரூபனின் வீட்டையும் சொத்தையும் பறித்துக்கொண்டார். நம்பிக்கையே இல்லை என்ற சூழல் ஏற்பட்டது. வாழ்வின் அந்தகாரமான இந்த காலகட்டத்தில் டெல்லியில் நாங்கள் நடத்திய தீர்க்கதரிசன மாநாட்டில் ரூபன் பங்கேற்றார். எனக்கு ரூபனை பற்றி முன்பு எதுவும் தெரியாது. ஆனால், மாநாட்டின்போது, பரிசுத்த ஆவியானவர் அவரது பெயரை அழைக்கும்படி என்னை நடத்தினார். ஆண்டவர் என்னிடம் பேசியதை, "ரூபன், தேவன் உங்களை பொருளாதாரரீதியாக ஆசீர்வதிப்பார். உங்கள் கடன்கள் எல்லாம் தீர்க்கப்படும்; உங்கள் சொத்து திரும்ப கிடைக்கும்," என்று தீர்க்கதரிசனமாக கூறினேன். ரூபன் இதைக் கேட்டதும் அதிக சந்தோஷமடைந்தார். இந்த தீர்க்கதரிசனத்தை அவர் முழு மனதுடன் நம்பினார்; அவருக்கு பாரங்கள் அனைத்தும் அகன்றுபோனதுபோல் தோன்றியது. அவர், "ஆண்டவரே, Dr. பால் மூலமாக கொடுத்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவீர் என்று விசுவாசிக்கிறேன்," என்று ஜெபித்தார். மூன்று மாதங்களுக்குள் அற்புதவிதமாக ரூபனின் சகோதரர் அவரை அழைத்து, "உன் சொத்தை திரும்ப தருகிறேன்," என்று கூறியுள்ளார். சொத்து மட்டும் மீண்டும் கிடைக்கவில்லை; ரூபனால் தன் கடன்கள் அத்தனையையும் திரும்ப செலுத்த முடிந்தது. தேவன் அவரை அபரிமிதமாக ஆசீர்வதித்து, பொருளாதார ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை அளித்தார். இப்போது, ரூபன் மும்பையில் பாந்த்ரா இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் மேலாளராக ஊழியம் செய்கிறார். ஊழியத்தில் தேவன் அவரை வல்லமையாக பயன்படுத்தி வருகிறார். பூனாவில் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியராக இருக்கும் Dr. சச்சின், சமீபத்தில் ஜெப கோபுரத்திற்கு வந்திருக்கிறார். பதினாறு ஆண்டுகள் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. மேல் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அவரது வேதனையை புரிந்துகொண்ட ரூபன், அவருக்காக இயேசுவிடம் ஊக்கமாக ஜெபித்திருக்கிறார். ஆச்சரியவிதமாக தேவன் ஜெபத்திற்கு பதில் கொடுத்தார்; Dr. சச்சினுக்கு நெடுங்காலம் காத்திருந்த பதவி உயர்வு கிடைத்தது.

அன்பானவர்களே, நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள். "என்னுடைய உப்பை, என்னுடைய சந்தோஷத்தை இழந்துவிட்டேன்," என்று நீங்கள் உணரும்போது, மற்றவர்களுக்கு (உள்ளமுடைந்த மக்களுக்கு) தேவனுடைய உப்பாக மாறுங்கள். தேவன் உங்கள் வாழ்வில் மறுபடியும் உப்பை (ஆசீர்வாதங்கள்) அருளுவார். ஆண்டவருக்கு உங்களை அர்ப்பணிக்க முன்வருவீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, பூமிக்கு உப்பாய் இருக்கும்படி என்னை நீர் தெரிந்துகொண்டிருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன். எல்லாப் பக்கமும் இருந்து பல உபத்திரவங்கள் என்னை தாக்குவதால் நீர் எதிர்பார்க்கும் உப்பாக விளங்குவது கடினமாக இருக்கிறது என்பதை நான் அறிக்கையிடுகிறேன். உம்முடைய உப்பாக மாறி, உள்ளமுடைந்த மக்கள் வாழ்வில் உம்முடைய ஜீவனை அளிக்கும் சுவையை சேர்க்கக்கூடிய உப்பாக மாறுவதற்கான உம்முடைய அழைப்புக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். நான் சுத்த இருதயத்துடன், மற்றவர்களுக்கு மாதிரியாக வாழ்ந்து ஆசீர்வாதமாக விளங்கும்படி உம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம் இந்த அழைப்புக்கு என்னை தகுதிப்படுத்தும்.  இந்த ஜெபத்திற்கு நீர் செவிகொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். மற்றவர்கள், நீர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்க்கும்படி உம்முடைய சுவை நிறைந்த உப்பாக நான் வாழும்படி என்னை மறுரூபப்படுத்துவீர் என்று விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.