அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்" (சங்கீதம் 118:7) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, இன்றைக்கு ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்; எல்லா சூழ்நிலைகளிலும் அவர் உங்களுக்கு உதவி செய்வார். ஒருவேளை நீங்கள், "எனக்கு எதிரிகள் ஏராளமான எதிரிகள் இருக்கிறார்கள். எல்லோரும் நான் விழவேண்டும் என்று எதிர்பார்த்து, எனக்கு விரோதமாக ஆலோசனை பண்ணுகிறார்கள். என்னை சிறைக்குள் தள்ள அவர்கள் ஆவலாயிருக்கிறார்கள். என் வேலையை நான் விட்டுவிடவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் நான் தோற்றுப்போகவேண்டும் என்று நினைக்கிறார்கள்," என்று நீங்கள் கூறலாம். "இந்த வருடம் கிட்டதட்ட முடிந்தே விட்டது. ஆனாலும் எனக்கு வெற்றி கிடைக்கவில்லை," என்று எண்ணலாம். தேவன் இன்றைக்கு, உங்களை வெறுக்கிறவர்களை நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று கூறுகிறார்.

தாவீதுக்கு இதேபோன்ற அனுபவம் இருந்தது. அநே விரோதிகள், அவன் விழுந்துபோகவேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். அதுபோன்ற தருணங்களில் தாவீது மிகவும் தனிமையாக உணர்ந்திருப்பான். ஆனாலும், அவன் தேவன்மேல் திடநம்பிக்கையோடு இருந்தான். அந்த நிச்சயத்துடன்தான் அவன், "கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். அவர் என் சகாயர்," என்கிறான். "என்னை விரோதிக்கிறவர்களை மேற்கொள்ளுவேன்," என்று அவன் தைரியமாக விசுவாசத்துடன் அறிக்கை செய்கிறான். அது அவனுடைய அனுபவம். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் சரிதையை பாருங்கள் (தானியேல் 3ம் அதிகாரம்). தேவனை தவிர யாரையும் பணிந்துகொள்ளமாட்டோம் என்று அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டதால், அவர்களை எரிகிற அக்கினிச் சூளைக்குள் போடுவதற்கு ராஜாவின் அதிகாரிகள் ஆலோசித்தனர். ராஜாவை ஆணையிடும்படி அவர்கள் நச்சரித்தனர். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு சூளைக்குள் போடப்பட்டனர். ஆனால், ஆச்சரியமான காரியம் நடந்தது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், ஆச்சரியத்துடன் தீவிரமாய் எழுந்து, தன் மந்திரிமாரைப் பார்த்து, "மூன்று பேரையல்லவா கட்டி அக்கினிக்குள் போட்டோம்?" என்று கேட்டான். அவர்கள், "ஆம், ராஜாவே," என்றார்கள். அப்போது ராஜா, "பாருங்கள்! நான்கு பேர் அக்கினிக்குள் விடுதலையாய், எந்தச் சேதமுமில்லாமல் உலாவுகிறார்கள். நான்காமவரின் சாயல் தேவ புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது," என்று கூறினான். உடனே அவன், "உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள்," என்றான்; அவர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ராஜா, "சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்," என்றான். அவர்கள் தேவன்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.

அன்பானவர்களே, அக்கினிக்குள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுடன், நான்காவது நபராக  தேவன் நின்றதுபோல, அவர் உங்களோடும் நிற்பார். அவர், உங்களை விரோதிக்கிறவர்களை நீங்கள் ஜெயிக்கும்படி செய்வார். பயப்படாதிருங்கள். நீங்கள் இன்றே விழுந்துபோகவேண்டும் அல்லது மரித்துபோக வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்களா? உங்களுக்கு விரோதமாக ஆலோசனைகள் நடக்கிறது என்று நினைக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். ஆண்டவர் உங்களுக்கு சகாயராக உங்கள் அருகில் நிற்கிறார். தேவனே உங்களுக்கு வெற்றியை தருவதால், உங்கள் விரோதிகளை ஜெயிப்பீர்கள். பயப்படாதிருங்கள். மனங்கலங்காதிருங்கள். தேவன் உங்களோடு இருக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு சகாயராயிருப்பதினாலும், என் பட்சத்தில் நிற்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். விரோதிகள் என்னை சூழ்ந்துகொள்ளும்போது, நீர் எனக்கு தைரியத்தையும் விசுவாசத்தையும் அளிக்கிறீர். நீர் தரும் ஜெயமான வாக்குத்தத்தம், எல்லா இக்கட்டுகளையும் சந்திப்பதற்கான பெலனை எனக்கு தருகிறது. உம்முடைய அழியாத வல்லமை என்னை பாதுகாத்து வழிநடத்தும் என்று நம்புகிறேன். நான் தனிமையாக உணரும் தருணங்களில் கூட, நீர் என் அருகில் இருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன். நான் பயப்படுகிற தருணங்களில் எனக்கு சமாதானம் தந்து, நீர் ஜெயத்தை தருவதை உணரும்படி செய்யும். இந்தப் போராட்டங்களுக்கு அப்பால் நீர் எனக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிற வெற்றியை நான் காண்பதற்கு உதவி செய்யும். உம்முடைய சமுகம் எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் தருவதாக. ஆண்டவரே, நீர் எனக்கு தர இருக்கும் வெற்றிக்காக உம்மை துதித்து, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.