எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம் 32:8) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். ஆம், தேவ பிள்ளையே, தேவனுடைய பாதத்தில் காத்திருக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். ஆண்டவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள விரும்பினால் காத்திருங்கள்; முழங்காற்படியிடுங்கள்; அவரையே நோக்கிப் பாருங்கள். "ஆண்டவரே, உம்முடைய வழிகளை எனக்குப் போதித்தருளும்," என்று ஜெபியுங்கள்; அவர் அற்புதமானவிதத்தில் உங்களுக்குப் போதிப்பார்.
"நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" (ஏசாயா 30:21) என்று வேதம் கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, தேவனுடைய பாதத்தில் காத்திருப்பது அருமையான அனுபவமாகும். நீங்கள் முழங்காற்படியிட்டு அவரை தேடும்போது, ஆண்டவர், உங்களைக் காண்பதற்கு அதிக மகிழ்ச்சியோடு வருவார்; உங்களுக்கு உதவுவார்; உங்களோடு பேசுவார். "கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு" (சங்கீதம் 37:7) என்று தாவீது எழுதுகிறான். அதே சங்கீதத்தில், "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் 37:5) என்றும் அவன் கூறுகிறான். உலகில் அனுதினமும் நாம் உபத்திரவங்களையும் சோதனைகளையும் சந்திக்கிறோம். என்ன செய்வது? நமக்கான போராட்டங்களை எப்படி மேற்கொள்வது? என்று நாம் கவலைப்படுகிறோம். தேவ பிள்ளையே, நீங்கள் கலங்கவேண்டிய அவசியம் இல்லை. முழங்காற்படியிட்டு, ஆண்டவரை நோக்கிப் பார்த்து, உங்கள் தேவைகளை அவரிடம் கூறுங்கள். "என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை" (சங்கீதம் 62:5,6) என்று தாவீது அறிவிக்கிறான்.
ஆகவே, அன்பானவர்களே, எதைக் குறித்தும் கலங்காதிருங்கள். பிரச்னை எவ்வளவு பெரிதாக தோன்றினாலும், ஆண்டவருக்கு அது சிறிய காரியமாகும். நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவரையே பற்றிக்கொள்ளுங்கள்; அது போதும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நன்றி நிறைந்த இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். எனக்குப் போதித்து நான் நடக்கவேண்டிய வழியை காண்பிப்பதாக வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ஞானத்தையும் வழிகாட்டுதலையும் நாடி உம்முடைய பாதத்தில் பொறுமையோடு காத்திருக்க எனக்குப் போதித்தருளும். உபத்திரவங்களும் சோதனைகளும் எழும்பும்போது, உம்மையே முழுவதுமாக நம்புவதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை நேர்த்தியான பாதையில் நடத்தும். உம்முடைய சத்தத்தை என் செவிகள் கவனிப்பதாக. நான் பயமின்றி உம்முடைய சமுகத்தில் இளைப்பாறும்படி என்னுடைய விசுவாசத்தை பெலப்படுத்தும். நீர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவீர் என்று அறிந்து, என் வழிகளை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னுடைய பிரச்னைகள் எவ்வளவு பெரியவையாக காணப்பட்டாலும், அவை அத்தனையையும் உம்மிடம் அர்ப்பணிக்கிறேன். நீரே எனக்கு போதுமானவர் என்பதை அறிந்து உம்மையே பற்றிக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.