அன்பானவர்களே, இன்றைக்கு உங்களோடு தேவனுடைய வார்த்தையை பகிர்ந்துகொள்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய வாக்குத்தத்தம் தேனினும் மதுரமானது. "உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்" (உபாகமம் 28:1) என்ற வாக்குத்தத்தத்தை இன்றைக்கு மனதில் பதித்துக்கொள்வோம். எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! "சகல ஜாதிகளிலும்" என்பது மிக உயர்ந்த நிலையைக் குறிக்கிறது.

தேவன், யாருக்கு இந்த வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார்? தேவனாகிய கர்த்தருக்கு பூரணமாக கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளைக் கருத்தாய்க் கைக்கொள்கிறவர்களுக்கு அவர் இந்த வாக்குத்தத்தத்தை  கொடுக்கிறார். இதையே இந்த வசனத்தின் முதற்பாகத்தில் காண்கிறோம். ஆண்டவருடன் இசைந்திருக்கிற இருதயம் எப்போதும், "ஆண்டவரே, நான் சரியான காரியத்தை செய்துகொண்டிருக்கிறேனா? ஆண்டவரே, நான் உமக்குப் பிரியமாய் நடந்துகொள்கிறேனா? நான் இதை தெரிந்துகொண்டு செய்வது உமது சித்தத்திற்கு உகந்ததா? நான் இந்த இடத்திற்குச் செல்வது உம்முடைய விருப்பத்திற்கு ஏற்றதா? என்னுடைய குடும்பத்தினரை நான் இந்தவிதத்தில் பராமரிப்பதை நீர் விரும்புகிறீரா?" என்று கேட்கும். "நான் என்ன செய்யவேண்டும்?" என்று எப்போதும் ஆண்டவரிடம் கேளுங்கள். அப்படிப்பட்டவர்களை அவர் நேசிக்கிறார்.

பெற்றோரை நாம் கண்களினால் காண்பதாலும், அவர்களுக்கு பிரியமில்லாமல் போய்விடக்கூடாது என்ற பயத்தினாலும் அவர்களுக்குக் கீழ்ப்படிகிறோம். ஆனாலும், காணக்கூடாத தேவனை பின்பற்றுகிறவர்கள்மேல் அவர் அதிக பிரியமாய் இருப்பார். ஆகவே, அலுவலகரீதியான தீர்மானங்களை செய்யும்போது, தேவனுடைய வழிகாட்டுதலை நாடுவேன். சிலருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு, கூட்டங்களுக்குச் செல்வது தேவனுடைய சித்தத்திற்கு உகந்ததாக இருக்குமா என்றும், அலுவலக ஊழியர்கள் குறித்து எடுக்கும் முடிவுகள் தேவனுக்கு பிரியமாக இருக்குமா என்றும், என்னை நானே கேட்டுக்கொள்வேன். தேவனுடைய அனுமதியின்பேரில் அவருடைய ஆசீர்வாதம் வருவதால், எந்த காரியத்திலும் அவருடைய அனுமதியை தேடுவது முக்கியம் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆகவே, எதையும் செய்வதற்கு முன்னர், எப்போதும் தேவனுடைய வழிகாட்டுதலை நாம் தேடவேண்டும்.

ஆண்டவரோடு இசைந்திருக்கும் இருதயம் கொண்டவர், பூமியிலுள்ள சகல மக்களைப் பார்க்கிலும் உயரத்தில் வைக்கப்படுவார். அதிபர் அல்லது பிரதம அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளில் அமர்வதை அல்ல, பூமியிலுள்ள எல்லா மக்களுக்கும் மேலான கனத்தை பெறுவதையே இது குறிக்கிறது. உங்களுக்குள் என்ன இருக்கிறது என்று தேடிக்கொண்டு அனைவரும் வருவார்கள். இன்றைக்கு, இந்த ஆச்சரியமான வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொள்வோம். தேவன்தாமே உங்களை உயரமாய் உயர்த்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய வசனத்தின் மூலம் என்னோடு பேசுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஆசீர்வாதம் என் வாழ்க்கையில் வரவேண்டுமென்று கேட்கிறேன். பூமியிலுள்ள சகல மக்களைப் பார்க்கிலும் சிறந்த கனத்தினால் என்னை அலங்கரிக்கப்பதாக நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள தகுதியான பாத்திரமாக நீர் என்னை வனைந்திடவேண்டுமென்று ஜெபிக்கிறேன். உம்மோடு இசைந்து, உம்முடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, உம்முடைய கண்களுக்கு ஏற்றவையாய் இருப்பவற்றை மாத்திரமே செய்யக்கூடிய இருதயத்தை எனக்கு தந்தருளும். உம்முடைய வல்லமையுள்ள கரம் என்னை வர்த்திக்கப்பண்ணட்டும். ஆண்டவரே, என்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ணும். நான் எப்போதும் உமக்குக் கீழ்ப்படிந்து உம்மைப் பின்பற்றுகிற உம்முடைய பிள்ளையாக இருக்கிறேன். என்னை உயர்த்தும்படி, ஆசீர்வதிக்கும் உம்முடைய கரம் என் வாழ்வில் செயல்படுவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.