அன்பானவர்களே, இன்றைக்கு, "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது" (யோவான் 6:63) என்ற வசனத்தை தியானிப்போம்.
அவரது மாம்சத்தை புசித்து, அவரது இரத்தத்தை பானம்பண்ணுகிறது குறித்து போதித்தபோது, இயேசு இவ்வாறு கூறுகிறார். அவருடைய சீஷரில் அநேகர் இதைப் புரிந்துகொள்ள திணறினார்கள். "இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்" (யோவான் 6:60) என்று அவர்கள் கூறினார்கள். "மாம்சம் ஒன்றுக்கும் உதவாது" என்பதன் அர்த்தம், மனுஷர்கள் பாவத்தில் பிறக்கிறபடியினால், நம்மால் சுயமாக நித்தியஜீவனை அடையமுடியாது என்பதே ஆகும். நமக்குள் வாசம்பண்ணுகிற ஆவியானவர் மூலமாகவே நம்மால் மெய்யான, நித்தியஜீவனை அனுபவிக்க முடியும். தேவனுடனான இந்த வாழ்க்கை மரணத்திற்கு பிறகும் தொடர்கிறது. ஆகவேதான், "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோமர் 8:6) என்று வேதம் கூறுகிறது. நமக்குள் வாசம்பண்ணும் தேவ ஆவியானவர் மூலமாக மாத்திரமே இவ்வுலகில் நம்மால் இரட்சிப்பையும் சமாதானத்தையும் கண்டுகொள்ள முடியும்.
பவுல், மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று நினைவுப்படுத்துகிறான் (பிலிப்பியர் 3:3). தேவனுடைய வார்த்தையையும் அவருடைய ஆவியையும் பற்றிக்கொண்டால், "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே" (யோவான் 6:68) என்று பேதுரு சொல்வதுபோல, அவை நம்மை வழிநடத்தும். "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே" (மத்தேயு 4:4) என்று இயேசு இந்த சத்தியத்தை வலியுறுத்துகிறார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் ஜீவனை தருகிறவையாய் இருக்கின்றன. ஆகவேதான், வேதம், "இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது" (2 பேதுரு 1:4) என்று கூறுகிறது. தேவனுடைய வார்த்தையின் மூலம் நாம் இந்த உலகத்தின் அக்கிரமத்திற்கு தப்பி, அவரைப்போல மாறுகிறோம். ஆண்டவருடைய வார்த்தை நமக்கு ஜீவனை தருகிறது; அது நம்மை பரிசுத்தப்படுத்தி, இவ்வுலகின் பாவ இச்சைகளுக்கு எதிர்த்து நிற்கும்படி செய்கிறது. இன்றும் ஆண்டவருடைய வார்த்தை உங்களை ஜீவனால் நிரப்புவதாக. ஆண்டவர்தாமே அனுதினமும் உங்களுடன் பேசி, வாழ்வதற்கு தேவையான ஞானத்தையும் புத்தியையும் அருளுவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கிற உம்முடைய வார்த்தைகளை எனக்கு தந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய மாம்சத்தினால் எந்தப் பலனும் இல்லை என்றும், உம்முடைய ஆவியின் மூலமாகவே நான் ஜீவனையும் சமாதானத்தையும் கண்டுகொள்ள முடியும் என்றும் நாள்தோறும் எனக்கு நினைவுப்படுத்தும். பாவம் தொடமுடியாதபடி வாழவும், உம்முடைய கிருபையை அனுபவிக்கவும் தக்கதாக உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வாசம்பண்ணவேண்டும் என்று நாடுகிறேன். சுயத்தை நம்பாமல், உம்மேல் மாத்திரமே நம்பிக்கை வைத்து, உம்முடைய வார்த்தையையும் சத்தியத்தையும் பற்றிக்கொள்ள எனக்கு உதவும். உம்முடைய தெய்வீக சுபாவத்தை பகிர்ந்துகொள்ளத்தக்கதாக நான் தேறும்படி உம்முடைய ஜீவனை தரும் வாக்குத்தத்தங்கள் என்னை மறுரூபப்படுத்துவதாக. என்னை உம்முடைய இருதயத்தின் அருகில் சேர்த்து, இவ்வுலகின் அக்கிரமங்களுக்கு என்னை விலக்கிக் காத்துக்கொள்ளும். உம்முடைய சமாதானத்திலும் பெலத்திலும் ஞானத்திலும் என்னை நடத்தி, அனுதினமும் உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிறைத்தருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.