எனக்கு அருமையானவர்களே, இந்த நாளிலே ஆசீர்வாதமான ஒரு வசனம், சங்கீதம் 116:2. "அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்" (சங்கீதம் 116:2).

"கர்த்தர் என் சத்தத்தையும், என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்" என்று தாவீது சொல்லுகிறான் (சங்கீதம் 116:1). ஆம், ஆண்டவர் நமக்கு பதில் கொடுக்கிறதினால் மாத்திரம் அவரை நாம் நேசிப்பதில்லை. நாம் அவரை நேசிப்பதற்கு முன்பதாகவே அவர் நம்மை நேசிக்கிறார். இதைத்தான், 1 யோவான் 4:19-ல் அவருடைய அன்பு மகா பெரியது என்று பார்க்கிறோம். ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15:13) என்று வேதம் கூறுகிறது. ஆம், அவர் நமக்காக தமது உயிரையே கொடுத்திருக்கிறார். அந்த ஆண்டவரை நாம் எவ்வளவாய் அன்புகூர வேண்டும். கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன். அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் (சங்கீதம் 34:1) என்று சொல்லுகிறான்.

ஆம் பிரியமானவர்களே, இப்படிப்பட்ட அன்பு நமக்கு உண்டா? சங்கீதம் 139:7-ல், உம்முடைய ஆவிக்கு மறைவாக நான் எங்கே போவேன்? உம்முடைய முகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? என்று தாவீது சொல்லுகிறான். ஆம், நாம் ஆண்டவரை விட்டு எங்கேயும் ஒழிந்துகொள்ள முடியாது. அவர் எப்பொழுதும் நம்மோடுகூடவே இருந்து நம்மை கவனித்துக்கொண்டே இருக்கிறார். அவர் நம்முடைய சத்தத்தைக் கேட்பதோடுகூட, நம்மை குழியிலிருந்து உயர்த்துகிற தேவனாயிருக்கிறார். 

வேதத்தில், ஒரு குருடன் ஆண்டவரை நோக்கி, "தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும்" என்று கூப்பிட்டான் (மாற்கு 10:48,49). அவனை சுற்றியிருந்தவர்கள் அவனை பேசாதபடி அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிகமாய் கூக்குரலிட்டு, "தாவீதின் குமாரனே எனக்கு இறங்கும்" என்று கதறினான். இயேசுவால் அவனை கடந்துசெல்ல முடியவில்லை. அவர் நின்று அவனை தம்மிடமாய் அழைத்து, அவனை சுகமாக்கினார். அவனுடைய கண்கள் திறந்தது. ஆம், நாமும் ஆண்டவரை நோக்கி கதறும்பொழுது, அவரால் நம்மை கடந்துசெல்லவே முடியாது. தமது முகத்தை அவரால் மறைக்கவே முடியாது. அவர் நின்று நம்முடைய சத்தத்தைக் கேட்டு, பதிலளிப்பார்.

ஜெபம்: 
அன்புள்ள ஆண்டவரே, இப்பொழுதும் நான் கண்ணீரோடு உம்மிடத்தில் வந்திருக்கிறேன். நீர் என்னுடைய கூக்குரலின் சத்தத்தைக் கேட்பீராக. உம்முடைய செவியை எனக்கு திறந்தருளும். என் கண்ணீரைக் காண்பீராக. இன்றைக்கு ஒரு அற்புதம் என் வாழ்க்கையில் நடக்கட்டும். இக்கட்டான சூழ்நிலையிலிருந்து என்னை விடுவியும். நான் கடன் வாங்கினவர்கள் என் வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள். என்னுடைய கடனை திரும்ப செலுத்தும்படியாக ஒரு அற்புதம், அதிசயம் என் வாழ்வில் நடக்கட்டும். என் கூக்குரலின் சத்தத்தைக் கேட்டு, பிசாசின் பிடியிலிருந்தும், பொல்லாத மனுஷர்களின் பிடியிலிருந்தும் என்னை விடுவிப்பீராக. இந்த வருடத்தில் நீர் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, ஆசீர்வாத மழை என் வாழ்வில் ஊற்றப்படட்டும். என்னுடைய கூக்குரலின் சத்தத்தைக் கேட்டு, நீர் என்னை ஆசீர்வதிக்கப் போவதற்காக உமக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.