அன்பானவர்களே, "கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது" (சங்கீதம் 34:22) என்ற வேத வசனத்தின்படி உங்களை ஆசீர்வதிப்பதற்கு ஆண்டவர் இயேசு காத்திருக்கிறார். கர்த்தருடைய ஊழியக்காரர், அவருடைய சித்தத்தை செய்கிறவர்கள்; அவருடைய இருதயத்திற்கு மிகவும் ஏற்றவர்கள். பாவம் எல்லோரையும் பாதிக்கக்கூடியது. ஆகவே, இந்த ஊழியர்களும் விழுந்துபோகக்கூடும் என்று வேதம் கூறுகிறது. மாம்சம், பாவம் இவற்றின் இச்சைகளால் இழுக்கப்பட்டு, இவர்கள் மரணத்தின் பாதைக்குச் சென்றுவிடக்கூடும். ஆனாலும், கர்த்தர் இரக்கம் மிகுந்தவராக இருக்கிறார் என்று வசனம் உறுதிப்படுத்துகிறது. அவர் நம்மேல் இரக்கமுள்ளவராக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது.
நீங்கள், "ஐயோ, நான் ஆண்டவருக்கு விரோதமான காரியத்தை செய்துவிட்டேன். பாவம் என்னை குருடாக்கி, அவரிடமிருந்து விலக்குவதற்கு அனுமதித்துவிட்டேன். நான் ஏன் இதற்குள் விழுந்தேன்? இப்போது எல்லாம் இருளாய் தோன்றுகிறது; என்னையே நான் அருவருக்கிறேன்," என்று கூறிக்கொண்டிருக்கலாம்.
அன்பானவர்களே, இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் நம்பிக்கையையும் மீட்பையும் தேடினால், தாம் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்வதாக கர்த்தர் சொல்லுகிறார். அவரிடத்தில் அடைக்கலம் தேடுகிற ஒருவர்மேலும் குற்றஞ்சுமராது. இது எவ்வளவு பெரிய வாக்குத்தத்தம். உங்கள் பாவத்திற்கான தண்டனை அறிவிக்கப்படும்போது, இயேசுவின் இரத்தம், "இல்லை. இந்தத் தண்டனை என்மேல் வரட்டும். பாவத்தின் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய பிள்ளை வேதனைப்படவேண்டாம்," என்று பரிந்துபேசும். இதற்காக நாம் இயேசுவுக்கு நன்றி செலுத்தவேண்டும். இயேசுவில் அடைக்கலம் கொண்டிருக்கிறவர்களாகிய நாம், அறிந்து ஆண்டவருக்கு விரோதமாக பாவஞ்செய்தால், இயேசுவின் இரத்தத்தை மிதித்துப்போடுவோம் என்று வேதம் எச்சரிக்கிறது.
ஆனாலும், பாவத்தின் மத்தியிலும் நம்மை மீட்கும்படி அவருடைய இரத்தம் இடைப்படுமளவிற்கு அவர் பூரண இரக்கம் கொண்டவராக இருக்கிறார். அப்படியே தான் பாவத்தில் விழுந்தபோது, "கர்த்தாவே, ஒருமுறை மாத்திரம் என்னை நினைத்தருளும்," என்று சிம்சோன் கதறினான். தம்மை நோக்கிக் கூப்பிடுறவர்களுக்கும், தம்மில் அடைக்கலம் தேடுகிறவர்களுக்கு கர்த்தர் இரக்கம் காண்பிக்கிறார். உங்கள்மேல் குற்றஞ்சுமராது. அவர் பாவ வழியிலிருந்து உங்களை திருப்பி, தம்முடைய ஜீவனால் நிரப்புவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, நீர் கொடுத்த வாக்குத்தத்தத்திற்காக நன்றியுடன் உம்முன்னே வருகிறேன். நான் உம்மை மறைவிடமாகக் கொண்டிருப்பதால் என்மேல் குற்றஞ்சுமராது என்று உறுதியளித்து, எனக்கு அடைக்கலமாக விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் விழுந்துபோனேன் என்றும், பாவம் என்னை அழிவுக்குள்ளாக வழிநடத்த அனுமதித்துவிட்டேன் என்றும் அறிக்கையிடுகிறேன். என்னுடைய செய்கைகளின் விளைவையும், அவற்றால் என் வாழ்வினுள் இருள் வந்துவிட்டதையும் உணர்கிறேன். ஆனாலும், நீர் என்போதும் என்னை மன்னிக்கவும், சீர்ப்படுத்தவும் ஆயத்தமாயிருக்கிறீர் என்று அறிந்து, உம்முடைய இரக்கத்தையே பற்றிக்கொள்கிறேன். ஆண்டவரே, என்னுடைய பாவங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னித்தருளவேண்டுமென்றும், பாவத்திலிருந்து விலக எனக்கு பெலன் தரவேண்டுமென்றும் ஜெபிக்கிறேன். உம்முடைய இரத்தம் எனக்காக பரிந்துபேசுவதற்காகவும், எனக்கான தண்டனையை உம்மேல் ஏற்றுக்கொள்வதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பெரிதான உம் அன்புக்காகவும் தியாகத்துக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். சிம்சோனுக்கு செய்ததுபோல, என்னையும் நினைவுகூர்ந்து எனக்கு இரக்கம் காண்பித்தருளும். என் வாழ்க்கையை மறுரூபமாக்கி, உம்முடைய வெளிச்சத்தினால் என்னை நிரப்பி, மறுபடியும் உம்முடைய பாதைக்கு வழிநடத்தும். என்மேல் குற்றஞ்சுமராது என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்பி, உம்மை அடைக்கலமாக்கிக்கொள்கிறேன். உம்முடைய நித்திய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.