எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக" (ரூத் 2:12) என்ற வசனத்தை தியானிப்போம்.

ரூத், மோவாபிய பெண். அவள் மோவாபியரின் வழக்கத்தின்படி, மோவாபிய கடவுளை வணங்குகிறவளாக வளர்க்கப்பட்டிருந்தாள். ஆனாலும், அவள் இஸ்ரவேல் குடும்பத்தில் திருமணம் செய்த பிறகு, விசுவாசத்தில் சிறந்த பெண்மணியாகிய தன் மாமியார் நகோமியை சந்தித்தாள். நகோமி, தேவனுடைய வழிகளில் நடக்கும் தேவ மனுஷியாய் இருந்தாள். அவள் தன் மருமகள்களை நேசித்தாள். ரூத், நகோமியின் அன்பினால் ஈர்க்கப்பட்டாள். நகோமியின் விசுவாசத்தாலும் பக்தியாலும் ரூத்தும் இஸ்ரவேலின் தேவனை பின்பற்றத் தொடங்கினாள். அந்த சமயத்தில் அவர்கள் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தனர். சாப்பிடுவதற்கும் எதுவுமில்லாத நிலையில் கொடிய வறுமையில் இருந்தனர். தங்கள் போராட்டங்களின் நடுவிலும் ரூத், கர்த்தரை உண்மையாய் தேடி, நகோமியுடன் விசுவாசத்தில் உறுதியாக நின்றாள். கர்த்தர், அவள் இருதயத்தைப் பார்த்து அவள்மேல் பிரியம் கொண்டார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அவள் அடைக்கலமாய் வந்தாள் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ரூத் 2:12).

அன்பானவர்களே, உங்களைக் குறித்து என்ன? நீங்கள் இஸ்ரவேலின் தேவனை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்கள் இரட்சகராக இருக்கிறாரா? ரூத், மோவாபிய பெண்ணாக இருந்தாலும், கர்த்தரை முழு மனதுடன் தேடினாள்; அவளுடைய விசுவாசத்தினால் கர்த்தர் அவரை அளவில்லாமல் ஆசீர்வதித்தார். தேவன், வறுமையிலிருந்து அவளை தூக்கியெடுத்து, செல்வந்தனான போவாஸுக்கு மனைவியாக்கினார். ஒன்றுமில்லாத நிலையிலிருந்த அவளுக்கு எல்லாமும் கொடுக்கப்பட்டது. அவள் வாழ்க்கை மறுரூபமாக்கப்பட்டது. இன்று நீங்களும் வெறுமையான, எல்லாவற்றையும் இழந்த, ஆசீர்வாதமற்ற நிலையில் இருப்பதாக நினைக்கலாம். நீங்கள், "என்னிடம் சமாதானமோ, சந்தோஷமோ, நம்பிக்கையோ இல்லை," என்று புலம்பலாம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் அடைக்கலமாக வாருங்கள். அவர், "என்னிடம் வா;நான் உன்னை ஆசீர்வதிப்பேன்," என்று அன்புடன் அழைக்கிறார். ரூத்தை ஆசீர்வதித்த அதே தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார். ஒன்றுமில்லாமல் இருக்கும் உங்களுக்கு அவரால் எல்லாவற்றையும் கொடுக்க இயலும்.
"கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதிமொழிகள் 10:22) என்று வேதத்தில் வாசிக்கிறோம். அன்பானவர்களே, இந்த இஸ்ரவேலின் தேவனை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அவர் உங்களுக்காகவே தம்முடைய ஜீவனை சிலுவையில் கொடுத்தார். இன்றைக்கு சிலுவையண்டைக்கு வாருங்கள். இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் உங்களுக்கு புதிய இருதயத்தையும் புதிய ஜீவனையும் கொடுப்பார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நன்றியறிதலுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். அடைக்கலம் தருகின்ற, அன்பை உணர்த்துகிற உம்முடைய செட்டைகளின் கீழ் வரும்படி என்னை அழைத்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் ரூத்தை ஆசீர்வதித்ததுபோல, என் வாழ்க்கையையும் மாற்றுவீர் என்று நம்புகிறேன். நான் வெறுமையாய் இருப்பதாக நினைக்கும்போது, நீரே எனக்கு எல்லாவற்றையும் தருகிறவராயிருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். ரூத்தைப்போல நான் உம்மை உண்மையுடன் தேடுவதற்கு உதவி செய்யும். ஆண்டவரே, என்னுடைய கவலைகளையும் பாரங்களையும் உம்முடைய வல்லமையான கரங்களில் ஒப்படைக்கிறேன். உம்முடைய ஆசீர்வாதங்கள் என் வாழ்வில் பாய்ந்து வந்து, சந்தோஷத்தையும் பரிபூரணத்தையும் அளிக்கட்டும். உம்முடைய சிலுவைக்காக, அன்புக்காக, நித்திய கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசு எனக்கு புதுஜீவனை தருவார் என்று நம்பி, அவரை என்னுடைய ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.