அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரின் சமுகத்தில் உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். தேவன்தாமே தம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையால் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு ஆண்டவர், "உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்" (சங்கீதம் 18:29)என்ற அருமையான வசனத்தை நமக்கு வாக்குத்தத்தமாக கொடுத்திருக்கிறார். "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து... எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" (ஏசாயா 40:31)என்றும், "சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது" (சங்கீதம் 34:10)என்றும் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆம், அன்பானவர்களே, தேவனால் எல்லாம் கூடும். இந்த சத்தியத்தைக் குறித்து அருமையான அனுபவம் எனக்கு இருக்கிறது. என் கணவர் இருந்த நாட்களில், நாங்கள் இணைந்து ஊழியம் செய்தோம். அவர் பல நாட்கள் பிரசங்கம் செய்வார்; நான் அவருடன் சென்று, என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். அவர் மறைந்த பிறகு, ஆஸ்திரேலியாவில் சிட்னியிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. 23 நாட்களுக்குள் நான் 17 இடங்களில் செய்தியளிக்க வேண்டியதிருந்தது. இதுபோன்று இதற்கு முன்பு நான் பிரசங்கித்திராததினால் கலக்கமுற்றேன்.
அப்போது ஒரு குடும்பத்தினர், ஜெபத்தில் நேரம் செலவழிக்கும்படி எனக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுத்தனர். உபவாசித்து, தேவ பிரசன்னத்தை தேடும்படி மூன்று நாட்களை ஒதுக்கினேன். அந்த வேளையில் ஆண்டவர் என்னை தம்முடைய வார்த்தையினால் பெலப்படுத்தி, தேவையான அனைத்து செய்திகளையும் அருளிச்செய்தார். நான் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச் சென்றபோது, போதகர், ஆண்டவர் எனக்குக் கொடுத்திருந்த அதே வசனத்தை பிரசங்கித்தார். தேவனாலே நாம் எந்தக் காரியத்தையும் செய்ய இயலும். நான் தேவ வசனத்தினால் பெலப்படுத்தப்பட்டேன். பரிசுத்த ஆவியின் பெலத்தோடு சென்றேன்; தேவன் அற்புதங்களைச் செய்தார். அநேகர் விடுவிக்கப்பட்டனர்; அநேகர் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டனர். என் வாழ்வில் இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இயேசு என்னுடன் இருந்ததினால், எல்லாவற்றையும் அவருடைய நாம மகிமைக்கென்று நேர்த்தியாக என்னால் செய்ய முடிந்தது.
ஆம், அன்பானவர்களே, அதே ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். அவரை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்து முடிக்கும்படி அவர் உங்களைப் பெலப்படுத்துவார். தேவனாலே எல்லாம் கூடும். இப்போது தேவ சமுகத்தில் முறையிடுவோம். இதுவரைக்கும் உங்களால் செய்ய இயலாதவற்றை, நேர்த்தியாக நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நன்றி நிறைந்த இருதயத்துடன், உம்மாலே எல்லாம் கூடும் என்ற விசுவாசத்துடன் உம்மிடம் வருகிறேன். எனக்கு முன்னிருக்கும் எல்லா இக்கட்டுகளையும் நான் மேற்கொள்வதற்கு உதவுவீர் என்று நம்பி உம்மைப் பற்றிக்கொள்கிறேன். ஆண்டவரே, எனக்குப் புதுப்பெலன் தந்தருளும்; உம்மை முழு இருதயத்துடன் தேடுவதற்கு எனக்கு உதவும். தகப்பனே, என் பயங்கள், பெலவீனங்கள், இயலாமைகள் எல்லாவற்றையும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கையைக் குறித்து நீர் நியமித்திருக்கிற காரியங்கள் எல்லாவற்றையும் செய்து முடிப்பதற்கு பரிசுத்த ஆவியின் மூலம் என்னை பெலப்படுத்தும். என்னுடைய பெலவீனத்திலே உம்முடைய தெய்வீக பெலன் பூரணமாய் விளங்குவதாக. என்னோடு இருப்பதற்காகவும், என்னை வழிநடத்துவதற்காகவும், எல்லா காரியங்களையும் செய்து முடிப்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.