அன்பானவர்களே, "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்" (சங்கீதம் 63:3) என்ற இன்றைக்கான வசனத்தை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தேவன்தாமே தமது கிருபையை உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

புதிதாய் மணமாகும் தம்பதியர், ஒருவர்பேரில் இன்னொருவர் அதிகமான அன்பு கொண்டு, "அன்பே, உன்னை நேசிப்பதைக் காட்டிலும் சிறந்தது உலகில் எதுவும் இல்லை. நாம் ஒருவரையொருவர் நேசித்து, ஒன்றாய் வாழ்வதே எனக்கு பிரியம். வேறு எதுவும் எனக்கு தேவையில்லை," என்று கூறக்கூடும். இப்படி அவர்கள் அன்பில் மூழ்கியிருப்பார்கள். அந்த அன்பு நெடுங்காலம் நீடிக்கும் என்று நம்புவோம். எல்லா தம்பதியர் வாழ்க்கையும் எவ்வளவு நாள் இப்படி நீடிக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால், இயேசுவுடன் நம் வாழ்வு அனுதினமும் இவ்வாறு, அவர்பேரில் அன்புகூருவதும், அவரிடமிருந்து அன்பை பெற்றுக்கொள்வதுமாக அமைய வேண்டும். நாம், "ஆண்டவரே, இன்றைக்கு என்னை நேசித்தருளும். உம்முடைய அன்பு என்னை சூழ்ந்துகொள்ளட்டும். அந்த அன்பினால் என் இருதயம் நிரம்பி வழியட்டும்," என்று கூறவேண்டும். நாம் தேவனை துதித்து, அவரை ஸ்தோத்திரிக்கும்போது அப்படி நடக்கும். அவருடைய அன்பு நம் உள்ளங்களுக்குள் வந்து, பூரணமாய் நிரப்புகிறது.

இயேசு, இவ்வாறே அனுதினமும் வாழ்ந்தார். தாம் எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்னர், தேவ அன்பினால் சூழ்ந்துகொள்ளப்படும்படி, காலையில் முதலாவது பரம தகப்பனின் அன்பை தேடினார். பரிபூரண அன்பில் அவர் அனுதினமும் வாழ்ந்தார். எப்போதும் நிலைத்திருக்கும் கிருபையானது ஜீவனைக் காட்டிலும் மேலானது என்று வசனம் கூறுகிறது. ஜனங்கள் இயேசுவை கேள்வி கேட்டபோதும், அவரது உள்ளத்தை உடைக்க முயற்சித்தபோதும், மிரட்டல்களும் புயல்களும் வந்தபோதும், அவரை அசைக்க முடியவில்லை. ஏனென்றால், தேவ அன்பு அவரை சூழ்ந்திருந்தது. ஒருவர், தெய்வீக அன்பின் மூழ்கி வாழ்வது எப்படியிருக்கும் என்று அவர் காண்பித்திருக்கிறார். தேவ அன்பினால் சூழப்பட்டவர்களாக வாழும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதைப் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, ஜீவனைப் பார்க்கிலும் மேலான உம்முடைய கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பிதாவின் அன்பில் நீர் நிலைத்திருப்பதுபோல, இன்று என்னையும் உம் அன்பு சூழ்ந்துகொள்ளும்படி செய்யும். இந்த உலகில் நான் அசைக்கப்படாத முடியாத நிலையில் இருக்கும்படி என் இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பியருளும். வாழ்வில் புயல் எழும்பும்போது, உம்முடைய அன்பு எனக்கு ஆத்தும நங்கூரமாக இருக்க உதவும். ஆண்டவரே, பிதாவை தேடியதுபோலவே நான் முதலாவது உம்முடைய தேடியே ஒவ்வொரு நாளையும் தொடங்க விரும்புகிறேன். என் ஆத்துமாவில் நன்றியுணர்வும், துதியும், ஸ்தோத்திரமும் நிரம்பி வழியும்படி செய்யும். என் காலடிகளையும் எடுக்கும் தீர்மானங்களையும் உம்முடைய அன்பே வழிநடத்தட்டும். நான் உபத்திரவங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், மற்றவர்களுக்கு உம் அன்பினை காட்டுவதற்கு உதவி செய்யும். எப்போதும் என்றென்றைக்கும் எவ்வித நிபந்தனையுமில்லாமல் உம்மை ஸ்தோத்திரித்து ஜெபிக்கிறேன், ஆமென்.