அன்பானவர்களே, "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவான் 5:4) என்ற வல்லமை நிறைந்த சத்தியத்தை இன்றைக்கு தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, தேவன் உங்களுக்குள் ஜீவிக்கிறபடியினால், உலகத்தை ஜெயிப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார். உலகத்திலிருந்து எழும்புகிற எதையும் அவருடைய பெலத்தைக் கொண்டு உங்களால் ஜெயிக்க முடியும்.

ஒருவேளை, இன்றைக்கு அநேக சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். அவை வாழ்க்கையின் பிரச்னைகளாக இருக்கலாம்; கெட்ட பழக்கங்கள் அல்லது எதிர்மறை எண்ணங்களுக்குள் உங்களைக் தள்ளக்கூடிய சோதனைகளாக இருக்கலாம். லஞ்சம் வாங்க தூண்டும் சோதனையாக, பதவி உயரும்படி வேலையில் நேர்மையை விட்டுவிட அழுத்துகிறதாக, கணப்பொழுது இன்பம் அல்லது நிம்மதிக்காக பாவத்தில் ஈடுபட தூண்டுகிறதாக அந்த சோதனை இருக்கலாம். மன அழுத்தத்தை மறப்பதற்கு பாவ பழக்கத்திற்குள் விழும் தருணத்தில் நீங்கள் இருக்கலாம்; சுற்றியிருப்பவர்கள் மெச்சிக்கொள்வதற்காக நற்பழக்கங்களில் சமரசம் செய்யும் நிலையாக இருக்கலாம். "யாரும் பார்க்கவில்லை. இந்தச் சிறிய காரியத்தை நான் செய்தால் யாருக்குத் தெரியும்?" என்று அல்லது "நான் யாரையும் புண்படுத்தவில்லை; ஆகவே, இதை நான் செய்தால் என்ன?" என்று நீங்கள் நினைக்கலாம்.

எனக்கு அன்பானவர்களே, வேதாகமத்தில் யோபுவின் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். யோபு, செல்வந்தனும் ஜெயம்பெற்றவனுமான மனுஷனாயிருந்தான். ஆனாலும், ஒரு கட்டத்தில் தன் வெற்றியை, உடல் நலத்தை, குடும்பத்தையும் இழந்துபோகும் நேரம் வந்தது. "நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" (யோபு 2:9) என்று அவன் மனைவியும் கூறினாள் என்று பார்க்கிறோம். அவன் எல்லாவற்றையும் விட்டுவிடக்கூடிய அளவுக்கு பாரமான சூழ்நிலையாக அது இருந்தது. ஆனாலும் யோபு உறுதியாய் இருந்தான். தன் சூழ்நிலைக்கு தேவன் நியாயம் செய்வார் என்று அவன் நம்பினான். அவ்வாறே, தேவன் யோபு இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாக திரும்ப கொடுத்தார் என்று வாசிக்கிறோம் (யோபு 42:10).

ஆம், அன்பானவர்களே, இயேசுதாமே, "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) என்று கூறுகிறார். இனிமையும் கவர்ச்சியுமான சோதனைகள் வரும்போது, தேவன் நம்மை உண்மை நிறைந்த பரிசுத்த வாழ்க்கை நடத்த அழைத்திருக்கிறார் என்பதை மறந்துபோகக்கூடாது. யோபுவின் உண்மைக்காக அவனுக்கு பலனளித்ததுபோல, நிச்சயமாக உங்களுக்கும் அவர் பலன் தருவார். உலகத்தை ஜெயித்தவர் உங்களுக்குள் வாசம்பண்ணுகிறார்; ஆகவே, சந்தோஷமாயிருங்கள். அவரால் நீங்களும் இந்த எல்லா சவால்களையும் மேற்கொண்டு, ஜெயம் நிறைந்த, வெற்றிகரமான, ஆசீர்வாதமான வாழ்க்கையை நடத்த முடியும். ஜெயங்கொண்ட இயேசுவை உங்களுக்குள் வந்து வாசம்பண்ணும்படியும், உலகத்தை ஜெயிக்க உங்களுக்கு உதவும்படியும் அழைப்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் உலகத்தை ஜெயித்திருக்கிறீர் என்று அறிக்கையிட்டு உம்மிடம் வருகிறேன். வாழ்வில் எதிர்ப்படும் எல்லா சோதனைகளையும் சவால்களையும் மேற்கொள்ள எனக்கு உதவும். உலகின் பாரம் என்னை அழுத்தும்போது, நீரே என் பெலனாயிருக்கிறீர் என்பதை எனக்கு நினைவுப்படுத்தும். யாரும் பார்க்காத நிலையிலும் நான் உண்மையிலிருந்து வழுவிவிடாமல் காத்துக்கொள்ளும். பாவத்தின் இச்சைக்கு என் இருதயத்தை விலக்கி காத்து, என்னை நீதியின் பாதையில் நடத்தும். யோபுவை போல ஏற்ற நேரத்தில் என் உண்மைக்கு பலன் தருவீர் என்று நம்புகிறேன்.  நீர் என்னோடிருந்து, ஜெய வாழ்வு நடத்துவதற்கு என்னை பெலப்படுத்துகிறீர் என்பதை அறிவதன் மூலம் கிடைக்கும் சமாதானத்தினால் என்னை நிறைத்தருளும். ஜெயம் பெற்றவரும் வல்லமை நிறைந்தவருமான இயேசு எனக்குள் வந்து என் இருதயத்தில் வாசம்பண்ணி அனுதினமும் என்னை நடத்தவேண்டுமென்று ஜெபிக்கிறேன், ஆமென்.