அன்பானவர்களே, இன்றைக்கு வேதத்திலிருந்து ஒரு நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய, பெலப்படுத்தக்கூடிய, "கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது" (சங்கீதம் 33:12) என்ற வசனத்தை தேவன் இன்றைக்கு தருகிறார்.
நான் அடிக்கடி, "ஆண்டவரே, நீர் என்னோடு இல்லையென்றால் என் நிலை என்ன? நீர் என்னை அழைத்திருக்காவிட்டால், என்னுடைய தாத்தா, பாட்டியுடனும், பெற்றோருடனும் மாத்திரம் நீர் இருந்துவிட்டு, என்னை விட்டுவிட்டால் எனக்கு எந்தப் பெயரும், எந்த ஆஸ்தியும், எந்த நோக்கமும் இல்லாதிருந்திருக்கும். இந்த பெரிதான அழைப்பு இல்லாமல் நான் என்ன செய்திருக்க முடியும்? உம்முடைய கரங்களால் பயன்படுத்தப்படாவிட்டால், நான் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாதவனாகவே இருந்திருப்பேன்," என்று கூறுவதுண்டு. என் வாழ்க்கையில் தேவனுடைய அழைப்பு இருப்பதற்காக எப்போதும் அவருக்கு நன்றி செலுத்துவேன். அன்பானவர்களே, தேவன் உங்களை தெரிந்துகொண்டிருப்பதால் நீங்களும் பாக்கியவானாய், பாக்கியவதியாய் இருக்கிறீர்கள். "அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும்" என்று வாக்குத்தத்த வசனம் கூறுகிறது. தேவன் தமக்கென்று கொண்டிருக்கிற கூட்டத்தில் நீங்களும் இருக்கும்படி அவர் தெரிந்துகொண்டுள்ளார் என்பதே இதன் அர்த்தமாகும்.
பள்ளியில் உடற்பயிற்சி பாடவேளைகளில் ஆசிரியர்கள், இரண்டு பையன்களை தெரிந்தெடுத்து, "உங்களுக்கான அணியை பிரித்துக்கொள்ளுங்கள்," என்று கூறுவார்கள். நல்ல விளையாட்டு வீரர்களை அவர்கள் முதலில் தெரிந்தெடுப்பார்கள்; பலவீனமான ஆட்டக்காரர்களை பின்னால் தெரிந்தெடுக்கப்படும்படி விட்டு வைப்பார்கள். ஆனால் நான் தேவனை பார்த்தால், அவர் ராஜ வம்சத்தினரையோ, செல்வந்தர்களையோ, சாதனை படைத்தவர்களையோ தெரிந்தெடுக்கவில்லை. மாறாக, அவர் நம்மை தனித்தனியாக தெரிந்துகொண்டு, நம்மை பராக்கிரமசாலிகளாக மாற்றுவதற்கு விரும்புகிறார். அவருடைய சுதந்தரமாகிய நாம் பாதுகாக்கப்படும்படி அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்திருக்கிறார். நம்முடைய ஆத்துமாக்கள் சுகமாய் காக்கப்படும்படியும் நாம் அவருடைய சந்தோஷத்துடன் வாழ்ந்திருக்கவும் அவர் விரும்புகிறார். தேவனை தவிர வேறு யார் தங்களுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சுதந்தரத்துக்காக தங்கள் ஜீவனை பலியாகக் கொடுப்பார்கள்? அவர் நம்மை தெரிந்துகொண்டதுடன், தம்முடைய ஜீவனையும் நமக்காகக் கொடுத்தார். ஆகவேதான் வேதவசனம், "கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும்...பாக்கியமுள்ளது" என்று கூறுகிறது. நாம் அவரை ஸ்தோத்திரிப்போமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய சுதந்தரமாக இருப்பதற்கு நீர் என்னை தெரிந்துகொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் எப்போதும் உமக்குச் சொந்தமானவனா(ளா)க இருக்கிறேன்; என் வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆசீர்வாதமாக நீரே விளங்குகிறீர். ஜெயம்பெறக்கூடிய உம்முடைய பக்கத்தில் நான் இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன். என்னை இரட்சிக்கவும், என் பாதைகள் ஆசீர்வாதமாக விளங்கவும், என் முடிவு நல்லதாக அமையும்படியும், நான் நித்தியமாய் உம்மோடு வாழ்ந்திருக்கவும்படியாக நீர் உம்முடைய இரத்தத்தை சிலுவையில் சிந்தி, ஜீவனை கொடுத்திருக்கிறீர். நான் உம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட சுதந்தரமாக இருக்கிறபடியினால் என் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் எனக்காக எல்லா காரியங்களையும் நீர் பொறுப்பெடுத்துக்கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எனக்கு தந்திருக்கிற இந்த ஆச்சரியமான ஈவுக்காக எப்போதும் உமக்கு நன்றியுள்ளவனா(ளா)க இருக்க எனக்கு உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.