அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்" (ஏசாயா 65:14) என்று கூறுகிறது. திடன்கொள்ளுங்கள்! தேவன் உங்களை 'தமது ஊழியன்' என்று அழைக்கிறார். இயேசு அழைக்கிறார் பங்காளராக இருக்கும் நீங்கள், தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். உங்கள் பங்களிப்பின் மூலம், கோடிக்கணக்கான மக்களின் கண்ணீர் துடைக்கப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காணிக்கையும், தன்னார்வத்தோடு நீங்கள் ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கும் ஒவ்வொரு ஜெபமும் தேவனுடைய பார்வைக்கு பிரியமான பலியாக இருக்கிறது. ஆண்டவர் அதை அங்கீகரித்து, நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்களோ, அவர்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார். அன்பானவர்களே, அவர் நிச்சயமாகவே உங்களை ஞாபகத்தில் வைத்திருப்பார்.
"இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்" என்று இந்த வசனம் கூறுகிறது. "அவர் (கர்த்தர்) உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்" (செப்பனியா 3:17) என்றும் வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள், தாம் ஜனங்களுக்கு அற்புதங்களைச் செய்வதற்கு காரணமாக விளங்குகிறபடியினால் அவர் உங்கள்பேரில் களிகூருகிறார். நீங்களே ஊழியத்திற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக ஊடக தளங்கள், பொதுக்கூட்டங்கள், பத்திரிகை நடத்தப்படுவதற்கும், புத்தகங்கள், கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பப்படவும் உதவுகிறீர்கள். ஜனங்களுக்கு தனி ஜெபம்செய்யும்படி பல லட்சக்கணக்கானோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதற்கு உதவுகிறீர்கள். நீங்கள் காணிக்கை கொடுப்பதினாலும் எங்களோடு இணைந்து ஜெபிக்கிறதினாலும் ஆண்டவர் உங்கள்பேரில் களிகூருகிறார். அவர் உங்கள்பேரில் களிகூருவதால், உங்கள் இருதயம் சந்தோஷத்தால் நிரம்பி வழியும்; உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நீங்கள் உள்ளத்தில் ஆனந்தத்தோடு பாடுவீர்கள்.
ஊழியத்தின் நெடுங்கால பங்காளரான சகோதரி ஜெயசெல்வி அவர்கள் கணவர் அன்பழகன் ஆகியோரின் அருமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் மகள் பள்ளியில் தமிழ் வழியில் படித்தாள். கல்லூரிக்குச் சென்றபோது, பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டதால் அவற்றை புரிந்துகொள்ளவும், தேர்வுகளை எழுதவும் சிரமப்பட்டாள். பெற்றோருக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மகளை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள். இளம் பங்காளர்களுக்கு ஞானத்தை அருளுவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். இளம் பங்காளராக இணைந்த பிறகு, மகள் நம்பிக்கை பெற்று, தேர்வுகளை நல்ல முறையில் எழுதினாள். அவர்கள் மகன் நன்றாக படித்திருந்தாலும் வேலை கிடைக்கவே இல்லை. ஆகவே, அவர்கள் தங்கள் மகனையும் இளம் பங்காளராக இணைத்து தொடர்ந்து இயேசு அழைக்கிறார் ஊழியத்தை தாங்கும்படி செய்தனர். ஆண்டவர், மகனுக்கு அருமையான வேலைவாய்ப்பை கொடுத்து ஆசீர்வதித்தார்.
பிறகு, தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவேண்டும் என்று ஜெபித்தனர். ஆச்சரியவிதமாக, பிள்ளைகள் இருவருக்கும் சீக்கிரத்திலேயே திருமணம் முடிந்தது. பேரப் பிள்ளைகள் வேண்டுமே என்ற அக்கறையில், பேரப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன்னரே அவர்களை இளம் பங்காளர்களாக இணைத்தனர். ஆண்டவர், அவர்களுடைய மகன் மற்றும் மகள் இருவரின் திருமண வாழ்க்கையையும் ஆசீர்வதித்து, பிள்ளைகளை கொடுத்தார். இப்போது, பேரப்பிள்ளைகள் நன்றாக படித்து வருகிறார்கள். ஆண்டவரின் தயவும், ஆசீர்வாதமும் ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு கடத்தப்படுகிறது. அவர்கள் பிள்ளைகளும் இளம் பங்காளர் திட்டத்தை தாங்கி வருகிறார்கள். அவர்கள் இயேசுவை நீதியாய் பின்பற்றுகிறபடியினால், அவர்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிரம்பி வழிகிறது.
தேவன் உங்கள் குடும்பத்திற்கும் இப்படியே செய்வார். இயேசு அழைக்கிறார் பங்காளராக நீங்கள், ஜீவனுள்ள தேவனின் ஊழியராக விளங்குகிறீர்கள். தேவன் உங்கள் இருதயத்தில் சந்தோஷத்தை அருளுவார்.
ஜெபம்:
பரம தகப்பனே, என்னை "உம்முடைய ஊழியன்" என்று அழைக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் விளங்கும் இந்த உயர்வான அழைப்புக்காக நன்றி செலுத்துகிறேன். இந்த அழைப்புக்கு பாத்திரவானாக நடந்துகொள்ள எனக்கு உதவும். நீர் என்பேரில் சந்தோஷமாய் களிகூரும்படி என் வாயின் வார்த்தைகளும் என்னுடைய இருதயத்தின் தியானமும் உமக்கு பிரியமாய் இருப்பதாக. நான் செய்கிற எல்லா செயல்களையும், என்னுடைய பொருளாதாரத்தையும், குடும்ப வாழ்க்கையையும் ஆசீர்வதித்தருளும். உம்முடைய ஊழியத்திற்கும், உலகம் முழுவதும் சுவிசேஷம் செல்லும்படி உம்முடைய மக்களுக்கும் நான் அதிகமாய் கொடுக்கும்படி என் எல்லையை பெரிதாக்கும். ஆண்டவரே, என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணித்து, உம்முடைய வேலையை ஆதரிக்க என்னை ஒப்படைக்கும்போது, என் உள்ளத்திலும், குடும்பத்திலும் பெரிதான சந்தோஷத்தை நான் காண்பதற்கு நீர் உதவுவீர் என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய வெளிச்சம் இருளின்மீது பிரகாசிக்கவேண்டும் என்றும், நான் கெம்பீரமாய் பாடும்படி என் இருதயத்தை சந்தோஷத்தினால் நிறைக்கவேண்டுமென்றும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.