அன்பானவர்களே, "நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்" (சங்கீதம் 40:17) என்று தாவீது கூறுகிறான். இந்த வசனம் கூறுகிறவண்ணம், கர்த்தர் எங்களை நினைத்து, ஆசீர்வதிப்பாராக.

அன்பானவர்களே, நாம் அடிக்கடி, "நாங்கள் சிறுமையும் எளிமையுமானவர்கள்" என்று கூறுகிறோம். "சிறுமையும் எளிமையுமாய்" இருப்பது என்பதற்கு, தேவனும் அவரது ஆசீர்வாதங்களும் தேவைப்படும் நிலையில் நாம் இருக்கிறோம் என்பதே பொருள்.

"தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்" (சங்கீதம் 46:1-3,5) என்று தாவீது கூறுகிறான். காலைப்பொழுது வரும்போது நம்மைச் சுற்றி பல காரியங்கள் நிகழலாம். ஆனால், தேவன் எப்போதும் நம்முடன் இருக்கிறார். தாவீது, "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை," என்று கூறியிருக்கிறான். ஆகவே, நாம் சிறுமையும் எளிமையுமானவர்களாக இருப்பதாக எண்ணினாலும், ஆண்டவர் எப்போதும் நம்மையே நினைத்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார். நம்மைச் சுற்றி, புயலும் பிரச்னைகளும் காணப்படலாம். முழு உலகமுமே நம்மை மறந்திருக்கலாம்; ஆனாலும், ஆண்டவர் தம்முடைய ஜனங்கள்பேரில் நினைவாயிருக்கிறார். தாழ்மையானவர்களான தம் மக்கள்மேல் அவர் நினைவாயிருக்கிறார். நம் பக்கம் ஏதேனும் தவறு நடந்துவிட்டாலும், நாம் தேவனுக்கு முன்பு நம்மை தாழ்த்தி, அவருடைய பிரசன்னம் நம்மோடு இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம். அப்படிப்பட்ட தாழ்மையானவர்களைக் குறித்து அவர் நினைவாயிருக்கிறார்.

யோபுவின் வாழ்க்கையை பாருங்கள். அவன் செல்வந்தனாயிருந்தபோது, உலகம் அவனைக் குறித்து நினைத்துக்கொண்டிருந்தது; அவனை கனம்பண்ணியது. ஆனால் அவன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தபோது, அவனுடைய நெருங்கிய சிநேகிதர்களே அவன்மேல் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், யோபு இதைக் குறித்து கவலைப்படவில்லை. இந்த உபத்திரவங்களின் மத்தியிலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்ற திடநம்பிக்கை அவனுக்கு இருந்தபடியினால் அவன் மனமுடைந்துபோகவில்லை. "மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?" என்று அவன் கூறுகிறான் (யோபு 7:17,18). ஆண்டவர் நம்மை எப்படி நினைக்கிறார், பாருங்கள்! அவர் காலைதோறும், எல்லா தருணத்திலும் நம்மைக் குறித்து எண்ணுகிறார். ஆண்டவர் தன்னைக் குறித்து எல்லா தருணத்திலும் நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று யோபு திடமாக நம்பினபடியினால், ஆண்டவர் அவனுக்கு பலனளித்து, இரட்டிப்பாய் ஆசீர்வதித்தார். தான் இழந்த எல்லாவற்றையும் அவன் இரட்டிப்பாய் பெற்றுக்கொண்டான்.

"ஆண்டவர் என்னைக் குறித்து நினைப்பாரா?" என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். "ஆம்," என்பதே பதில். அன்பானவர்களே, தேவன் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார். நீங்கள் எங்கேயிருந்தாலும், நீங்கள் எதன் வழியாக கடந்து செல்கிறீர்கள் என்று தேவன் அறிவார். அவர் அதைப் பார்க்கிறார். கர்த்தரைக் குறித்து யாக்கோபும், "அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்" (ஆதியாகமம் 32:10) என்று கூறுகிறான். ஆம், உங்களை இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பதற்காக ஆண்டவர் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு, உங்கள் கையில் எதுவும் இல்லாததுபோல நீங்கள் உணரலாம். ஆனால், உங்களை இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கும்படி ஆண்டவர் உங்கள்மேல் நினைவாயிருக்கிறார். உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் அவருடைய நினைவுகள் உயர்ந்தவையாயிருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு வாழ்க்கையில் இரட்டிப்பான தேவ ஆசீர்வாதத்தை எதிர்பாருங்கள்.

ஜெபம்:
பரம தகப்பனே, என்னை இரட்டிப்பாய் ஆசீர்வதிப்பதற்காக உம்முடைய வல்லமையான கரம் என்மேல் வருவதாக. நான் சந்தித்த எல்லா உபத்திரவங்களுக்கும் வெட்கத்துக்கும் பதிலாக இரட்டிப்பான கனத்தை, இரட்டிப்பான புகழ்ச்சியை, இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கேட்கிறேன். நீர் சீர்ப்படுத்துகிற தேவனாயிருக்கிறீர். உம்மை நோக்கிப் பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று உம்முடைய வசனம் கூறுகிறது. ஆகவே, இன்று, என்னுடைய எல்லா வெட்கத்தையும் சாபத்தையும் எனக்கு ஆசீர்வாதமாக நீர் மாற்றவேண்டும் என்று ஜெபிக்கிறேன். உம்முடைய நன்மையை நான் இரட்டிப்பாய் அனுபவிக்க உதவி செய்யும். என்னை சுற்றிலுமிருப்பவர்கள், என் வாழ்வில் உம்முடைய மகத்துவமும் ஆசீர்வாதமும் கிரியை செய்வதை கண்டு, உம்மிடம் திரும்புவார்களாக. உம்முடைய ஆசீர்வாதங்களை என்மேல் பொழிந்தருளுவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.